முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த விஜய்.. மதுரையில் திரண்ட தவெக தொண்டர்களுக்கு முக்கிய கோரிக்கை
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய பிறகு முதல் முறையாக இன்று விஜய் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், நான் என்னுடைய ஜனநாயகன் பட வேலைக்காக செல்கிறேன். என் வாகனத்தை யாரும் பின் தொடர வேண்டாம். இன்னொரு சந்தர்ப்பத்தில் உங்களை சந்திக்கிறேன் என்று சென்னை விமான நிலையத்தில் விஜய் தவெக தொண்டர்களுக்கு கோரிக்கை ஒன்றை அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய பிறகு முதல் முறையாக இன்று விஜய் செய்தியாளர்களை சந்தித்தார். மதுரை செல்ல இருந்த விஜய், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உங்க எல்லாரையும் பார்த்துட்டு..
மதுரை ஏர்போட்டில் என் தோழர்கள், தோழிகள் என எல்லாரும் என்னை பார்ப்பதற்காக காத்திருக்கிறார்கள். அவங்க எல்லாருக்கும் முதலில் என்னுடைய வணக்கம். மதுரை மக்களுக்கு என் வணக்கம். உங்களுடைய அன்பு என் கோடான கோடி நன்றி. இன்னைக்கு நான் ஜனநாயகன் படத்த்தின் சூட்டிங்கிற்காக செல்கிறேன். கொடைக்கானலில் சூட் நடக்கிறது. அதற்காக நான் போறேன்.
கூடிய சீக்கிரமே கட்சி உங்க மதுரை மண்ணுக்கு கட்சி சார்பாக வேற ஒரு சந்தர்ப்பத்தில் உங்க எல்லாரையும் கண்டிப்பாக மீட் பண்ணுறேன். இன்னைக்கு இன்னும் ஒரு 1 மணி நேரத்தில் மதுரையில் லேண்ட் ஆகி உங்க எல்லாரையும் பார்த்துட்டு நான் வந்து என் வேலையை பார்க்க போயிடுவேன். நீங்களும் என்னை பார்த்துவிட்டு பாதுகாப்பாக உங்க வீடுகளுக்கு செல்லுங்கள்.
ரொம்ப பதற்றமாக இருக்குது
யாரும் என்னை வாகனங்களில் பின் தொடர வேண்டாம். என்னுடைய வேனுக்கு பின்னாடியோ, காருக்கு பின்னாடியோ பின் தொடர வேண்டாம். பைக்கில் வேகமாக வருவது, பைக்கில் நின்றுகொண்டு வருவது, ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டி வருவது.. இந்த மாதிரியெல்லாம் வராதீங்க.. ஏனென்றால் இந்த மாதிரி காட்சிகளை எல்லாம் பாக்கும் போது மனதுக்கு ரொம்ப பதற்றமாக இருக்கிறது.
கூடிய சீக்கிரமே உங்க எல்லாரையும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் மீட் பண்ணி கட்டாயம் பேசுகிறேன். உங்க எல்லாருக்கும் மே தின வாழ்த்துக்கள். லவ் யூ ஆல்.. நன்றி. இந்த தகவலை என்னால் மதுரை விமான நிலையத்தில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அங்கு எப்படி சூழ்நிலை இருக்கும் என்று தெரியவில்லை. இதனால் இங்கு வைத்து இதனை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து வேறு எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் விஜய் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
மதுரையில் குவிந்த தவெக தொண்டர்கள்
கோவை என்ன கோவை.. நாங்க அதற்கு மேல் என்று சொல்லும் அளவுக்கும் மதுரை விமான நிலையம் முன்பு இன்று காலையில் இருந்தே விஜய் ரசிகர்கள் குவிந்துள்ளனர். பெண்கள், இளைஞர்கள் என காலையில் இருந்தே மதுரை விமான நிலையத்திற்கு அதனை சுற்றியுள்ள ஊர்களில் இருந்து பைக், வாகனங்களில் சாரை சாரையாக படையெடுக்க தொடங்கினர்.
மதுரையே விஜயே.. உயிரே விஜயே என மதுரை விமான நிலையம் முன்பு குவிந்த தவெக தொண்டர்கள் முழக்கமிட்டனர். இதற்கிடையே மதுரை விமான நிலையத்தில் அளவுக்கு அதிகமாக தவெக தொண்டர்கள் குவிந்ததால், அங்கு மற்ற பயணிகள் வந்து செல்ல முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து மற்ற பயணிகளுக்கு மாற்று வழி வழியாக செல்ல அறிவுறுத்தி அதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது.
தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்
முன்னதாக கோவை விமான நிலையத்திலும் விஜய் தொண்டர்கள் குவிந்ததால், அங்கு விமான நிலையமே ஸ்தம்பித்தது. இந்த நிலையில் இன்று மதுரை விமான நிலையத்திலும் இப்படி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விஜய் ரசிகர்களுக்கு ஒரு அறிவுறுத்தல் வழங்கினார். யாரும் விமான நிலைய வளாகத்திற்குள் வர வேண்டாம் என்று கூறியிருந்தார். என்னும் தொண்டர்கள் அதிகளவில் குவிந்தனர்.
அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாலும், போலீசார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியினர். இதனால் போலீசார் தமிழக வெற்றிக் கழகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இன்னொறு புறம் விஜய் மதுரை விமான நிலையம் வந்த பிறகு 5 கிமீ தூரம் ரோடு ஷோ செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.
காவல் ஆணையர் எச்சரிக்கை
ஆனால் போலீசார் இதற்கான அனுமதியினை தமிழக வெற்றிக் கழகத்தினர் பெறவில்லை என்றும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அனுமதி இன்றி ரோடு ஷோவினை விஜய் நடத்தக்கூடாது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கூறியிருந்தார். மேலும் அனுமதியின்றி ரோடு ஷோ நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications