“கூடவே இருக்கும் சகுனிகளை விஜய் கண்டறிய வேண்டும்” - விஜய்யின் முன்னாள் மேலாளர் பரபர பேட்டி!
சென்னை: "விஜய் கவனமாக இருக்க வேண்டும். அவருடன் இருக்கும் சகுனிகளை அவர் கண்டறிய வேண்டும்" என விஜய்யின் முன்னாள் மேலாளரும், 'புலி' பட தயாரிப்பாளருமான பி.டி செல்வகுமார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக தகவல் தொடர்பாளராக பணியாற்றிய பி.டி.செல்வகுமார் சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் பார்க் அருகில் 100 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வறுமையில் உள்ள சினிமா காமெடி நடிகர்களுக்கு பண உதவிகள் செய்தார்.

அதைத்தொடர்ந்து பி.டி.செல்வகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "விஜய்யுடன் 27 ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். விஜய் இப்படி மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து இருப்பதில் என்னுடைய பங்கும் இருக்கிறது. நட்சத்திரம் விஜய் தான். ஆனாலும் அதற்கு உறுதுணையாக நான் இருந்திருக்கிறேன். நான் நேர்மையாக இருந்ததால் தான் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் ஆகியோருடன் பல ஆண்டுகள் பயணிக்க முடிந்தது. இந்த சூழலில் வேதனையுடன் ஒன்று சொல்லிக் கொள்கின்றேன். புலி திரைப்படம் வெளியாகும் முன் என்னுடைய வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனைக்கு மிக முக்கிய காரணமாக விஜய்யுடன் நெருக்கமாக இருந்தவர்கள் தான் என எனக்கு சோதனை செய்ய வந்த அதிகாரிகளே தெரிவித்தார்கள். அந்த கள்ள நபர்கள் யார்? என்பதை விஜய் அடையாளம் காண வேண்டும். மகாபாரதத்திற்கு மிகப்பெரிய காரணமே சகுனி தான். ராமாயணத்திற்கு மிகப்பெரிய காரணமே கைகேயி தான். அதே போல விஜய்யை சுற்றிலும் சூழ்ச்சி வலையானது இருக்கிறது.
ஆதவ் அர்ஜுனா நேர்மையான நபர் இல்லை. தன்னுடைய 9 வயதை குறைத்து திருமணம் செய்து இருக்கிறார். தற்போது நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, "விஜய்யை தொட்டுப்பார். கல்லூரியில் இருக்கக் கூடிய மாணவர்கள் வருவார்கள்" என வீர வசனம் பேசியுள்ளார்.
நான் கேட்கிறேன். கல்லூரி மாணவர்கள் எல்லோரும் படித்து பெரிய ஆளாக வேண்டியவர்கள். அவர்களை இவர்கள் எப்படி கைப்பாவை ஆக்க முடியும்? அதிலும், '6 மாதத்திற்கு பிறகு எங்களுடைய ரௌடியிசம் என்னவென தெரியும்' என்று ஆதவ் அர்ஜுனா என பேசி இருக்கிறார். இவர்கள் ரவுடியிசம் செய்வதற்கு தமிழக மக்கள் என்ன கிள்ளுக்கீரையா?
கரூர் சம்பவத்தில் தவறு நடந்திருக்கிறது. அதற்கு உடனே யார் பொறுப்பு? என்பதை தெரிவித்திருக்க வேண்டும். ஆனந்தா? ஆதவ் அர்ஜுனாவா? அல்லது விஜய்யை சுற்றி இருக்கும் வேறு யாராவதா? என சொல்லி இருக்க வேண்டும். அதை விடுத்து, வேறு விதமாகப் பேசுவது ஏற்புடையதல்ல. இனிமேல் வரக்கூடிய காலத்திலாவது விஜய் விழிப்புடன் இருக்க வேண்டும். அவருடன் இருக்கக்கூடிய சூழ்ச்சியான நபர்களையும் புறம் தள்ள வேண்டும்.
விஜய் தான் குட்டிக் கதைகளை கூறுவார். நான் தற்போது உங்களிடம் ஒரு குட்டிக்கதை சொல்ல விரும்புகிறேன். ஒரு கிணறு இருந்தது. அதில் உல்லாசமாக ஒரு தவளை நீந்தி கொண்டிருந்தது. அப்போது தேள் ஒன்று கிணற்றில் உள்ள தவளை மேல் விழுந்தது. அப்போது தவளை, ''நான் உன்னை காப்பாற்ற மாட்டேன். ஏனெனில் நீ என்னை கொட்டி விடுவாய்'' என்று கூறியது.
அதற்கு பதில் கூறும் விதமாக தேள், ''நான் நிச்சயமாக உன்னை கொட்ட மாட்டேன். கொட்டினால் நீ இறந்து விடுவாய். நீந்த தெரியாமல் நானும் செத்து விடுவேன்'' என்று கூறியது. உடனே இரக்கப்பட்ட தவளை, அந்த தேளை காப்பாற்றியது. ஆனாலும் காப்பாற்றிய தவளையை தேள் கொட்டியது. இது யாருக்கு புரிந்ததோ? இல்லையோ? நிச்சயமாக ஒருவேளை இதனை பார்த்தால் விஜய்க்கு புரியலாம். இனி வரும் காலத்தில் அவர் விழித்துக் கொள்ள வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications