பனையூர் பண்ணையார்தனம்..பாதிக்கப்பட்ட மக்களை ஆபிஸில் சந்திக்கும் விஜய்? வீடு வீடாய் சென்ற நிர்வாகிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசிய தவெக நிர்வாகிகள், பேருந்து வசதி செய்து கொடுத்தால் பனையூர் வருவீர்களா? என கேட்டுள்ளனர். பெரும்பாலோனோர் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், விரையில் சந்திப்பு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடையச் செய்தது.

அதன் பின்னர், தவெக தலைவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Vijay Karur Panaiyur

கரூர் கூட்ட நெரிசல்

இதில் மதியழகன் மட்டும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்கு குறித்து உச்ச நீதிமன்றம் தலையிட்டு, விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது. அதன் பிறகு சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கிய நிலையில், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மாநில புலனாய்வுக் குழுவினர் சிபிஐ வசம் ஒப்படைத்தனர். இதே சமயம், கூட்ட நெரிசல் உயிரிழப்புக்குப் பின் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் நேரில் சென்று சந்திக்காதது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.

சிபிஐ விசாரணை

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்தது. மேலும், அமைச்சர்கள் மூலம் அந்த தொகை வழங்கப்பட்டது. அதேபோல், தவெக தரப்பிலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் இணையவழி பரிவர்த்தனையின் மூலம் வழங்கப்பட்டது. எனினும், "விஜய் இன்னும் நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை" என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்துக்கொண்டே இருந்தது.

விஜய் சந்திப்பு

இந்நிலையில், தற்போது விஜய், கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, தவெக நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, "கரூரில் மண்டபம் கிடைக்காததால் விஜய் வர முடியவில்லை. அதனால் பனையூரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து வசதி செய்து கொடுத்தால் வருவீர்களா?" என்று கேட்டறிந்துள்ளனர்.

விஜய் திட்டம்

எனினும், இதற்கான சரியான தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்பு, விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க இருப்பதாகவும், அதற்கான அனுமதி கோரி டிஜிபியிடம் மனு கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் அதன் பின்னர் அந்த முயற்சி நிலைகொண்டதாக தகவல் இல்லை. தற்போது, சென்னை பனையூரில் நடைபெற உள்ள இந்த சந்திப்பு, கரூர் கூட்ட நெரிசல் வழக்குக்குப் பின் தவெக தலைவர் விஜயின் முதல் நேரடி சந்திப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவர்களது இடத்தில் சந்திக்காமல், பனையூருக்கு அழைப்பதா என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+