கரூர் பலிக்கு நான் காரணம் இல்லை! போலீஸ் சொன்ன நேரத்திற்கு போனேன்! இறுதி பிரசாரத்தில் விஜய் விளக்கம்
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு என் மீது பழி போடுகிறார்கள். நான் போலீஸார் சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டேன் என தவெக தலைவர் விஜய் ஆக்ரோஷமாக பேசினார். மேலும் செந்தில் பாலாஜியையும் விஜய் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.
தமிழகம் முழுவதும் இன்றுடன் பிரச்சாரம் மாலை 6 மணிக்கு ஓயும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதி கட்ட பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் நந்தனத்தில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில் கரூர் சம்பவத்தின் வசதியா என் மீது பழி போடுறாங்க. கரூர் விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாதுனு சொல்லிவிட்டு நான் லேட்டாக வந்ததுதான் காரணம் என முதல்வர் சட்டசபையில் பேசுகிறார்.
போலீஸ் சொன்ன நேரத்தில் நான் அங்கிருந்தேன். 41 பேர் பலியானதற்கு நான் காரணமில்லை. நீங்கள்தான் (திமுக) ஒன்றுமே செய்யவில்லையே, அப்புறம் ஏன் உங்கள் அடிமையை (செந்தில் பாலாஜி) கரூரில் இருந்து கோவை தொகுதியில் போட்டியிட வைக்கிறீர்கள். ஏன் கரூரில் போட்டியிட வேண்டியதுதானே என விஜய் ஆக்ரோஷமாக கேட்டார்.
அது போல் விஜய் மேலும் பேசுகையில், மக்களை கண்டு கொள்ளாத நபர்களை வீட்டுக்கு அனுப்பாமல் கோட்டைக்கா அனுப்புவார்கள்? தமிழகத்தில் இதுவரை எந்த அரசும் வாங்காத அளவுக்கு கடன் வாங்கி கடன் சுமையை உயர்த்தியது திமுக அரசு. இவ்வளவு கடன் வாங்கியதில் இளைஞர்களின் கல்விக் கடனையாவது ரத்து செய்திருக்கலாம்.
எம்மதமும் எனக்கு சம்மதம் என்பதே என் முகம். மதசார்பற்ற கொள்கையில் இருந்து மாற போவதில்லை. இதில் 100 சதவீதம் இந்த விஜய்யை நீங்கள் நம்பலாம். தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும் என்று சொல்கிறேன். கட்சியை காப்பாற்ற பாஜக காலில் திமுக விழும்.
பாஜகவின் அடிமை யார் என்பதில்தான் திமுக, அதிமுக இடையே போட்டி நிலவுகிறது. கட்சியை காப்பாற்ற மோடி, அமித்ஷா காலில் திமுக விழுகிறதா இல்லையா என பாருங்கள். ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் விஜய் வெளியே வர மாட்டார் என 10 முறை தோற்ற சேலத்துக்காரர் சொல்கிறார்.
ஐயா, அனுபவசாலி அவர்களே.. இந்த சேலத்திற்கு அருகில் இருக்கும் ஒரு தொகுதியில் மட்டும் பதுங்கி கொள்ளாமல், தமிழ்நாட்டில் வேறு ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வென்று காட்ட முடியுமா? முதலில் போட்டியிட முடியுமா? அதனை செய்துவிட்டு விஜய்யை பற்றி பேசுங்கள். சொந்த தொகுதியிலேயே தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் நம்முடைய சின்னத்தை திருடியவர் எடப்பாடி பழனிசாமி.
அதன் காரணமாகவே சுயேட்சை வேட்பாளரின் சின்னத்தை நமது சின்னமாக அரவணைத்திருக்கிறோம். அவர் நமக்காக மக்கள் மன்றத்தில் பணியாற்றியவர் தான். அதனால் எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெகவின் டிவி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் ஒரு ஓனர் இருக்கிறார். அதுதான் பாஜக.
பாஜக அமைச்சர் ஒருவர் என்னை நடிகர் நடிகர் என்று சொல்கிறார். நான் நடிகன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அரசியலில் நான் நடிக்கவில்லை. 75 ஆண்டு கால பவள விழா பாப்பாவையும், 55 ஆண்டு கால பல்லாங்குழி பாப்பாவையும் தூக்கி வீசி எறிவோம். இவ்வாறு விஜய் விமர்சித்துள்ளார். மேலும் தவெக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பது குறித்து தேர்தல் வாக்குறுதிகளையும் வாசித்தார்.












Click it and Unblock the Notifications