அவையின் மரபை மீறிய விஜய் பேச்சு.. மிசா, முரசொலி மாறன் குறித்த கருத்துகளை நீக்க கோரிய எவ வேலு
சென்னை: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு மற்றும் சர்க்காரியா கமிஷன் விவகாரம் குறித்து குறிப்பிட்டது பேரவை மரபையும் விதிகளையும் மீறிய செயல் என திமுக கொறடா எ.வ.வேலு குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மிசா மற்றும் முரசொலி மாறன் தொடர்பாக முதல்வர் விஜய் தெரிவித்த கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 6 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் விவாதம், அமைச்சர்களின் பதிலுரை ஆகியவற்றை தொடர்ந்து, கடந்த 17 ஆம் தேதி முதல் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. தவெக, திமுக இடையே கடும் விவாதம் ஏற்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டுக்கு நேற்று முதலமைச்சர் விஜய் பதிலுரை கொடுத்தார். சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இன்றைய தினம் மட்டும் 8 துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

சட்டப் பேரவையில் திமுக கொறடா எவ வேலு பேசியதாவது: பேரவைக்கென்று சில மாண்புகள் இருக்கிறது. மானியக் கோரிக்கைகளை அமைச்சர்கள் பேரவையில் தாக்கல் செய்யும்போது, விவாதத்திற்குப் பின் பதிலளிக்கும்போது அமைச்சர்கள் துறை சம்பந்தப்பட்ட பதில்களைத் தான் நாம் பார்த்திருக்கிறோம். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முதலமைச்சராக இந்து பணியாற்றி இருக்கின்றனர்.
காவல் துறை மானியக் கோரிக்கையின்போது நிறைய பேசியிருக்கிறோம். அவைக் குறிப்பில் எடுத்துப் பார்த்தால் அது தெரியும். கண்ணியமிக்க பதிலைத் தான் அவர்கள் அளிப்பார்கள். நாங்களும் குறைகளை சுட்டிக் காட்டித்தான் பேசுவோம். நேற்றைய தினம் முதல்வர் பேசும்போது 26 நிமிடம் நாங்கள் அமைதி காத்தோம். விதி 92 இன் படி நீதி விசாரணை இருக்கும் எப்பொருள் மீதும் தன் கருத்துகளை சொல்வதற்கு இடமில்லை என்பது இடம்பெற்றிருக்கிறது.
நேற்று முதல்வர் விஜய் பேசும்போது, அமலாக்கத் துறை தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறபோது வழக்கை முழுதும் அவையில் படிக்கிறார். அது அவையின் மரபை மீறிய செயல். விதிக்குட்பட்டதாக இல்லை. மிசா கொடுமை என்பது ஜனநாயகத்திற்கு எதிராக வந்தது. தமிழ்நாட்டில் 450க்கும் மேற்பட்டோர் சிறைக்கு சென்றனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
ஜனநாயகத்தை காப்பதற்காக முன்னாள் முதல்வர் மிசா கொடுமையில் ஆளாக்கப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். சர்க்காரிய கமிஷன் பற்றி இங்கு பேசப்பட்டது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரே பதில் சொல்லியிருக்கிறார். சர்க்காரிய கமிஷன் பற்றி பேசும்போது, மாறனுடைய பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெளியில் உள்ள நபர்களின் பெயரை சட்டமன்றத்தில் பேசக்கூடாது என்கிற விதி உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அவர் இறந்துவிட்டார்.
சர்க்காரிய கமிஷன் நிறைவடையும்போது அதன் நீதிபதி சர்க்காரியர் கூறுகையில், 28 குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டிருந்தன. அதுதொடர்பான விசாரணைக்கு எம்ஜிஆரும் சென்றார். அப்போது, அவர் இந்த வழக்கைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. சேலத்தில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் கொடுத்தார். அதை வைத்து நான் சொல்லிவிட்டேன். இதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிட்டுத்தான் வந்தார்.
இந்த கமிஷன் நிறைவடையும்போது, 28 குற்றச்சாட்டுகள் எந்தவிதத்திலும் நிரூபிக்கப்படவில்லை அதனால் வழக்குத் தொடர முடியாது என்று கூறினார். கமிஷனில் ஆதாரம் இருந்தால்தான் வழக்கு போட முடியும். இந்த குற்றச்சாட்டுகள் மீது எந்த ஆதாரமும், முகாந்திரமும் இல்லை என்று முடித்துவைத்துவிட்டார். ஆனால், இதில் ஏதோ தவறு நடந்துவிட்டது போல பேசியுள்ளார்.
முதல்வருக்கு மாறன் குடும்பம் மிக வேண்டிய குடும்பம். தற்போதைய முதல்வர் முரசொலி மாறன் குடும்பத்தினருடன் சேர்ந்து நிறைய படங்களில் நடித்துள்ளார். மிசா, முரசொலி மாறன் குறித்த முதல்வர் விஜய் கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
