பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் வீக்! விஜய்க்கே கல்தா கொடுத்த மா.செ.கள்! லிஸ்டை பார்த்ததும் செம கோபம்
சென்னை: 2026 தேர்தலுக்கு இன்னும் ஏறக்குறைய 10 மாதங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகள் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றன. ஆனால் புதிய வரவான தமிழக வெற்றி கழகம் அடிப்படை கட்டமைப்பையே வலுப்படுத்தாமல் சிக்கி தவிக்கிறது. மாவட்ட செயலாளர்கள் நியமனம் தவிர்த்து எந்த நியமனமும் செய்யப்படவில்லை. குறிப்பாக தலைமையிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என நினைத்து போலியான பூத் கமிட்டிகளை உருவாக்கி தலைமைக்கு அனுப்பி இருக்கின்றனர். இந்த தகவல் விஜய்யின் காதுக்கு எட்டிய நிலையில் நிர்வாகிகளை கடுமையாக பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த தேர்தல்களைப் போல அல்லாமல் 2026 தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு சற்று கடுமையானதாகவே இருக்கப்போகிறது. காரணம், கூட்டணி தான் தமிழகத்தில் தேர்தல் வெற்றியை முடிவு செய்யப் போகிறது. அந்த வகையில் திமுக அசுர பலத்துடன் இருக்கிறது.
மிகப் பெரிய கூட்டணி, ஆளுங்கட்சி, பூத் கமிட்டி வரை வலுவான தொண்டர்கள் செல்வாக்கு என திமுக வெற்றி வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறது. அதிமுகவையும் குறைத்து எடை போட்டு விட முடியாது. மிகப்பெரிய தொண்டர்கள் பலம், கிளை கழகம் வரை நிர்வாகிகள், மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணி என திமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுக்க தயாராக இருக்கிறது.

தமிழ்நாடு தேர்தல்
இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. நாம் தமிழர் கட்சி சீமான் தனித்து போட்டியிட, நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் களத்தில் குதித்து இருக்கிறார். நான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என திட்டவட்டமாக கூறியதோடு தனது தலைமையில் கூட்டணி என அறிவித்துள்ளார். சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் விஜய்க்கு கூட்டணி வாய்ப்பு அமையுமா அல்லது நாம் தமிழர் போல தனித்துப் போட்டியிடுவாரா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிய வந்துவிடும்.
விஜய்
அதே நேரத்தில் தேர்தலை சந்திக்க அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் விஜய் தீவிரமாக செயலாற்றி வருகிறார். தமிழக முழுவதும் மாவட்ட செயலாளர் நியமனம் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் மாவட்ட பொறுப்பாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகர், நகர், பேரூர், ஒன்றியம், ஊராட்சி, கிளைக் கழகம் என கட்சியை மக்களிடம் கொண்டு செல்லும் அடிப்படை கட்டமைப்பான ஊரக, நகர்ப்புற நிர்வாகிகள் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை.
நிர்வாகிகள் நியமனம்
மாவட்ட செயலாளர் நியமனத்தின் போதே கடும் நெருக்கடியை விஜய் எதிர்கொண்டார். விஜய் ரசிகர் மன்றத்திலிருந்து பல ஆண்டுகளாக உழைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறி பலர் கட்சியை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் மாநகர் நகர் பகுதிகளாவது தங்களுக்கு கிடைக்கும் என்று ஆசையில் பலர் இருக்கின்றனர். அதனால் தான் தற்போது வரை அப்பகுதிகளுக்கு நியமனம் நடைபெறவில்லை. இந்த நிலையில் விஜய் அதிர வைக்கும் ஒரு தகவல் அவர் காதுக்கு எட்டியதாக சொல்லப்படுகிறது.
பூத் கமிட்டி
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பூத் ஏஜெண்டுகளை நியமித்து விட்டதாக தலைமைக்கு கணக்கு காட்டி இருக்கின்றனர் தலைமை கழக நிர்வாகிகள். உண்மையில் அவர் கைகளுக்கு பட்டியல் சென்றது என்னவோ உண்மைதான். ஆனால் மாவட்ட செயலாளர்கள் தான் உரிய முறையில் பூத் கமிட்டிகளை நிரப்பாமல் ஒரே பகுதியில் இருக்கும் இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு என வேறு ஊர்களில் இருக்கும் பூத் கமிட்டி பணிகளை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மாவட்ட செயலாளர்கள்
இந்த நிலையில் தலைமைக் கழக நிர்வாகிகள் மூலம் மாவட்ட செயலாளர்கள் கொடுத்த பூத் கமிட்டி பட்டியலை சரிபார்த்த போது பெரும்பாலானோர் நகர் பகுதிகளில் இருந்து கொண்டு கிராமப் பகுதிகளுக்கு ஏஜென்ட்களாக நியமிக்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது. இதனால் கடும் கோபமடைந்த விஜய் மாநில நிர்வாகிகளை கடுமையாக சாடி இருக்கிறார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இன்னும் பல பகுதிகளுக்கு ஒன்றிய அளவிலான நிர்வாகிகளையே மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யவில்லை எனவும், கோவையைப் போல தங்கள் பகுதியிலும் விஜய் பூத் கமிட்டி ஏஜென்ட் கூட்டத்தை நடத்தினால் ஆட்களை திரட்ட வேண்டுமே என்பதற்காக தங்கள் பகுதிகளில் இருக்கும் ஆதரவாளர்களை கிராமப்புறங்களில் இருக்கும் பூத் கமிட்டி ஏஜென்ட்கள் போல நியமித்துள்ளதாக புகார் எழுந்திருக்கிறது.
போலி ஏஜெண்ட்கள்
இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய போது அந்த புகார் உண்மைதான் என்பது தெரிய வந்தது. உதாரணத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் 3 மாவட்ட செயலாளர்கள் இருக்கும் நிலையில் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய அளவிலான நிர்வாகிகளெ இன்னும் நியமனம் செய்யப்படவில்லை. மேலும் சில கிராமங்களை தேர்ந்தெடுத்து அங்கு இருக்கும் நபர்களிடம் பூத் கமிட்டி ஏஜென்ட் யார் எனக் கேட்டபோது. தாங்கள் இல்லை என சொல்லிவிட்டனர். ஆனால் கிராமங்களுக்கு சம்பந்தமே இல்லாத நபர்கள் பூத் கமிட்டி ஏஜென்ட்கள் என மாநில தலைமைக்கு மாவட்ட செயலாளர்கள் மூலம் பட்டியல் அனுப்பப்பட்டு இருக்கிறது. திண்டுக்கல்லில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் என்கின்றனர் சீனியர் நிர்வாகிகள். தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அடிப்படை கட்டமைப்பையே வலுப்படுத்தாமல் இருப்பது தேர்தலின் போது விஜய்க்கு நிச்சயம் நெருக்கடியை ஏற்படுத்தும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications