தமிழ்நாடு எங்களுக்கு.. கேரளா உங்களுக்கு! அடித்துப் பேசும் தவெக விஜய்! எல்லாம் செங்கோட்டையன் தான்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்த பிறகு விஜயின் நடவடிக்கைகளை மாற்றம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இதுவரை தன்னுடன் இருந்த வியூக நிபுணர்கள் சொன்னதையே கேட்டு பழகிய விஜய், கள நிலவரத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் ஆலோசகர் பிரவீன் சக்ரவர்த்தி விஜயை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் மட்டுமல்லாது தென்னிந்திய அளவில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
கேரளா புதுச்சேரி தமிழகம் என மூன்று மாநிலங்களை குறி வைத்து விஜய் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் 40 சீட்டுகளை காங்கிரசுக்கு ஒதுக்கினால், கேரளாவில் 40 சீட்டுகளை தமிழக வெற்றி கழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என விஜய் டீல் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு பல மாநிலங்களில் ஒருங்கிணைந்த கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் மட்டும் அல்லாமல், கேரளா மற்றும் புதுச்சேரியிலும் அதிகார பங்கீடு குறித்து பேசுவதாகக் கூறப்படுகிறது.

விஜய் அரசியல்
இந்த நடவடிக்கை தென்னிந்திய அரசியலில் பெரிய அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல்கள் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அணியிலிருந்து தற்போது கசிந்துள்ளது. விஜய் தரப்பு தற்போது தேசிய அளவில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய அம்சமாக '40க்கு 40' என்ற வியூகம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 40 சட்டமன்ற தொகுதிகளை விட்டுக் கொடுக்க தவெக தயாராக இருக்கும் நிலையில், அதேபோல் கேரளாவில் தவெகவுக்கு 40 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனையை விஜய் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
தவெக கூட்டணி
இதன் மூலம், தமிழகத்தில் தனி செல்வாக்கும், கேரளாவில் கணிசமான அரசியல் அங்கீகாரமும் பெறும் இரட்டை இலக்கை தவெக முன்னிறுத்துவதாகச் சொல்கின்றனர். இது வெறும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மட்டும் அல்லாமல், முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் பதவிகளை சுற்றிய அரசியல் பேச்சுகளும் இதில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் தவெக முதல்வர் பதவியை நோக்கி செல்லும் நிலையில், காங்கிரஸ் துணை முதல்வர் பதவியை கேட்டால் அதை ஏற்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
40க்கு40 டீல்
இதே நடைமுறை கேரளாவிலும் நடைமுறைக்கு வர வேண்டும் என தவெக வலியுறுத்துகிறது. கேரளாவில் காங்கிரஸ் முதல்வர் பொறுப்பை ஏற்றால், தங்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பது தவெக பேச்சுவார்த்தையின் மையப் புள்ளியாக உள்ளது. இதனுடன், புதுச்சேரி அரசியலிலும் பெரிய மாற்றத்தை நோக்கி விஜய் தரப்பு பேசி வருகிறது. அங்கு ஆட்சியில் உள்ள என்.ஆர். காங்கிரஸின் தலைவர் ரங்கசாமியுடன் நடந்த பேச்சுவார்த்தையில், மொத்த 30 தொகுதிகளில் தலா 15 இடங்களில் போட்டியிடும் ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
புதுச்சேரி ஆட்சி
கூட்டணி வெற்றி பெற்றால் ரெங்கசாமி முதல்வர் பொறுப்பேற்கலாம் என்ற முன்மொழிவும், அதே நேரத்தில் தவெகவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புதுச்சேரி போன்ற ஒரு யூனியன் பிரதேசத்தில் ஆட்சி அமைப்பதில் பங்கு பெறும் வகையில் ஒரு புதிய கட்சி இத்தகைய முடிவுகளை முன்வைப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜயின் திட்டம்
தமிழகத்தைத் தாண்டி கேரளா மற்றும் புதுச்சேரியிலும் கூட்டணி, ஆட்சி பங்கீடு குறித்து திட்டமிட்டு விவாதிப்பது, தவெகவில் பாதையை மாற்றியதாக சொல்லப்படுகிறது. ஒரு புதிய கட்சியாக இருந்தாலும், பல மாநிலங்களில் அதிகாரத்தில் பங்குபெற்று செல்வாக்கை உயர்த்துவதே விஜயின் திட்டம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். ஆனால், இத்தகவல்கள் குறித்து எந்த கட்சியிடமிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications