“அரசியலுக்கு வருவதற்கு முன்பே அனிதா வீட்டின் தரையில் அமர்ந்தவர் விஜய்”.. முத்துராஜாவுக்கு ராஜ்மோகன் பதிலடி
சென்னை: மருத்துவம் மட்டும்தான் படிப்பா? என்று முதல்வர் விஜய் பேசியது குறித்தும், அமைச்சர் அருண்ராஜ் முன்பு கூறிய கருத்துகள் குறித்தும் சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏ முத்துராஜா சுட்டிக்காட்டிப் பேசியபோது தவெக தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்தத் தீர்மானத்தில் அரசியல் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனாலும், தவெக மீது தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், அரசியலுக்கு வருவதற்கு முன்பே அனிதா வீட்டின் தரையில் அமர்ந்தவர் முதல்வர் விஜய் என்று முத்துராஜாவுக்கு ராஜ்மோகன் பதிலடி கொடுத்தார்.
நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு தனித் தீர்மானத்தை கொண்டு வந்தது. மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் போது திமுக சார்பாக எம்எல்ஏ முத்துராஜா பேசுகையில், ஆட்சிக்கு வருவதற்கு முன் முதல்வர் விஜய், நீட் மட்டும்தான் உலகமா, வேறு படிப்பே இல்லையா என்று கேட்டார். அதையே சுகாதாரத் துறை அமைச்சரும் மீண்டும் பேசினார். மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், பிளெம்பர், கார்பெண்டர் வேலைக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் பேசியிருந்தார்.

குலக்கல்விக்கு ஆதரவா..
அவர் ஏற்கனவே இருந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை பாணியில் குலக்கல்விக்கு ஆதரவாக பேசினார் என்று தெரிவித்தார். அப்போது சபாநாயகர் மற்றும் தவெக தரப்பு குறுக்கிட்டது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறுக்கிட்டு, பழைய வரலாறுகளை பேச வேண்டாம் என்றும் மாணவர்களின் வாழ்க்கை பிரச்சனை இந்த தீர்மானத்தில் அரசியல் தேவையில்லை என்றும் கூறினார்
இதனால், சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, தீர்மானத்தையொட்டி மட்டும் பேசி சுருக்கமாக முடிக்குமாறு சபாநாயகர் கூறினார். ஆனாலும், முத்துராஜா பேசுகையில், தவெக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: ஒரு நோய்த் தொற்றில் குழந்தைகள் இறக்கலாம். ஆனால், ஒரு தேர்வு முறையில் இத்தனை குழந்தைகள் இறந்ததை சுட்டிக் காட்டியபோது அரங்கம் அதிர்ந்தது.
நீட் எதிர்ப்பு தீர்மானம்
வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நீட் எதிர்ப்பு சிறப்புத் தீர்மானத்தை சுகாதாரத் துறை அமைச்சர் கொண்டு வந்திருக்கிறார். அதைக் குறித்து உறுப்பினர் பேசம்போது, எங்கோ பலனடைந்த ஒரு சில குழந்தைகளை சுட்டிக் காட்டினார். ஆனால், பலனடைகிற ஒரு சில குழந்தைகளை விட பாதிக்கப்படுகிற பல லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் இந்த நீட் எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இத்தனை அவதூறுகளையும் தாண்டி பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், அரசியலை வைத்து இதைப் பேச வேண்டாம். ஆக்கப்பூர்வமாக பேச வேண்டும் என்று பெருந்தன்மையோடு சொல்கிறார். அப்படி சொல்லியும் கூட தொடர்ச்சியாக அவதூறுகளை அள்ளி வீசுகிறார். அரசியலில் அரியணை ஏறுவதற்கு முன்பே நீட்டுக்கு எதிரான போராட்டத்தின் முதல் விதையாக விழுந்த அனிதாவின் வீட்டின் தரையில் அமர்ந்தவர் முதல்வர் விஜய். அனிதாவின் உடன் பிறந்த சகோதரன் அவரது பிளஸ் 2 மதிப்பெண்ணை டீசர்ட்டில் போட்டு அலைந்தார். அந்த மணிரத்னம் மட்டுமல்ல உடன் பிறவா சகோதரனாக நின்று கொண்டிருந்தார் முதல்வர் விஜய்.
மாணவர்களின் புகழை திருட..
சென்னை பாலன் இல்லத்தில் நடந்த போராட்டத்தின் போது, போராட்டக் களத்தில் போராடிய மாணவர்களின் புகழை திருட ஒரு கூட்டம் நினைத்தது. அந்தக் கூட்டத்தின் மத்தியில் போராட்டத்தில் என்னை அனுப்பி அங்கு பார்க்க சொன்னார் முதல்வர். தமிமுன் அன்சாரி குறிப்பிட்டது போல பட்டினிப் போராட்டத்தை எடுத்த புளியந்தோப்பு மோகன் உள்பட அனைவரையும் நான், சுகாதாரத் துறை அமைச்சர், கொறடா, லயோலா மணி என அனைவரும் பலமுறை அங்கு சென்று நேரில் சென்று பார்த்து தண்ணீர் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்ய சொன்னவர் முதல்வர் விஜய்
அதனால், தயவு கூர்ந்து உங்கள் அரசியலை அப்பால் வைத்துவிட்டு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை அனைவரும் வழிமொழிந்து ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.


Click it and Unblock the Notifications
