அடையாறு சாஸ்திரி நகரில் தவெக கூட்டம்.. திடீரென வந்த காரை எட்டிப்பார்த்து.. இன்ப அதிர்ச்சி
சென்னை: சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடையாறு சாஸ்திரி நகரில் தமிழக வெற்றி கழகத்தின் பொது கூட்டத்தை நடிகர் விஜய் பார்வையிட்டு சென்றார். காரில் சென்றவரே கூட்டத்தை பார்வையிட்டதால் கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
ஒரு பக்கம் ஊடகங்களில் விஜய்யின் தனிப்பட்ட விவகாரம் தொடர்பாக விமர்சனங்கள் இருந்தாலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது மிகத் தீவிரமான உட்கட்சிப் பணிகளில் இறங்கியிருக்கிறது. தொகுதி வாரியாக கூட்டங்கள் நடத்துவது அதிரித்துள்ளது. விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை மட்டும் நம்பியிருக்காமல், அந்தந்தத் தொகுதியில் செல்வாக்குள்ள நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பொறுப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளார். அதற்காகத்தான் இந்தத் தொகுதி வாரியான ஆய்வுக் கூட்டங்கள் நடப்பதாக கூறப்படுகிறது. கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகளைவும் தவெகவினர் அனைத்து தொகுதிகளிலும் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடையார் சாஸ்திரி நகரில் தமிழக வெற்றி கழகத்தின் தென் சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி கிழக்கு பகுதி 174-வது வட்டம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
தவெக சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் தாமு அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு
சிறப்பு விருந்தினராக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி, தேசிய செய்தி தொடர்பாளர் சத்தியகுமார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்த நிலையில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது அந்த வழியாக காரில் வந்த த.வெ.க தலைவர் விஜய் காரில் அமர்ந்தபடியே கூட்டத்தை பார்த்துவிட்டு கையசைத்து சென்றார். விஜயின் கார் வருவதை கண்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உடனடியாக எழுந்து நின்று ஆரவாரம் செய்ததோடு பெரும் மகிழ்ச்சியும் அடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
முன்னதாக நடிகர் விஜய் இன்று மகளிர் தின விழாவில் கலந்துகொண்டார். நாளை (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினம் என்றாலும், ஒரு நாள் முன்னதாகவே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இதற்கான சிறப்புக் கூட்டம் நடந்தது. மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை இந்த விழா நடந்துள்ளது. இந்த விழாவில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பெண்களுக்கான பிரத்யேகத் திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்திற்கு QR கோட் கொண்ட அனுமதிச் சீட்டு வைத்திருந்த நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதள நேரலை மூலம் பார்க்குமாறு கட்சித் தலைமை கேட்டுக்கொண்டிருந்தது. நாளை தமிழகம் முழுவதும் உள்ள த.வெ.க மாவட்ட அலுவலகங்களில் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.












Click it and Unblock the Notifications