உங்க விஜய் நான் வரேன்.. தாராபுரத்தில் பிரச்சாரம் எப்போது? களத்தில் செங்கோட்டையன்.. ஜரூராக பணிகள்!
சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் 25ஆம் தேதி மதுராந்தகத்தில் பிரச்சாரம் செய்கிறார். தாராபுரத்துக்கு முதல்வர் விஜய் எப்போது பிரச்சாரத்துக்கு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை அடுத்து உற்சாகமாக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர் தமிழக வெற்றி கழகத்தினர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தாராபுரம் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய், வருகிற 30-ந் தேதி தாராபுரத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம்-உடுமலை சாலையில் உள்ள மாருதி நகர் பகுதியில் இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக அரசின் 140 நாள் செயல்பாடுகள், புதிய அறிவிப்புகள் உள்ளிட்டவை குறித்து விஜய் பொதுமக்களிடம் விளக்கிப் பேச உள்ளதாகவும், நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் சமூக நிலவரங்கள் குறித்தும் அவர் உரையாற்ற உள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு முன், திறந்த வேனில் பிரசாரத்தில் விஜய் பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, பொதுக்கூட்டம் நடைபெற உள்ள மாருதி நகர் பகுதியில் சுமார் 54 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அதிகளவில் திரளும் வகையில் மேடை, பந்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பணிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், காங்கேயம் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக முன்னாள் வேட்பாளர் மணிக்கவுண்டர் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். பொதுக்கூட்டத்துக்கான பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் மற்றும் பிற ஏற்பாடுகளை விரைந்து முடிப்பது தொடர்பாக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
விஜய் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் அந்த இடத்துக்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இதனால் மாருதி நகர் பகுதியில் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெறும் இடத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது. தாராபுரம் இடைத்தேர்தல் களம் ஏற்கனவே தி.மு.க., அ.தி.மு.க., தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் போட்டியால் தீவிரமடைந்துள்ள நிலையில், விஜய்யின் பிரசார பொதுக்கூட்டம் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications
