“விஜய்க்கு எதுவும் தெரியாது.. கூட இருந்தவர்களைத்தான் நம்பினார்".. களத்தில் இருந்து தாடி பாலாஜி வேதனை
சென்னை: "கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் பலியான இடத்தில் பால் பாட்டில்கள் பல சிதறிக் கிடந்தன. அந்தக் குழந்தைகளுக்கு இப்படி ஏதாவது நடக்கும் என்று துளியாவது தெரியுமா? விஜய்யை பொறுத்தவரை அவர் தன்னுடன் இருப்பவர்களை பெரிதும் நம்புகிறார். ஏற்பாடுகள் செய்தவர்கள் சரிவர செய்யவில்லை." என நடிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூரில் கோரச் சம்பவம் நடந்திருக்கும் நிலையில், பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு அன்று இரவே கரூரில் இருந்து திருச்சி வந்த விஜய், உடனடியாக தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

விஜய் கூட்டத்தில் சோகம்
விஜய் தனது வீட்டிற்கு சென்ற பின், கரூரில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் பதிவை வெளியிட்டார். விஜய்யின் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதோடு, விஜய் ஒரு வீடியோவை வெளியிட்ட நிலையில், உயிர் பலிக்குக் காரணமாகிவிட்டு, அரசு மீது திசை திருப்புவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் தாடி பாலாஜி, கரூர் சென்று தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து வருகிறார். அங்கிருந்தபடியே, நமது ஒன் இந்தியா தமிழுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்துள்ளார் தாடி பாலாஜி.
தாடி பாலாஜி பேட்டி
தாடி பாலாஜி பேசுகையில், "கரூரை பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட மக்கள் இந்த துயரத்தில் இருந்து மீளவில்லை. இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்று யாருமே துளியும் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்குமென்று விஜய்க்கே தெரியாது என்கிறார்கள் மக்கள். இதுதான் உண்மை.
ஒரே இடத்தில் இவ்வளவு பேர் மரணமடைந்த இடத்தைப் பார்வையிட்டேன். அங்கு செருப்புகளும், தண்ணீர் பாட்டில்களும் சிதறிக் கிடந்தன. குறிப்பாக அங்கு பால் பாட்டில்கள் பல சிதறிக் கிடந்தன. அந்தக் குழந்தைகளுக்கு இப்படி ஏதாவது நடக்கும் என்று துளியாவது தெரியுமா? அந்த இடத்தை பிரச்சாரத்திற்கு எப்படிக் கொடுத்தார்கள், அங்கு எப்படி ஏற்பாடு செய்தார்கள் என்பதே தெரியவில்லை.
விஜய் அவர்களைத்தான் நம்புகிறார்
விஜய்யை பொறுத்தவரை அவர் தன்னுடன் இருப்பவர்களை பெரிதும் நம்புகிறார். ஏற்பாடுகள் செய்தவர்கள் சரிவர ஏற்பாடுகளைச் செய்யவில்லை. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் ஆய்வு செய்தவர்கள் சரியாகச் செயல்பட்டிருக்க வேண்டும். இப்போது 41 பேர் பலியானதற்கு என்ன நீதி சொல்வீர்கள்? விஜய் வரும் கூட்டத்துக்கு முன்கூட்டியே ஏற்பாடுகளை சரியாகச் செய்திருக்க வேண்டாமா? நீங்களுடன் விஜய் உடன் தான் வருவீர்களா? முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா?
பொதுமக்கள் விஜய்யை நம்புகிறார்கள். அவர்கள் யாருக்காக அங்கு வந்தார்கள்? விஜய் எனும் ஒருவரின் முகத்தை பார்க்கத்தான். விஜய் தன்னுடன் இருப்பவர்களை நம்புகிறார். இன்றைக்கு அவர் எவ்வளவு மன உளைச்சலில் இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அவருக்கு உதவியாக கூட யாரும் இப்போது இல்லையே? இதைவிட என்ன கேவலம் இருக்கிறது?
கரூருக்கு போயிருக்கணும்
அன்றைக்கே கரூருக்கு சென்றிருக்க வேண்டும். விஜய் போனால் இன்னும் சிக்கல் ஆகும். இரண்டாம் கட்ட தலைவர்கள் போயிருக்க வேண்டும். மக்கள் திட்டட்டும், உங்களால் தான் இப்படி ஆகிவிட்டது என திட்டட்டும். அதை வாங்கிக்கொள்ள வேண்டும். ஓட்டு போட மட்டும் மக்கள் வேண்டுமா? பொதுமக்களால் தானே உங்களுக்கு சொகுசு வாழ்க்கை? மக்களை மதிக்காத உங்களை அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறிவார்கள். நான் அன்றைக்கே அங்கு இருந்திருந்தால் உடனடியாக களத்துக்குச் சென்றிருப்பேன்.” எனத் தெரிவித்துள்ளார் தாடி பாலாஜி.












Click it and Unblock the Notifications