போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை தக்க வைத்த தவெக.. 2006ல் விஜயகாந்த் கூட செய்யாத சாதனை!
சென்னை: தவெக சார்பாக போட்டியிட்ட 233 வேட்பாளர்கள் மற்றும் தவெக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் அனைவரும் டெபாசிட் தொகையை தக்க வைத்துள்ளனர். 2006ல் விஜயகாந்த் 234 தொகுதிகளில் தனித்து களமிறங்கினாலும், ஏராளமான தொகுதிகளில் டெபாசிட் தொகையை இழந்தார். இதனால் தவெக புதிய வரலாறு படைத்திருக்கிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் யாரும் எதிர்பாராத ஒரு பிரம்மாண்டமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 234 தொகுதிகளில் எடப்பாடி தொகுதி நீங்கலாக (வேட்புமனு நிராகரிப்பு காரணமாக) மீதமுள்ள 233 தொகுதிகளிலும் தவெக போட்டியிட்டது.

இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் தங்களது டெபாசிட் தொகையைத் தக்கவைத்துள்ளனர். தேர்தல் விதிகளின்படி, ஒரு தொகுதியில் பதிவாகும் மொத்த செல்லத்தக்க வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு (1/6) அதாவது சுமார் 16.6% வாக்குகளைப் பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற முடியும்.
முதன்முதலில் களம் காணும் ஒரு புதிய கட்சி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் இவ்வளவு பெரிய வாக்கு சதவீதத்தைப் பெறுவது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக 2006ல் விஜயகாந்தின் தேமுதிக அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டாலும், பல இடங்களில் டெபாசிட் இழந்தது.
இந்த தேர்தலில் தவெக மொத்தமாக 34.92% வாக்குகளை பெற்றுள்ளது. எடப்பாடி தொகுதியில் தவெக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் பிரேம் குமாரும் கூட 50,823 வாக்குகளை பெற்று 2வது இடத்தை பிடித்து டெபாசிட் தொகையை தக்க வைத்துள்ளார். இதனால் புதிதாக களமிறங்கியுள்ள தவெக, தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் கூட சில தொகுதிகளில் வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்திருக்கின்றனர். சென்னையில் ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டெபாசிட் தொகையை இழந்துவிட்டார். ஆனால் புதிய கட்சியான தவெக டெபாசிட் தொகையை தக்க வைத்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் இனி மும்முனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications