விஜய்: என்னப்பா ஆரம்பமே தடுமாற்றமா இருக்கு.. தளபதியின் கச்சேரி 7ஆம் தேதிக்கு பின் தெரியும்!
தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் கிடைக்காத நிலையில் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் முதல்வராக மே 8ஆம் தேதிக்குள் பதவியேற்றியாக வேண்டிய நிலையில் மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் சீட்டில் உட்காரப்போகும் விஜய்-க்கு அவர் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள நலத்திட்ட வாக்குறுதிகள் தமிழ்நாட்டின் நிதி நிலையை பெரிதும் பாதிக்கும் என்று நிதி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

விஜய் சினிமா புகழ் மற்றும் ரசிகர்கள் மூலம் ஒரு பகுதி வாக்கு கிடைத்தாலும், மற்றொரு பகுதி விஜய் அறிவித்த பல்வேறு நலத்திட்ட வாக்குறுதிகள் குறிப்பாக பெண்கள், மீனவர்கள், வேலையில்லாதோருக்கு அளிக்கப்படும் ஊக்கதொகை ஆகியவை பெரிய அளவிலான வெற்றியைத் தேடித் தந்துள்ளது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவது பெரும் நிதி சிக்கலும், நிதி சுமையும் ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
நிதிப் பற்றாக்குறை நிலை
தமிழ்நாட்டில் 2026-27ம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.1.22 லட்சம் கோடியாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம்) இருக்கும் என்று ஸ்டைலின் தலைமையிலான அரசு ஏற்கனவே கணித்துள்ளகு. இந்த நிலையில் தவெகவின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மேலும் பெரிய சவாலை ஏற்படுத்தும்.
இதேபோல் விஜய் அறிவித்துள்ள பெரும்பாலான நலத்திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பது தான், நலதிட்டங்களின் பலன்களை அதிகரித்து அறிலித்துள்ளார். இந்த விரிவாக்கும் அரசுக்கு கூடுதல் செலவுக்கான முக்கிய காரணமாக உள்ளது.
பெண்களுக்கான உதவித்தொகை உயர்வு
பெண்களுக்கான வருமான ஆதரவை அதிகரிப்பதே இந்தக் கூடுதல் நிதிச் சுமையின் பெரும் பகுதி வகிக்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் பெண்களுக்கான மாத உதவித்தொகையை ரூ.1,000லிருந்து ரூ.2,500ஆக உயர்த்தி அளிப்பதாக விஜய் தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தார். இத்திட்டத்திற்கான வருடாந்திர செலவு ரூ.14,411 கோடியிலிருந்து ரூ.36,029 கோடியாக உயரும். இதனால் மட்டும் கூடுதலாக ரூ.21,617 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
200 யூனிட் மின்சாரம் மானியம்
மின்சாரத் துறையிலும் செலவு அதிகரிக்கும். விஜய் 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்திருக்கும் காரணத்தால் மானியச் செலவு ரூ.7,752 கோடியிலிருந்து ரூ.12,000 கோடியாக உயரும். இதனால் கூடுதலாக ரூ.4,248 கோடி தேவைப்படும்.
ஓய்வூதியத் திட்டங்கள்
ஓய்வூதியத் திட்டங்களும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். முதியோர் ஓய்வூதியத்தை ரூ.1,200லிருந்து ரூ.3,000ஆக உயர்த்துவதால் சுமார் 31 லட்சம் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4,366 கோடி கூடுதல் செலவு ஏற்படும். கைம்பெண் ஓய்வூதியம் ரூ.1,829 கோடியும், மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் ரூ.504 கோடியும் கூடுதலாகச் செலவாகும்.
பிற முக்கிய வாக்குறுதிகளின் நிதிச் சுமை
ஆண்டுக்கு ஆறு இலவச காஸ் சிலிண்டர் (ஒன்றுக்கு ரூ.900) வழங்குவதால் ரூ.7,074 கோடி செலவாகும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 வருமான ஆதரவு அளிப்பதால் ரூ.1,941 கோடி கூடுதல் செலவு ஏற்படும் (இதில் ரூ.6,000 கோடி மத்திய அரசின் பங்களிப்பு). ஒரு குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வரை விரிவான சுகாதாரக் காப்பீடு வழங்குவதால் ரூ.382 கோடி கூடுதல் செலவு ஏற்படலாம் என கணக்கிடப்பட்டு உள்ளது.
விஜய் அளித்துள்ள சில வாக்குறுதிகளின் நிதிப் பாதிப்பு குறைவாகவே இருந்தாலும், சில திட்டங்கள் பெரும் சுமையாக மாறும் நிலை உருவாகியுள்ளகு. திருமண உதவித் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 8 கிராம் தங்கம் வழங்கப்படுவதால், பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரத் திட்டத்தின் கூடுதல் செலவுகளை ஏற்படுத்துகிறது.
இன்றைய தங்கம் விலைக்கு 8 கிராம் தங்கம் என்றால் குறைந்தது 1.2 லட்சம் ரூபாய். மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை நிறுத்தியதிற்கு காரணமும் இத்திட்டத்தின் மூலம் ஏற்படும் பாதிப்பும் கிட்டத்தட்ட ஒன்று தான். தங்கம் விலை உயர உயர இத்திட்டத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்க முடியாது.
வேலை இல்லாதோருக்கு உதவி
வேலைவாய்ப்பில்லாதோருக்கு மாதம் ரூ.4,000 (பட்டதாரிகள்) மற்றும் ரூ.3,000 (டிப்ளமா படித்தவர்கள்) உதவித்தொகை வழங்கும் திட்டமும், கடுமையான தகுதி நிபந்தனைகளுடன் செயல்படுத்தப்பட்டால் பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்தாது.
மேலே குறிப்பிட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால் தற்போதைய நிதி நெருக்கடியான நிலையில் கூடுதலாக 42000 கோடி தேவை. இதனால் புதிய அரசு நிதி நிர்வாகத்தில் பெரிய அளவில் பணியாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது.
தளபதி விஜய்யின் தேர்தல் அறிக்கை மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்திருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவது தமிழ்நாட்டின் நிதி நிலையை எப்படி பாதிக்கும் என்பது அடுத்த சில மாதங்களில் தெளிவாகும்.















Click it and Unblock the Notifications