Vijay TVK: பொதுக்கூட்டமே நடத்துறோம்.. அனுமதி தாங்க.. புதுவை காவல்துறையிடம் தவெக மனு
புதுவை: புதுச்சேரியில் ரோடுஷோவுக்கு பதிலாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி தவெக மனு அளித்துள்ளது. வரும் 9 ஆம் தேதி உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த பல முறை முயற்சி செய்தும் காவல்துறை அனுமதி மறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதற்காக கட்சியை பலப்படுத்துவது, பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் என அடுத்தடுத்து வேலைகளை செய்து வந்தார்.

விஜய் பிரசாரம்
அதன்படி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இரண்டு மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நடத்தி வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் விஜய் பிரசார கூட்டம் நடத்தி இருந்தார். இதில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் பெண்கள் குழந்தைகள் என 41 பேர் பலியானது தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து விஜய் பிரசார பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக கூறினார். இதேபோல் தமிழக அரசும் அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்தது. இது நீதிமன்ற ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதுவரை தமிழகத்தில் ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை என்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
இதையடுத்து விஜய் காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்தார். அப்போது அவர் அங்குள்ள தனியார் கல்லூரி அரங்கில் 2,000 பேர் மத்தியில் பேசினார். இதன்பிறகு சேலத்தில் விஜய் பிரசாரம் செய்ய தவெக தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் புதுவையில் ரோடு ஷோ நடத்த விஜய் கட்சியினர் திட்டம் வகுத்தனர்.
இதற்காக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பிரசாரம் மேற்கொள்ள விஜய் கட்சியினர் புதுவை காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு அளித்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. ஏற்கனவே கரூர் சம்பவ கூட்ட நெரிசலை காரணம் காட்டி இந்த அனுமதியானது மறுக்கப்பட்டது. இதையடுத்து புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகிய முக்கிய தலைவர்கள் புதுவை முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து அனுமதி கேட்டிருந்தனர்.
பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு கடிதம்
ஆனாலும் புதுவை அரசு ரோடு ஷோ நடத்த அனுமதி கிடையாது என்றும், பொதுக்கூட்டம் வேண்டும் என்றால் நடந்த்துங்கள் என கூறியது. தொடர்ந்து பலமுறை அனுமதி கேட்டும் கிடைக்காததால் தற்போது ரோடு ஷோவுக்கு பதிலாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு இன்று தவெக சார்பில் புதுவை காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் சந்திப்பு எப்போது?
புதுவையில் வரும் 9 ஆம் தேதி உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ள அனுமதி கேட்டு மனுவை தவெகவினர் அளித்துள்ளனர். சென்னையில் செங்கோட்டையன் தலைமையில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், இதில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றதாகவும், இதற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதேபோன்று இனிமேல் ஒரு மாவட்டத்திற்கு 2 அல்லது 3 இடங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications