'ரோடு ஷோ' வழிகாட்டு நெறிமுறைகள் எங்களுக்கு எதுக்கு? நீதிமன்றம் போன தவெக! காரணம் இதுதான்
சென்னை: அரசியல் கட்சிகளின் சாலைவலங்களை முறைப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, தமிழக வெற்றிக் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது.
தவெக சார்பில் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், இது தொடர்பான மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். நிர்மல் குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே முன்னுரை அளிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இது பதிவு செய்யப்பட்ட ஆனால், அங்கீகரிக்கப்படாத புதிய கட்சிகளின் பேச்சுரிமை மற்றும் சமத்துவ உரிமையை பாதிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கூட்டங்களை முறைப்படுத்த நிரந்தர வழிகாட்டு நெறிமுறைகள் வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ஜனவரி 5ஆம் தேதி அன்று தமிழக அரசின் 47 பக்கங்களை கொண்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது.
இந்த நெறிமுறைகளின் படி, பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலம் நடத்த வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 10 முதல் 30 நாட்களுக்கு முன்பே ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அல்லது அந்தப் பகுதி காவல்துறை ஆணையாளர்/கண்காணிப்பாளர் இதற்கு அனுமதி வழங்குவார்கள்.
ஓரிடத்தில் எத்தனை பேர் கூடலாம் என்பதை பொதுப்பணித்துறை அதிகாரி குறிப்பிட வேண்டும். அந்த எண்ணிக்கைக்கு மேல் ஆட்கள் சேரக்கூடாது. கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு போதுமான அளவு நடமாடும் கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகளை கட்சியினர் செய்திருக்க வேண்டும். ஆம்புல்னஸ் வசதி, முதலுதவி சிகிச்சை முகாம் மற்றும் அவசர கால வெளியேறும் வழிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களே முழு பொறுப்பேற்க வேண்டும். பொது சொத்துக்களுக்கோ, அல்லது தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால், அதற்கான இழப்பை கட்சியினர் வழங்க வேண்டும். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.
சாலைகளில் ஊர்வலம் செல்லும்போது, பொதுமக்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படக்கூடாது. போக்குவரத்தை சீர் செய்ய தேவையான தன்னார்வலர்களை கட்சியினர் நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications