இரட்டை வேடம் போட்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா - விஜய் சீண்டல்!
சென்னை: அண்ணா பிறந்தநாளையொட்டி, 'மக்களிடம் செல்' என்ற அவரது அரசியல் மந்திரத்தைப் பின்பற்றி 1967 தேர்தல் அரசியல் வெற்றி விளைவை, ஆட்சி மாற்றத்தை மக்கள் ஆதரவுடன் மீண்டும் தமிழகத்தில் நிகழ்த்திக் காட்ட உறுதி ஏற்போம் எனத் தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாள் இன்று (செப்டம்பர் 15) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அண்ணாவுக்குப் புகழ்மாலை சூட்டிப் பதிவிட்டு வருகின்றனர். அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1967ல் ஆட்சிக்கு வந்து நவீன தமிழ்நாட்டிற்கான அடித்தளத்தை அமைத்தவர் அண்ணா. சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், செயல் வீரர், முதலமைச்சர் எனப் பல்வேறு சிறப்புகளை பெற்றிருந்தார். தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தத்திற்கு வித்திட்ட தலைவர். சுய மரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக மாற்றியதில் முக்கிய பங்காற்றியவர். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை தமிழகத்தில் வேரூன்றுவதற்கு வித்திட்டவர். இந்நிலையில் ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் உடல்நலக் குறைவால் காலமானார்.
அண்ணா மறைந்து 56 ஆண்டுகள் கடந்தபின்னரும் இன்றைக்கும் அவரது பெயர் நாள்தோறும் நினைவுகூரப்படுகிறது. அண்ணா தொடங்கிய கட்சியும், அண்ணா பெயரில் தொடங்கப்பட்ட கட்சியுமே மாற்றி மாற்றி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்து வருகின்றன. புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் வரை, அண்ணா புகழையே பாடி வருகின்றனர். இந்நிலையில், அண்ணா பிறந்தநாளையொட்டி, 1967 தேர்தல் போல, ஆட்சி மாற்றத்தை தமிழ்நாட்டில் நிகழ்த்திக் காட்ட உறுதியேற்போம் எனத் தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
— TVK Vijay (@TVKVijayHQ) September 15, 2025
இதுதொடர்பாக இன்று தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், "மாநில் உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியவர். இருமொழிக் கொள்கையைத் தமிழகத்திற்குத் தந்தவர். சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியவர். கொள்கை வழி நின்றவர். கனிவின் திருவுருவம். தமிழ்நாடு என்று சட்டப்படி பெயர் மாற்றியவர். சமூக நீதியைக் கொள்கையாகக் கொண்டிருந்தவர். குடும்ப ஆதிக்கமற்ற அற்புத அரசியல் தலைவர். இரட்டை வேடம் போட்டுத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல் அவர்களுக்காக உண்மையாக உழைத்தவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா.
தேர்தல் அரசியலில் அசாத்திய வியூகத்தை வகுத்து, மாபெரும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு வழிவகுத்த பேரறிஞரின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். 'மக்களிடம் செல்' என்ற அவரது அரசியல் மந்திரத்தைப் பின்பற்றி 1967 தேர்தல் அரசியல் வெற்றி விளைவை, ஆட்சி மாற்றத்தை மக்கள் ஆதரவுடன் மீண்டும் தமிழகத்தில் நிகழ்த்திக் காட்ட உறுதி ஏற்போம்." எனத் தெரிவித்துள்ளார் விஜய்.












Click it and Unblock the Notifications