பெரியார் புத்தக வெளியீடு.. செப்டம்பரில் ஈரோடு செல்லும் தவெக தலைவர் விஜய்? திமுகவுக்கு செக்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அடுத்ததாக பெரியார் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஈரோட்டில் செப்டம்பர் 17ல் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பிரபல தனியார் பத்திரிகை நிறுவனம் சார்பாக நடத்தப்படும் பெரியார் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு நடத்தப்பட்டுள்ள நிலையில், அது அக்கட்சி நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் இன்னும் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விஜய் களத்திற்கு வந்து மக்களை சந்திக்கும் போது தற்போது இருக்கும் இளைஞர்கள், பெண்கள் தரப்பின் வாக்குகள் இன்னும் அதிகரிக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் அடுத்தக் கட்டமாக எப்போது மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொகுதி வாரியாக தொடங்குவார் என்பதே கேள்வியாக உள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக விஜய்யும் தவெக செயலி வெளியீட்டு விழாவில் பேசி இருந்தார்.
இந்த நிலையில் மக்கள் சந்திப்பு பயணத்திற்கு முன்பாக விஜய் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு திட்டமிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அரசியலுக்கு வந்தபின் தனியார் பத்திரிகை நிறுவனம் சார்பாகவும், ஆதவ் அர்ஜுனா சார்பாக நடத்தப்பட்ட அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். தற்போது மீண்டும் அதே நிறுவனம் தரப்பில் பெரியார் குறித்த புத்தகம் வெளியிடப்படவுள்ளது.
செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு இந்த புத்தகம் அவரின் சொந்த ஊரான ஈரோட்டில் மாவட்டத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விஜய் செப்டம்பர் 16ஆம் தேதியே ஈரோடு மாவட்டம் செல்ல உள்ளதாகவும் அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் கூறப்படுகிறது. விஜய் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
திமுக தரப்பில் நடத்தப்படும் முப்பெரும் விழா செப்டம்பர் 17ல் நடக்கிறது. அதே நாளில் விஜய் பெரியார் புத்தக வெளியீட்டு விழாவை நடத்த உள்ளார். இதனிடையே விஜய் தவெக வேட்பாளர் பட்டியலையும் தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். மதுரை மாநாட்டிலேயே 2ஆம் கட்டத் தலைவர்கள் இல்லாதது குறித்து விஜய் பேச்சில் தெரிந்தது. இதனால் மாவட்டச் செயலாளர்கள் கடந்து ஒவ்வொரு தொகுதியிலும் கொஞ்சம் அடையாளம் மற்றும் மக்கள் ஆதரவு இருக்கும் முகங்களை விஜய் தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications