சென்னையில் கேட்கும் விசில் சத்தம்.. பெரம்பூர் தவிர்த்து தவெகவுக்கு சாதகமாக இருக்கும் தொகுதிகள் எவை?
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கும் சூழலில், Axis My India உட்பட ஏராளமான எக்ஸிட் போல்களிலும் தவெகவுக்கு சில சீட்டுகள் கொடுக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் பெரம்பூர் தவிர்த்து வேறு எந்தெந்த தொகுதிகளில் தவெக வெல்ல வாய்ப்புள்ளது என்பதை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமாக 4.88 கோடி வாக்களித்த நிலையில், 85.15% வாக்குகள் பதிவாகியது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. அதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தவெக 5 தொகுதிகள் வரை வெல்லும் என்று கூறப்பட்டிருக்கிறது.

அந்த அடிப்படையில் தவெகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து பார்க்கலாம். பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்த்து திமுக நேரடியாக போட்டியிட்டாலும், அங்கு அதிமுக களமிறங்காதது தவெகவுக்கு சாதகமாக மாறி இருக்கிறது. ஏனென்றால் பாமக தரப்பில் அறிமுகமே இல்லாத திலகபாமா போட்டியிடுவதால், அதிமுகவின் வாக்குகள் கூட விஜய்க்கு செல்லக் கூடும்.
அதுமட்டுமல்லாமல் பெரம்பூர் தொகுதியில் விஜய் கட்டாயம் வெல்ல வேண்டும் என்று தவெக களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி இருக்கிறது. வைட்டமின் எம் செலவழிக்கப்பட்ட போதும், திமுகவுக்கு களம் சாதகமாக இல்லை என்று தெரிகிறது. ஆனால் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளை எதிர்த்து விஜய் களமிறங்கி இருக்கிறார்.
இதில் திமுக சிட்டிங் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் முந்துவதாக தெரிகிறது. ஆனால் கடைசி நேரத்தில் விஜய்க்கு சாதகமாகவும் களம் மாறக் கூடும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். சென்னையில் தி நகர் தொகுதியில் தவெகவுக்கு சாதகமான அலை வீசி வருகிறது. ஏனென்றால் தி நகர் தொகுதியில் மொத்தமாகவே 1.32 லட்சம் வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
அதிமுக, அதிமுக, தவெக மற்றும் நாதக ஆகிய 4 கட்சிகளும் நேரடி போட்டியில் உள்ளன. இந்த தொகுதியில் அதிமுகவை விடவும் தவெக களத்தில் முந்துவது தேர்தல் நாளன்றே தெரிந்தது. இந்த தொகுதியில் 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வாக்குகள் வரை பெற்றால், எளிதாக வெல்ல முடியும். இதனை கணக்கில் கொண்டே புஸ்ஸி ஆனந்த் தி நகரில் பணியாற்றி வந்தார்.
இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆதரவு இருப்பதால், தி நகர் தொகுதி தவெக வசம் செல்லக் கூடும். அதேபோல் நெல்லை தொகுதியில் தவெக சார்பாக போட்டியிடும் ஆர்.எஸ்.முருகன் களத்தில் முந்துவதாக தெரிகிறது. இங்கு திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் அக்கட்சியினரே போதுமான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. மறுபக்கம் சமூக வாக்குகளை ஆர்.எஸ்.முருகன் அறுவடை செய்கிறார்.
இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகளும் ஆர்.எஸ்.முருகனுக்கு ஆதரவாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஒப்பந்தத்தாரர்களில் ஒருவரான ஆர்.எஸ்.முருகன் கடைசி நேரத்தில் வைட்டமின் "எம்" இறக்கி இருக்கிறார். அது திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களை விடவும் அதிகம். ரூ.2,500 வரை செலவு செய்திருப்பதால், நெல்லையில் விசில் சத்தம் அதிகமாகவே கேட்கிறது.
இவை கடந்து ஆவடி, அம்பத்தூர், மாதவரம், அண்ணா நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர், திருப்போரூர், ஸ்ரீரங்கம், மதுரை தெற்கு, ராதாபுரம், எழும்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் தவெக கடுமையான போட்டியை அளித்திருக்கிறது. தென் மாவட்டங்களில் அதிமுக வலுவிழந்து இருக்கும் தொகுதிகளில் தவெக அதிக வாக்குகளை தன்பக்கம் ஈர்த்திருப்பதாக கள நிலவரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications