“எங்க குடும்பத்துக்கு MLA, MP பதவிகளோ மத்திய அமைச்சர் ஆசையோ எதுவும் இல்லை” - விஜய பிரபாகரன் பேச்சு
சென்னை: "எங்களது குடும்பத்துக்கு எம்.எல்.ஏ, எம்.பி பதவிகளோ மத்திய அமைச்சராக வேண்டும் என்ற ஆசையோ எதுவும் இல்லை" என தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் இன்னும் எந்தக் கூட்டணியிலும் சேராமலேயே இருந்து வருகிறது. ஏற்கனவே, ஜனவரி 9 ஆம் தேதி நடந்த தேமுதிகவின் 'மக்கள் உரிமை மீட்பு' மாநட்டிலேயே கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என அக்கட்சியினர் தொடர்ந்து கூறி வந்தனர்.

ஆனால், அந்த மாநாட்டில் கடைசி வரை கூட்டணி நிலைப்பாடு பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளிடமும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை தேமுதிக நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில காலங்களே உள்ள நிலையில், கூட்டணி குறித்து அறிவிக்க தேமுதிக காலம் தாழ்த்தி வருவதாக விமர்சங்கள் எழுந்து வருகின்றன.
சென்னை பம்மலில் திருமண நிகழ்ச்சியில் இன்று தேமுதிக இளைஞர் அணிச் செயலாளர் விஜய பிரபாகரன் பேசுகையில், "நாம் எப்போதும் சத்திரியனாக மட்டும் இருப்பதை விட காலத்தின் தேவைக்கேற்ப சாணக்கியனாக மாற வேண்டும். இன்னும் கொஞ்சம் காலம் மட்டும் பொறுமையாக இருங்கள், விரைவில் ஒரு நல்ல அறிவிப்பு வெளியாகும்.
கூட்டணி தொடர்பாக நல்ல முடிவை பிரேமலதா விஜயகாந்த் சொல்லுவாங்க. அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட்டு, எதற்காக இந்த கட்சியை ஆரம்பிச்சோமோ, அந்த இலக்கை அடைந்து, தேர்தல் முடிந்து கேப்டன் ஆசியோடு வெற்றியை நமதாக்குவோம்.
நானோ, எனது குடும்பத்தினரோ எம்.எல்.ஏ, எம்.பி அல்லது அமைச்சராக வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இல்லை. ஆனால் கட்சிக்காக உண்மையாக உழைத்த ஒவ்வொரு தொண்டனையும் சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பார்க்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம்." என விஜய பிரபாகரன் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications