இந்த ஒரு விஷயத்தில் மட்டும் விஜயகாந்த் கறார்! வார நாட்களில் இங்கென்ன வேலை? சுவாரஸ்ய ஃபிளாஷ்பேக்!
சென்னை: விஜயகாந்தின் மறைவு மக்கள் மத்தியில் அவர் குறித்து கேட்டறிந்த, படித்த, பார்த்த எத்தனையோ பல தகவல்களை நெஞ்சில் அலைமோத வைக்கின்றன. அந்த வகையில் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னர் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் விஜயகாந்த் மிகவும் கறாராக நடந்துகொண்டார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதாவது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மன்ற வேலைகளை சனி, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை தினங்களில் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார். திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ரசிகர் மன்ற வேலைகளை தனது ரசிகர்கள் செய்யக்கூடாது என்றும் அவரவர் தொழிலையும், குடும்பத்தினரையும் தான் வார நாட்களில் கவனிக்க வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.

இப்படித்தான் ஒரு முறை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரசிகர் ஒருவர் ஆர்வக்கோளாறில் விஜயகாந்தை சந்திக்க வார நாட்களில் சென்னை வந்துவிட்டார். அவரை அழைத்த விஜயகாந்த், ''என் தொழில் நடிக்கிறது அதை நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன், அதேபோல் ஊரில் உன் தொழில் என்னவோ அதை முதலில் கவனி, லீவு நாள்ல வந்து என்னை பார்த்தால் போதும்'' என அட்வைஸ் அளித்து ஊருக்கு அனுப்பி வைத்த நிகழ்வும் நடந்துள்ளது.
தன்னாலும், தனது மன்றத்தாலும் எந்தவொரு ரசிகரின் குடும்பமும் பாதிக்கக் கூடாது என்பதில் விஜயகாந்த் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தார். வந்த வரை லாபம், மன்ற வேலைகளை மட்டும் பார்க்கட்டும் என நினைத்துவிடாமல் தனது ரசிகர்களை தொழில் செய்ய ஊக்குவித்தவர் விஜயகாந்த். ஏதாவது ஒரு தொழில் செய்துக் கொண்டே மன்ற வேலைகளை பாருங்கள், முழு நேரமும் எனக்காக யாரும் நேரம் செலவிட வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு பாடமெடுத்தவர் விஜயகாந்த்.
அந்த ரசிகர்கள் தான் பிற்காலத்தில் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது தொண்டர்களாக இணைந்து இன்று வரை தேமுதிகவில் இருந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications