"எலும்புந்தோலுமாய்".. நம்ம விஜயகாந்தா இது.. நம்பவே முடியல..ங்க.. அப்படியே ஷாக்கான ரசிகர்கள்
விஜயகாந்த்தின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது.. இதை பார்த்த தொண்டர்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுவாக தமிழக மக்களுக்கு விஜயகாந்த் மேல் ஸ்பெஷல் பாசம் உள்ளது... அபரிமிதமான அன்பும், இனம்புரியாத அக்கறையும் இழையோடி உள்ளது..
அவருக்கு கடந்த சில காலங்களாகவே, உடம்பு சரியில்லாமல் உள்ளது.. விஜயகாந்த் எப்போதெல்லாம் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்கிறாரோ, அப்போதெல்லாம் கோயிலுக்கு போய், அவருக்காக பிரார்த்தனை செய்து வேண்டி கொள்ளும் அளவுக்கு அக்கறை மிகுந்தவர்கள் தமிழக மக்கள்.

வெள்ளந்தி
இது, வெறும் நடிகர் என்பதால் மட்டும் விஜயகாந்த்துக்கு கிடைத்த பெருமை கிடையாது.. அவருடைய வெள்ளந்தி பேச்சும், கசியும் ஈர மனசுதான் இன்றுவரை விஜயகாந்த் பெயரை உச்சரிக்க வைத்து வருகிறது.. அதேசமயம், தேமுதிக என்ற கட்சி ஆரம்பித்தவுடன் திடீரென தனக்காக போட்டுக்கொண்ட திரையும் கிடையாது.. இயல்பாகவே விஜயகாந்த்துக்கு உள்ள மனிதநேயம்தான், இப்போதுவரை தொடர்கிறது.

கசியும் ஈரம்
எத்தனையோ சறுக்கல்கள், எத்தனையோ கஷ்டங்கள், எத்தனையோ வலிகள், எத்தனையோ ஏமாற்றங்களை கடந்துதான், கேப்டன் என்ற அடைமொழிக்குள் விஜயகாந்த்தால் உள்ளே வர முடிந்தது.. எத்தனையோ திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகளையும், வாழ்க்கையையும் வழங்கியவர்.. நூற்றுக்கணக்கான இயக்குனர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு தூணாக நின்றவர்.. சினிமாவில் இருந்தபோதே, கண்ணுக்கு தெரியாத எத்தனையோ உதவிகளை, எத்தனையோ மக்களுக்கு செய்தவர் விஜயகாந்த்.

அபூர்வம்
அவரது இலவச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, உயிர்பெற்று, இன்று நடமாடுபவர்கள் லட்சத்திற்கும் மேல் என்று பெருமையாகவே சொல்லலாம்! அரசியலையும் தாண்டி ஒருவர் விரும்பப்படுவது இந்த காலத்தில் அபூர்வம்.. அதில், மிகமிக முக்கியமானவர் விஜயகாந்த்.. கடந்த சில வருடங்களாகவே உடம்பு சரியில்லாமல் போய்விடவும் தளர ஆரம்பித்துவிட்டார்.. ஏராளமான சிகிச்சைகள் எடுத்து கொள்வதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.. எனினும் முன்புபோல் அவர் வெளியே வருவதில்லை.

எலும்பும் தோலுமாய்..
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், விஜயகாந்த் 70வது பிறந்தநாளின்போது, ரசிகர்களை, தொண்டர்களை சந்தித்தார்.. விஜயகாந்தால் யாரிடமும் பேச முடியவில்லை என்றாலும், தொண்டர்களின் வாழ்த்தொலியை கேட்டு பூரித்து போனார்.. உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கினார்.. கூட்டத்தினரை பார்த்து "தம்ப்ஸ்அப்" சின்னத்தில் விரல் காட்டினார்.. பிறகு இரு கைகளையும் கூப்பி கூட்டத்தினருக்கு வணக்கம் சொன்னார்.. ஆனால், 10 விரல்களையும் ஒன்றாக சேர்த்து அவரால் வணக்கம் தெரிவிக்க முடியவில்லை.. பிறகு, இரு கைகளையும் தலைக்கு மேல் குவித்து வணக்கம் சொல்லி கொண்டே இருந்தார்.

தள்ளு தள்ளு
நிர்வாகிகள் விஜயகாந்த்தை திடீரென சூழ்ந்துகொள்ளவும், அங்கிருந்த தொண்டர்களை விஜயகாந்த்தால் பார்க்க முடியவில்லை. உடனே, பக்கத்தில் இருந்த நபரின் கையை பிடித்து "தள்ளு.. தள்ளு" என்று சொல்லி நகர சொன்னார்.. இதை பார்த்து தொண்டர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.. எனினும், அன்றைய தினமும் தளர்ந்துபோய்தான் விஜயகாந்த் காணப்பட்டார். "மாசத்துக்கு ஒருமுறையாவது, கேப்டனை எங்கள் கண்ணால் காட்டுங்கள், எங்களுக்கு வேற எதுவுமே வேணாம், எங்க தெய்வத்தை நாங்க கண்ணால் பார்த்தாலே போதும்" என்று தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும் கண்ணீருடன் உருகி கோரிக்கை வைத்ததை அன்றையதினம் காண முடிந்தது.

கேக் ஊட்டினார்
இந்நிலையில், விஜயகாந்தின் ஒரு போட்டோ தற்போது வெளியாகி உள்ளது.. நேற்றுமுன்தினம், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.. அந்த போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டகிராமிலும் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு போட்டோவில் மகனுக்கு கேக் ஊட்டுகிறார் விஜயகாந்த்.. வழக்கம்போல், கூலிங்கிளாஸ் அணிந்திருக்கிறார்.. மாஸ்க் போட்டுள்ளார்.. ஆனால், விஜயகாந்த் பார்ப்பதற்கு மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார்.

கூலிங்கிளாஸ்
பிறந்தநாள் அன்று பார்த்ததைவிட, இப்போது மேலும் உடல் எடை குறைந்து காணப்படுகிறார்.. சிகிச்சை, மருந்து, மாத்திரைகள் எடுத்து கொள்வதால், தோற்றத்தில் மாறுபாடுகள் ஏற்படலாம் என்றாலும், இந்த போட்டோவில் அளவுக்கு அதிகமாக மெலிந்திருந்தது பலரது கண்களையும் கலங்க வைத்து வருகிறது.. "கேப்டன், இப்படி எங்களால் உங்களை பார்க்க முடியவில்லை. அதே கம்பீரத்துடன் சீக்கிரமா வந்துடுங்க கேப்டன்" என்று உரிமையுடன் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

வெள்ளந்தி மனசு
பொதுவாக, ஒரு தேர்தலில் தோல்வி அடைந்தாலே சில கட்சிகளின் அலுவலகமே மொத்தமாக காலியாகி விடும்.. ஆனால், அடுத்தடுத்த தோல்விகளை தேமுதிக சந்தித்தும், இந்த அளவுக்கு தொண்டர்கள் திரண்டு, கண்ணீருடன் கோரிக்கை வைக்கிறார்கள். அது விஜயகாந்த்தின் பாசத்துக்காகத்தான்.. ஒரு கட்சி தலைவரை, தலைவர் என்றுகூட சொல்லாமல் "தெய்வம்" என்று சொல்கிறார்கள் என்றால், அதுவும் விஜயகாந்தின் மனசுக்காகத்தான்..!!












Click it and Unblock the Notifications