Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயகாந்த் பிறந்த நாள்..சொந்த காலில் அரசியலில் தடம் பதித்தவர்: அரசியல் எழுச்சியும்...தொடர் சரிவும்

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமா வரலாற்றில் தடம்பதித்த விஜயகாந்த் தனி ஒரு மனிதனாக அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கி எதிர்க்கட்சித்தலைவராக அமர்ந்தார். மிகச்சிறந்த பேச்சாளரான விஜயகாந்த் உடல் நலிவுற்ற நிலையில் அவர் ஆரம்பித்த தேமுதிக மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இன்று அவரது பிறந்த நாளில் அவரது அரசியல் பயணம் எழுச்சி, வீழ்ச்சி குறித்து பார்ப்போம்.

Recommended Video

    கலைஞர் மீது தூய்மையான பாசத்தை வெளிப்படுத்தியவர்.. Vijayakanth-க்கு Udhayanidhi Stalin வாழ்த்து

    தமிழக அரசியல் வரலாற்றில் தனி மனிதராக ஒருவர் கட்சியைத் தொடங்கி அதை நல்ல வாக்கு சதவீதத்துடன் முன்னுக்குக் கொண்டுவந்து தமிழக எதிர்க்கட்சியாக அமர்த்திய பெருமை விஜயகாந்த் ஒருவரை மட்டுமே சாரும். அதன் பின்னர் சீமான், கமல் போன்றோர் ஆரம்பித்து நடத்தி வருகின்றனர் ஆனால் ஆரம்பித்து வெற்றிகரமாக செயல்படுத்திய முன்னோடி விஜயகாந்த்.

    Vijaykanth makes political mark on his own feet: Rise and fall

    ஏன் எம்ஜிஆர் ஆரம்பிக்க வில்லையா என கேட்கலாம். எம்ஜிஆருக்குள்ள பெருமை சாதனை மிகப்பெரியது. இந்திய வரலாற்றில் சினிமா துறையிலிருந்து கட்சி அரசியல் மூலம் ஆட்சியைப்பிடித்த முதல்வர் அவர்தான். முதல்வரும் அவர்தான். ஆனால் அவர் வளர்ந்தது, வளர்த்தது திமுக, அதன் பின்னர் வெளியேற்றப்பட்டு அதிமுகவை தொடங்கி ஆட்சியைப்பிடிப்பதால் இந்த நடைமுறைக்குள் அவரைச் சொல்ல முடியாது.

    திராவிடர் கழகம் பெரியாரால் வளர்த்தெடுக்கப்பட்டாலும் அது ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வந்தது. திமுக அண்ணாவால் உருவாக்கப்பட்டாலும் அது திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்தது. எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினாலும் அது திமுகவிலிருந்து பிரிந்து வந்தது. அதன்பின் தமாகாவை மூப்பனார் உருவாக்கி பெரிய அளவில் வெற்றியைக் கொடுத்தாலும் அதுவும் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த கட்சியே.

    ஆனால், நடிகராக பின்புலம் இல்லாமல் திரைத்துறையில் கால் பதித்து வளர்ந்து மற்றவர்களையும் வளர்த்து, உதவி செய்து அதன் மூலம் புகழ்பெற்று, புதியவர்களை திரைத்துறையில் கைகொடுத்து தூக்கிவிட்டு அவர்களில் பலர் திரைத்துறையில் சாதிக்க காரணமாக இருந்தவர் விஜயகாந்த்.

    சரத்குமார், விஜய் உள்ளிட்டோருக்காக கவுரவ வேடத்தில் அறிமுகமாகி அவர்கள் திரைத்துறையில் வெற்றிப்பெற உதவியுள்ளார் விஜயகாந்த். முன்னணி நடிகர்கள் யாரும் அவ்வாறு செய்ததில்லை. விஜயகாந்த் அப்போது உச்ச நடிகர்.

    அதன் பின்னர் நடிகர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று நடிகர் சங்க கடனை அடைத்தது, அதற்காக மலேஷியாவில் அப்போதிய உச்சநடிகர்களை ஒருங்கிணைத்து அழைத்துச் சென்று தலைமையேற்று நடத்தியது. கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் ஒருசேர நட்பு பாராட்டியது என அவரது ஆளுமை நல்ல அரசியல் தலைவராக வர தகுதிப்பெற்றவர் என்பதை நிருபித்தது.

    அரசியலில் புகுந்து தனது நற்பணி மன்றம் மூலம் மக்களுக்கு சேவை செய்யத் தொடங்கி எம்ஜிஆருக்குப் பிறகு அதிகம் உதவி செய்பவர் என்ற பெயரும், நடிகர் சங்கத்தில் ஆளுமை என்ற பெயரையும் ஒருசேரத் தட்டிச் சென்றவர் விஜயகாந்த் மட்டுமே. அதன் பின்னர் சீமான், கமல், சரத்குமார் என வரிசை நீண்டாலும் முதல் சாதனையும், பெருமையும் விஜயகாந்தையே சாரும்.

    2005ஆம் ஆண்டு கட்சி தொடங்கிய விஜயகாந்த் கடவுளுடன் மட்டுமே கூட்டணி எனக்கூறி 234 தொகுதிகளிலும் தனித்து நின்றார். தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வார்டு வாரியாக உறுப்பினர்களை தேமுதிக கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இருவரின் சறுக்கலுக்கும் விஜயகாந்த் காரணமாக இருந்தார். முக்கியமாகப் பெரிதும் நம்பிக்கையுடன் இருந்த அதிமுக தோல்வி அடைந்தது. மேடைப்பேச்சில் வித்தியாசமாக பேசும் விஜயகாந்த் ஆளுமைமிக்க பேச்சாளராக விளங்கினார். ஆவேசமாக பாயிண்டுகளை அவர் எடுத்தும் வைக்கும் விதம் சினிமா வசனம் போலவே சிறப்பாக இருக்கும்.

    2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 27,64,000 வாக்குகளை தேமுதிக பெற்றது. இது மொத்த வாக்கு சதவீதத்தில் 8.33 சதவிகிதம் ஆகும். இதனால் விஜயகாந்த் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் நடித்ததால் கேப்டன் என அன்போடும் எம்ஜிஆர் போல் உதவி செய்ததால் கருப்பு எம்ஜிஆர் என்றும் அழைக்கப்பட்டார்.

    அடுத்து 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக எல்லோரையும் பிரமிப்பாகப் பார்க்க வைத்தது. பெரும்பாலான தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். அந்தத் தேர்தலில் 30,73,479 வாக்குகளை விஜயகாந்த் பெற்றார். இது பதிவான மொத்த வாக்குகளில் 10.1 சதவீதமாகும். தேமுதிக மிகப்பெரிய கட்சியாக தமிழக அரசியலில் உருவெடுத்தது.

    திமுகவின் 2006-2011 ஆட்சியால் கோபமுற்ற எதிர்க்கட்சிகள் அதிமுகவுடன் இணையத் தொடங்கின. விஜயகாந்தும் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிற ஒரே எண்ணத்துடன் அதிமுகவுடன் இணைந்தார். இந்தத் தேர்தலில் 41 இடங்களில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 29 இடங்களை தேமுதிக கைப்பற்றியது. வாக்கு சதவீதம் 7.88 ஆகக் குறைந்தது. அதனால் அரசியல் மரியாதையும் உயர்ந்தது.

    விஜயகாந்த் கொடுத்த வாய்ப்பால் பல இளைஞர்கள் சட்டப்பேரவை வாசலை மிதித்தனர். 1962, 67 தேர்தல்களில் திமுகவில் இளைஞர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆனதுபோல், அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியபோது 1977இல் சட்டப்பேரவைக்கு வந்த இளைஞர்கள்போல், 2011ஆம் ஆண்டிலும் தேமுதிகவில் அதிக அளவிலான இளைஞர்கள் சட்டப்பேரவைக்கு முதன்முறையாகச் சென்றனர். சைக்கிள் கடை தொழிலாளி ஒருவரை சட்டப்பேரவை உறுப்பினர் ஆக்கினார் விஜயகாந்த்.

    அன்று அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பல புதுமுகங்கள் இன்று திமுக, அதிமுகவில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்களாக உள்ளனர். 2011ஆம் ஆண்டு எதிர்க்கட்சி வரிசையில் திமுகவை விடப் பெரிய கட்சியாக அமர்ந்தது தேமுதிக. விஜயகாந்த் எதிர்க்கட்சித்தலைவரானார். திமுக மூன்றாம் இடத்தில் இருந்தது.

    இதன்பின்னர் கட்சியை லாவகமாக கொண்டுச் செல்லும் பொறுப்பு விஜயகாந்துக்கு வந்தது. உடன் பண்ருட்டி ராமச்சந்திரன் என்கிற மிக அனுபவம் மிக்க தலைவர் இருந்தார். ஆளும் அரசோடு நட்பு பாராட்டி மக்களுக்கான பிரச்சினைகளுக்காகப் பேசி கட்சியை வளர்ப்பதற்குக் கிடைத்த வாய்ப்பை அதிமுகவுடன் ஏற்பட்ட மோதல் போக்கினால் தேமுதிக இழந்தது.

    சிறு சிறு பிரச்சினைகளில் தேமுதிக உறுப்பினர்களை வம்பிழுத்தது ஆளும் அதிமுக. தேமுதிகவை எதிர்க்கட்சியாக அல்லாமல் தங்கள் அரசை ஆதரிக்கும் சக கட்சிபோல் இருக்கவேண்டும் என எண்ணியது அதிமுக தலைமை. ஆனால் தேமுதிகவும், விஜயகாந்தும் அப்படி வளரவில்லையே. தங்களிடம் கூட்டணி அமைத்து வெற்றியும் பெற்றுவிட்டு அலட்சியம் செய்வதாக எண்ணினர் தேமுதிகவினர்.

    விஜயகாந்துக்கும் அந்த எண்ணம் இருந்தது. தேமுதிகவை அதன் சுதந்திரமான செயல்பட்டுடன் நல்ல எதிர்க்கட்சியாக கொண்டுச் செல்வது, தனது இமேஜ் போன்றவற்றில் விஜயகாந்துக்கு பெரும் குழப்பம் இருந்தது. எதிரில் ஆளுங்கட்சியாக இருப்பது அதிமுக, அதன் முதல்வர் ஜெயலலிதா எவரையும் எதிர்க்கொள்ளும் வலிமை மிக்கவர் என்பது யதார்த்தம்.

    இதில் கட்சியை பக்குவமாக நகர்த்திச் சென்று இமேஜை வளர்க்கும் வாய்ப்பை சரியாக தேமுதிக பயன்படுத்திக்கொள்ள வில்லை என்பதே உண்மை. தேமுதிகவின் இளம் சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக அதிமுகவினருடன் வார்த்தை மோதலில் ஈடுபட அது முதல்வர் ஜெயலலிதாவுக்கு கவுரவ பிரச்சினையாக மாற அப்போது விஜய்காந்தும் சபையில் இருக்க இருவரும் மாறி மாறி சவால் விட பிரச்சினை வெடித்து பூதாகரமானது.

    அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் விஜயகாந்தை விமர்சிக்க வெகுண்டெழுந்த விஜயகாந்த் பதிலளிக்க அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அத்தோடு தேமுதிகவின் சட்டமன்ற செயல்பாடு முடங்கியது. அதன் பின்னர் ஒரு தேமுதிக உறுப்பினர் கூட சட்டப்பேரவையில் இடம்பெறாதது பெரும் சோகம்.

    அன்று நடந்த மோதலை உணர்ச்சிகரமாக எதிர்கொண்ட விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்தை புறக்கணித்தார். தொடர்ந்து அதிமுக, திமுகவைக் கடுமையாக எதிர்த்தார். பத்திரிகைகளை எதிர்த்தார். அதனால் அவரது இமேஜ் சரிய ஆரம்பித்தது. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக, மதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டார். அதிமுகவின் வலுவான வெற்றியால் தேமுதிக வாக்கு சதவீதம் சரிந்தது.

    அதன் பின் 2016ஆம் ஆண்டு திமுக தலைவர் பகிரங்க அழைப்பு விடுத்தும் இடையில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் காரணமாக மக்கள் நலக் கூட்டணிக்குச் சென்றார் விஜயகாந்த். இதனால் தேமுதிக ஒரு தொகுதிகூட வெற்றிபெற முடியாமல் போனது, அதுவுமல்லமல் அது திமுகவின் வெற்றியையும் பாதித்தது. அதிமுக இரண்டாம் முறை ஆட்சி அமைய வாய்ப்பாக அமைந்தது.

    அரசியல் தலைவர்கள் எடுக்கும் சில சிறிய தவறுகள் கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இது அமைந்தது. தேமுதிகவின் வாக்கு கணிசமாகக் கரைந்தது. அந்த நேரத்தில் விஜயகாந்தின் உடல்நலனும் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் அவரால் இயல்பான அரசியலுக்கு வர இயலாமல் போனது தேமுதிகவுக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது.

    இந்த நேரத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கட்சியின் பல முன்னணி தலைவர்கள் திமுக, அதிமுகவிற்கு தாவி இருந்தனர். கட்சியில் விஜயகாந்துக்கு அடுத்த இடத்தில் பிரபலமான முகம் இல்லாத நிலை இருந்தது. விஜயகாந்தின் உடல் நிலை காரணமாக முழுநேர அரசியலில் ஈடுபட முடியாத நிலை காரணமாக பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் கட்சியின் முகங்களாக மாறினர்.

    2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் ஒரு வாய்ப்பு தேமுதிகவுக்குக் கிடைத்தது. திமுகவுடன் கூட்டணி அமைத்தால் வெற்றிபெற வாய்ப்பு என்கிற நிலை இருந்தும் மக்களின் மனதைப் படிக்காதவர்கள் திடீரென அதிமுக கூட்டணியின் பக்கம் தாவினார்கள். விளைவு மீண்டும் படுதோல்வி. ஒரு காலத்தில் 8% மேல் இருந்த வாக்கு சதவீதம் 2 சதவீதம் என்கிற அளவுக்குக் குறைந்தது.

    மிகப்பெரும் ஆல விருட்சமாக வளரவேண்டிய கட்சி, தலைவரின் உடல்நிலை, அரசியலில் அவ்வப்போது வரும் நிகழ்வுகளில் சரியான முடிவு எடுக்காததால் தடுமாறியது. இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஒரு தவறான முடிவை எடுத்தனர். விஜய்காந்த் முற்றிலும் ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டதால் தேமுதிக தலைமை சரியான முடிவெடுக்க முடியாமல் திமுக பக்கமும் வராமல், அதிமுகவுடனும் முறையாகக் கூட்டணி பற்றிப் பேசாமல் தனித்து விடப்பட்டனர்.

    இதன்பின் அமமுகவுடன் கூட்டணி அமைத்தனர். விஜயகாந்தை வேனில் அமர்த்தி கையசைத்து வாக்குகளைப் பெறலாம் என்கிற எண்ணம் ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் நிலையில் மீண்டும் படுதோல்வியைச் சந்தித்தது தேமுதிக. இம்முறை வாக்கு சதவீதம் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. 0.45 என ஒரு சதவீதத்திற்கும் கீழே சென்றது.

    அரசியல் கட்சிகள் வீழ்வதும் வீறுகொண்டு எழுவதும் புதிதல்ல. ஆனால், தனியொரு மனிதராக விஜயகாந்த் கட்சியை வளர்த்து எதிர்க்கட்சியாக அமர்ந்து பின்னர் அவரது உடல் நிலை, சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்காத நிலை காரணமாக தேமுதிக தடுமாறி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
    விஜயகாந்த் உடல் நிலை காரணமாக தீவிர அரசியலில் ஈடுபட முடியாத நிலையிலும் அவரது கட்சி இன்றும் வட மாவட்டங்களில் தொண்டர்படையுடன் வலுவாக உள்ளது அவர் மீது மக்கள் வைத்துள்ள பாசம் என்றால் மிகையாகாது.
    விஜயகாந்த் காட்டிய வழியில் கமல்ஹாசன், சீமான் போன்றோர் தங்கள் செல்வாக்கால் கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். ஆனால் விஜய்காந்த் தமிழக அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் இனி தனிநபர் கட்சித்தொடங்கி அதேபோல் சாதிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.
    தமிழக திரையுலகிலும், அரசியலிலும் யதார்த்த மனிதர், உதவும் உள்ளம் கொண்டவர், ஆளுமைப்பண்பு மிக்க தலைவர் விஜயகாந்த். அவர் ஏற்படுத்திய தாக்கம் திரையுலகிலும், அரசியலிலும் மிகப்பெரியது.

    இன்று பிறந்தநாள் காணும் விஜய்காந்த் மீண்டு வருவார் அரசியலில் முத்திரை பதிப்பார் என்கிற நம்பிக்கையில் அவரது தொண்டர்கள் உள்ளனர், அது நிச்சயம் நடக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+