போட்டு தாக்கிய விஜய்.. மாதம் 2500 முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் வரை.. புதிய பிராமிஸ்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்புகள் மாநில அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெறும் பிரம்மாண்டமான நிர்வாகிகள் கூட்டத்தில், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியமைக்கக்கூடிய தொலைநோக்குத் திட்டங்களை விஜய் தற்போது அறிவித்துள்ளார்.. 10 அம்ச மக்கள் நல திட்டங்களாக இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று (16.04.2026) மாலை 3 மணிக்கு சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பில் கட்சியின் தேர்தல் அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

முன்னதாக இந்த நிகழ்வில் கலந்துகொள்ள தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி 800 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டிருந்ததால், க்யூஆர் கோடு அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வருவதைத் தவிர்த்து நேரலை வாயிலாகக் கண்டு ஒத்துழைக்குமாறு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்கொண்டிருந்தார்
தவெக தேர்தல் அறிக்கை - மிகப்பெரிய எதிர்பார்ப்பு
தவெக தனது கொள்கை விளக்க மாநாட்டில் முன்வைத்த மதச்சார்பற்ற சமூக நீதி என்ற வலுவான கருத்தியலின் அடிப்படையில் இந்த தேர்தல் அறிக்கை செதுக்கப்பட்டுள்ளது. வெறும் கவர்ச்சித் திட்டங்களாக இல்லாமல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயல் திட்டங்களை விஜய் இதில் முன்வைக்க உள்ளதாகவும், குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட உள்ள ஊதியம் மற்றும் பெண்களுக்கான சிறப்பு உதவித்தொகை குறித்த அறிவிப்புகள் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்றும் முன்கூட்டியே சொல்லப்பட்டது.
இந்த அறிக்கையின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், மற்ற கட்சிகளைப் போல மாநிலம் முழுமைக்குமான பொதுவான வாக்குறுதிகளைத் தாண்டி, ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்துவமான தேவைகளை உணர்ந்து மாவட்ட வாரியான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் வழங்க போவதாக கூறினார்கள்..
மின்சார மானியம்
நிர்வாக ரீதியாக, அரசுத் துறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் ஊழலை வேரறுக்கவும், மக்கள் தங்களின் தேவைகளுக்காக அதிகாரிகளைத் தேடி அலையாத ஒரு வெளிப்படையான சூழலை உருவாக்கவும் தவெக உறுதியளிக்க முடிவு செய்திருந்ததாம்.
மாநில சுயாட்சி மற்றும் சமூக நீதியில் சமரசமற்ற போக்கை எடுத்துள்ள விஜய், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தற்போதைய இடஒதுக்கீடு முறையைப் பாதுகாப்பதற்கான வலுவான உறுதிமொழிகள் உட்பட ஏழை மாணவர்களுக்குத் தரமான உலகத்தரம் வாய்ந்த கல்வி இலவசமாகக் கிடைப்பதற்கான சிறப்புத் திட்டங்களும் இதில் முக்கிய இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மொத்தத்தில், இன்று வெளியாகும் விஜய்யின் தேர்தல் அறிக்கை வெறும் வாக்குறுதிகளின் தொகுப்பு மட்டுமல்லாமல், தமிழகத்தை ஒரு புதிய பாதையில் அழைத்துச் செல்லும் புளூபிரிண்ட் ஆக அமையும் என தவெக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
10 அம்ச மக்கள் நல திட்டங்கள்
இந்நிலையில், தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் விஜய் தனது கட்சியின் சார்பில் 10 அம்ச மக்கள் நலத் திட்டங்களை அறிவித்துள்ளார். அதில, மகளிருக்கு மாதம் ரூ.2,500, இலவச எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் தங்கம் வழங்கும் 'வெற்றி மகளிர்' திட்டம் தொடங்கி, விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி, நெல் மற்றும் கரும்புக்குக் கூடுதல் ஆதார விலை, 5 லட்சம் இலவச சோலார் பம்ப் செட்கள் எனப் பல்வேறு விவசாய நலத்திட்டங்கள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன.
உலகத்தரம் வாய்ந்த இலவச உறைவிடப் பள்ளிகள், ரூ.20 லட்சம் வரையிலான பிணையில்லா கல்விக்கடன் மற்றும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 வரையிலான வேலையில்லா கால நிவாரணம் ஆகியவற்றுடன், 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் ரூ.25 லட்சம் வரையிலான விரிவான மருத்துவக் காப்பீடு போன்றவை சாமானிய மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளன.
குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்ட மறுசீரமைப்பு, ஒப்பந்தப் பணியாளர்கள் பணி நிரந்தரம் போன்ற அரசு ஊழியர் நலன்களுடன், 2036-க்குள் தமிழகப் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்துதல் மற்றும் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சகத்தை உருவாக்குதல் போன்ற தொலைநோக்குப் பார்வையும் இந்த வாக்குறுதிகளில் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக, ரேஷன் பொருட்கள் வீடு தேடி வருதல் மற்றும் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் என்ற உத்தரவாதத்துடன், தமிழகத்தை ஒரு நவீனத் தொழில்நுட்பத் தலைநகராகவும், மக்கள் நலன் பேணும் மாநிலமாகவும் மாற்றும் லட்சியத்தை விஜய் தனது இந்த அதிரடித் திட்டங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications