அரசியல் கட்சி பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்.. தமிழக வெற்றி கழகம்.. 2026 தேர்தலில் போட்டி!
சென்னை: விஜய் தலைமையிலான அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் விஜய். அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் கடந்த பல மாதங்களாகவே வட்டமடிக்கிறது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாணவர்களுக்கு பரிசு, பயிலகம், நூலகம், நிவாரண உதவிகள் என விஜய்யின் நகர்வுகளும் அதை நோக்கியே இருப்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் அரசியல் கட்சிகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.

அண்மையில் சென்னை பனையூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் கட்சியை பிப்ரவரி முதல் வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது குறித்து விஜய் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. விரைவில், விஜய் சார்பாக நிர்வாகிகள் டெல்லி சென்று பதிவு செய்ய உள்ளதாகவும் தெரிகிறது.

விஜய் நடத்திய ஆலோசனையில், அரசியல் கட்சிக்கு 3 பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், இதில் தமிழக முன்னேற்ற கழகம் என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், விஜய் தரப்பில் இதை யாரும் உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், விஜய் தொடங்கவுள்ள அரசியல் கட்சியின் பெயர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வட்டமடித்து வருகின்றன. விஜய்யின் அரசியல் கட்சி பெயர் என சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்கள் நடந்து வரும் சூழலில், அதிகாரப்பூர்வமாக தாங்களே அறிவிக்கும் முடிவில் விஜய் தரப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்யின் கட்சி குறித்து அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும், உற்சாகமும் ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் விஜய்யின் அரசியல் கட்சி தொடர்புடைய பல அப்டேட்கள் வரக்கூடும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார் நடிகர் விஜய். இதுதொடர்பாக, கட்சியின் லெட்டர் ஹெட் உடன் அறிக்கையை வெளியிட்டுள்ளார் விஜய். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டிட்டு வெற்றி பெற்று அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதே நமது இலக்கு எனத் தெரிவித்துள்ளார் விஜய்.
விஜய் தலைமையிலான அரசியல் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குச் சென்றார். ஆவணங்களைச் சமர்ப்பித்து, அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார் புஸ்ஸி ஆனந்த்.












Click it and Unblock the Notifications