அரசியல் என வந்துட்டா.. இதெல்லாம் ரொம்ப முக்கியம்! விஜய் விஷயத்துல இடிக்குதே!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. விமர்சனங்கள் இருப்பினும் சோர்வடையாத விஜய், பிரச்சாரத்தை தொடர்ந்து வருகிறார். அவருடைய பிரச்சாரமும், அரசியல் யுக்தியும் எந்த அளவுக்கு வெற்றிக்கு கைகொடுக்கும் என்பது குறித்து பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
சமீபத்தில் மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டை விஜய் நடத்தியிருந்தார். மாநாட்டுக்கு குவிந்த கூட்டம் அரசியல் தலைவர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியது. இதனை தொடர்ந்து மாவட்ட வாரியாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

உள்ளூர் நிர்வாகிகள்
விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் இதே காலத்தில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் பேச்சை கவனித்தவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்திருக்கும். எங்கு போனாலும், உள்ளூர் நிர்வாகிகளை அவர் மென்ஷன் செய்யாமல் தனது பேச்சை தொடங்கியது கிடையாது. மாவட்ட செயலாளர், வட்ட செயலாளர் தொடங்கி களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் வரை எடப்பாடி உச்சரிக்கிறார். திமுக தலைவர்களும் அப்படித்தான். ஆனால் விஜய் பேச்சில் அப்படி எதுவும் பார்க்க முடியவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக விஜய், தொடக்கத்திலேயே விளக்கமளித்திருந்தார். அதாவது, நிர்வாகிகளின் பெயர்களை தொடர்ச்சியாக "அவர்களே, இவர்களே" என்றெல்லாம் வாசிக்கப்போவதில்லை என்று கூறியிருந்தார். ஆனால் கள நிர்வாகிகள் இல்லாமல் கட்சி கிடையாது. ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி விஜய் வாக்கு கேட்கப்போகிறாரா? கிடையாது. அக்கட்சியின் நிர்வாகிகள்தான் வாக்கு கேட்பார்கள். மக்கள் பிரச்சனையை ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள். அதை அரசியலாக கையில் எடுப்பார்கள். அப்படித்தான் கட்சி வளரும். ஆனால் இப்பேற்பட்ட தூண்களாக இருக்கும் நிர்வாகிகளின் பெயர்களை உச்சரிக்க மாட்டேன் என்று சொல்வதும், பிரச்சார வாகனத்தில் அவர்களை அனுமதிக்க மறுப்பதும் கள அரசியலை விட்டு விஜய் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பதை காட்டுவதாக பலரும் கூறுகின்றனர்.
எம்ஜிஆரை பின்பற்றுகிறாரா விஜய்?
எதற்கெடுத்தாலும் எம்ஜிஆரை பிரதிபலிக்கும் விஜய், எம்ஜிஆர் தனது காலத்தில் எப்படி அரசியல் செய்தார் என்பதையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். தன்னுடைய முடிவுதான் இறுதியானது என்று பல நேரங்களில் எம்ஜிஆர் உறுதியாக இருந்தாலும், ஆலோசனை செய்யாமல், நிபுணர்களிடம் கருத்துக்கேட்காமல் அவர் இறுதி முடிவுக்கு போனது கிடையாது. வி.ஆர்.நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், எஸ்.டி.சோமசுந்தரம் ஆகிய இரண்டாம் கட்ட தலைவர்களின் கருத்துகளுக்கு எம்ஜிஆர் மதிப்பளித்திருந்தார்.
ஆனால் தவெகவில் சொல்லிக்கொள்ளும்படி, இரண்டாம் கட்ட தலைவர்களை பார்க்க முடியவில்லை. விஜய் யாரிடம் ஆலோசனை பெறுகிறார்? எதன் அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை, மரியாதை குறைவாக பேசுகிறார்? என்பதெல்லாம் கேள்விக்குறியாக இருக்கிறது.
யதார்த்தத்தில் பிரச்சனைகளுக்கு தீர்வு
அதேபோல விஜய் அரசியலில் கவனிக்கப்பட்ட மற்றொரு விஷயம், யதார்த்தமான தீர்வு. இவர் பிரச்சாரம் செய்யும் பகுதிகளில் எல்லாம் தமிழக அரசையும், முதலமைச்சரையும் கடுமையாக விமர்சிக்கிறார். தமிழக அரசின் திட்டங்கள் தோல்வியடைந்துள்ளது என்று கூறியிருக்கிறார். ஆனால், உண்மையில் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் அவர் என்ன தீர்வை வைத்திருக்கிறார் என்று கேட்டால் பதில் இல்லை. நாம் எங்கு பேசிக்கொண்டிருக்கிறோம்? அந்த தொகுதியின் களம் என்ன? புவியியல் அமைப்பு, மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள், வளர்ச்சிக்கான வாய்ப்புகள், வாய்ப்புகளில் எதெல்லாம் உடனடி சாத்தியம் இதைப்பற்றி விஜய் பேசுவதில்லை.
வாய்ப்புகள் மாற்றத்தை ஏற்படுத்துமா?
இவ்வளவு பஞ்சாயத்துகளை வைத்துக்கொண்டு, வாய்ப்பு கொடுத்தால் எல்லாவற்றையும் மாற்றிவிடுவேன் என்று சொல்வது நம்பமுடியாததை போல இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அரசியல் மேடைகளில் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காத விஜய், அதிகாரத்திற்கு வந்த பின்னர் மக்களுக்கு ஒரு பிரச்சனை எனில் எப்படி நேரில் வந்து சந்திப்பார்? அல்லது தன்னை நம்பி வாக்களிக்க கோரும் விஜய்யை ஒவ்வொரு பிரச்சனைக்கு மக்கள் நேரில் சந்தித்து தீர்வு கேட்பார்களா? அப்படியெனில் அக்கட்சியின் சார்பில் கவுன்சிலர், எம்எல்ஏவாக போட்டியிடும் நபர்களுக்கும் மக்களுக்குமான தொடர்பு என்ன? என்பது அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications