“அரசியல் கட்சி தொடங்கிய விஜய் மீது சந்தேகம் இருக்கு..” ஓபனாக பேசிய பிரபல நடிகர்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ள விஜய், தற்போது கள அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவர் மீது சந்தேகம் இருப்பதாக பிரபல நடிகர் பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
அரசியல் குறித்த திரைப்படங்களில் விஜய் அதிக ஈடுபாடு செலுத்தி வந்தபோதே, அவர் விரைவில் கட்சி ஒன்றை தொடங்க இருக்கிறார் என பேசப்பட்டது. இந்த பேச்சுக்களை உறுதி செய்யும் விதமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விஜய் தனது கட்சியை அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என பெயரிடப்பட்ட இந்த கட்சி, கொள்கை அளவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராகவும், மாநில அளவில் ஆளும் கட்சிக்கு எதிராகவும் செயல்படும் என்றும் அறிவித்தார்.

மறுபுறம், விழுப்புரத்தில் கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்டி, அரசியலில் தனது இருப்பை தெளிவாக பதிவு செய்திருந்தார். விஜய்யின் வருகை தமிழக அரசியல் களத்தில் சலசலப்புகளை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு கட்சி தொடங்கப்பட்டாலும் கூட, நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிடாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என்றும் அறிவித்திருந்தார். இதனையடுத்து, தேர்தல் அரசியலில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.
என்னதான் கட்சியை தொடங்கியிருந்தாலும் கள அரசியல் இல்லாமல் கட்சி வளராது என்பதை புரிந்துக்கொண்ட அவர், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை களத்தில் சென்று சந்தித்து, தனது முதல் கள அரசியல் பயணத்தை தொடங்கினார். இதனையடுத்து அவர் வேங்கைவயல் செல்வதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, சுமார் 750 நாட்களுக்கு மேல் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், காவல்துறை நேற்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. இதற்கு காரணம் விஜய் வேங்கைவயல் செல்வதாக அறிவித்ததுதான் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இப்படி இருக்கையில், விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் செய்தி ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டி, கவனம் பெற்றிருக்கிறது. அதாவது, "நான் எல்லாவற்றையும் பாசிட்டிவாக பார்க்கக்கூடிய ஆள். நண்பர் விஜய்க்கு அரசியல் என்பது அவசியமே கிடையாது. அவர் பெரிய ராஜாங்கம் நடத்திக்கொண்டிருக்கிறார். சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் அவர்தான், கலெக்ஷன் மன்னரும் அவர்தான். ரூ.200 கோடி சம்பளம்.
இப்படியான சிம்மாசனத்தை விட்டுவிட்டு ஏன் மக்கள் பிரச்சனைக்காக போக வேண்டும்? அப்படியெனில் அவர் ஏதோ நல்லது செய்ய வேண்டும் என்று விருப்பப்படுகிறார். எனவே அவரை இப்போதே தடுப்பதற்கு பதில் சப்போர்ட் செய்யலாம். இங்கு மாற்றம் மட்டுமே மாறாதது. கடைசி வரைக்கும், இவர்கள் மட்டும்தான் ஆட்சி செய்ய வேண்டும், இவர்கள் ஆட்சிக்கே வரக்கூடாது என்று கிடையாது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம்.
ஆனால் சில விஷயங்களை நடிகர்கள் செய்து பின்வாங்கியதால், விஜய் மீதும் அந்த சந்தேகம் இருக்கிறது. மாற்றம் குறித்து பேசுவார்கள். ஆனால் அதில் அவர்கள் உறுதியாக நிற்பார்களா? என்பதுதான் அந்த சந்தேகம். எல்லோருக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது. ஆனால் அது ஊதி பெரியதாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதை தவிர்த்து விஜய் அரசியலில் நல்ல முனைப்போடு செயல்பட வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
விஜய் குறித்து பிரபல நடிகர் சந்தேகம் தெரிவித்திருப்பது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications