பிளானை மாற்றிய விஜய்.. அதிக சீட்.. அதிமுக இல்லாத கூட்டணி அமைக்க தவெக திட்டம்?
சென்னை: தவெக மாநாட்டில் திமுக, பாஜகவை விமர்சித்த விஜய் அதிமுகவை தொடவே இல்லை. அதோடு, கூட்டணி ஆட்சி அமைக்கவும் ரெடி என அறிவித்து பரபரப்பைக் கிளப்பி இருந்தார். இந்தச் சூழலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை விஜய் மாற்றி இருப்பதாகத் தெரிகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், சாதி, மதம், இனம் என மக்களைப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்ப்பேன் எனக் கூறினார்.

திமுக, பாஜக மீது விஜய் அட்டாக்: மேலும், மக்கள் விரோத ஆட்சியை 'திராவிட மாடல்' ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார், அண்ணா பெயரை வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டைச் சுரண்டும் குடும்ப சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி எனத் தெரிவித்தார்.
இதன் மூலம், பாஜக, திமுகவை விஜய் விமர்சிப்பதாக கருத்துகள் எழுந்தன. அதேசமயம், விஜய் அதிமுக குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. அதிமுகவை விஜய் விமர்சிக்காதது குறித்து விமர்சனங்களும் எழுந்தன. இதற்குப் பதில் அளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "இதில் மற்றவர்களுக்கு என்ன கஷ்டம்? அதிமுக ஆட்சியில் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தோம். அதிமுக சிறப்பாக செயல்படுவதால் எங்கள் மீது விஜய் விமர்சனம் வைக்கவில்லை என்றார்.
அதேசமயம், சென்னை கொளத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தவெக-வை மறைமுகமாகச் சாடினார். புதிது புதிதாக கட்சி தொடங்குகிறவர்கள் எல்லாம் திமுக ஒழிய வேண்டும், அழிய வேண்டும் எனப் பேசி வருகிறார்கள். 4 ஆண்டுகளைத் தொடப் போகும் இந்த ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பாருங்கள். உங்களின் அவதூறுகளுக்கெல்லாம் கவலைப்பட நேரமில்லை என்றார்.
அதிமுகவுடன் கூட்டணி?: திமுக vs விஜய், பாஜக vs விஜய் என களம் ஏற்பட்ட நிலையில், அதிமுக மட்டும் தவெக விஜய்யுடன் சாஃப்டான அணுகுமுறையைக் கடைபிடித்து வருகிறது. 2026 சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு எதிராக அதிமுக, தவெக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரபரத்தன.
புஸ்ஸி ஆனந்த் மறுப்பு: இந்தச் சூழலில் தான், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தவெக தலைவர் விஜய்யின் ஒப்புதலோடு ஒரு மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறோம் என அதில் கூறியுள்ளார்.
தவெக மாநாட்டில் தலைவர் விஜய் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுதான் பிளானா?: அதாவது, அதிமுக கூட்டணியில் கொடுக்கப்படும் சீட்களை பெற்றுக்கொண்டு தேர்தலில் நிற்கமாட்டோம். பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெறும் எண்ணிக்கையில் தவெக போட்டியிடும். அதேசமயம், விஜய் தெரிவித்த கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைப்பாடு தொடர்கிறது என தெளிவுபடுத்தி உள்ளார் புஸ்ஸி ஆனந்த்.
இதன் அடிப்படையில் பார்த்தால், தவெக, திமுக, அதிமுக அல்லாத ஒரு கூட்டணியை அமைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. முதல் முதலாக களம் காணும் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் தங்கள் சொந்த பலத்தை நிரூபிக்கும் நோக்கில் தவெக களமிறங்கக்கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications