என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்
சென்னை: நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே தவெக நிர்வாகிகள் பலரும் போட்டியில் இருந்து விலக தொடங்கி உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தவெகவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் டாப் தலைவராக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் அவரது கட்சி போட்டியிட உள்ளது. விஜய் தனது முதல் பொதுக்கூட்டத்திலேயே கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் யாரும் கூட்டணிக்கு செல்லவில்லை.

இதற்கிடையே தான் கடந்த சில நாட்களாக அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணைய உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக பாஜக சார்பில் தவெகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் கூறப்பட்டது.
தவெக தனித்து போட்டி
இந்த செய்தியை தவெக, பாஜக, அதிமுகவினர் மறுத்து வந்தனர். இருப்பினும் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. தவெக கூட்டணிக்கு வருவது உறுதியான பிறகு இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை. தவெக வரும் சட்டசபை தேர்தலில் தனித்து களமிறங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது.
நிர்வாகிகள் அதிருப்தி
அதேபோல் நேற்று முன்தினம் விஜய் வழங்கிய இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியிலும் கூட்டணி எல்லாம் கிடையாது. தவெக தனித்து தான் போட்டியிடும் என்று இஸ்லாமியர்கள் மத்தியில் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தவெக நிர்வாகிகள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக...
ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சுமார் 98 பேர் கூட்டணி செல்ல விருப்பம் தெரிவித்தனர். ஆனால் விஜயின் முடிவு மாவட்ட செயலாளர்களின் விருப்பத்துக்கு எதிராக அமைந்துள்ளது. இந்நிலையில் தான் தவெக சார்பில் போட்டியிட தேர்தலில் ஆர்வம் காட்டியவர்கள் பின்வாங்க தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
போட்டியில் விலகும் தவெகவினர்
அதாவது தவெக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட 300 பேர் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் தவெக தனித்து தான் போட்டி என்பது அறிவித்த மறுநாளே அதில் பலரும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். தனித்து போட்டியிடும்போது தேர்லுக்கான செலவு அதிகரிக்கும். அதேபோல் கூட்டணி கட்சிகளின் ஆதரவு இன்றி களமிறங்குவது பெரும் சவாலாக இருக்கும். தேர்தல் களப்பணியை தனித்து மேற்கொள்வதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
பணம் இல்லையாம்
இதனால் தேவையின்றி செலவு செய்து தேர்தலில் தோல்வியை தழுவலாம் என பலரும் தவெக தலைமைக்கு சட்டசபை தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக தேர்தல் செலவுகளுக்காக வேட்பாளர்கள் சுமார் ரூ.2 கோடி வரை வைத்திருக்க வேண்டும். அதிலும் சீட் பெறுவதற்கு முன்பாக ரூ.1 கோடியை வைத்திருக்க வேண்டும் என்று கட்சி சொல்கிறது. ஆனால் தவெகவில் இருக்கும் பலரிடமும் அவ்வளவு பெரிய தொகை இல்லை. இருப்பினும் கூட்டணி அமைந்தால் கடனை வாங்கி களமிறங்கலாம் என்று பலரும் நினைத்தனர்.
பல மாவட்டங்களில் பிரச்சனை
ஆனால் தற்போது தவெக கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளதால் பலரும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனால் அவர்கள் போட்டியில் இருந்து விலகுவதாக கட்சி தலைமையிடம் அறிவித்துள்ளனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டியவர்கள் தற்போது பின்வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தவெக தலைமைக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications