விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ வழக்கு.. பிரபல யூடியூபர் மாரிதாஸ் தரப்புக்கு அவகாசம் வழங்கிய ஐகோர்ட்
சென்னை: நடிகர் விஜய்யின் மாமாவும் தொழிலதிபருமான சேவியர் பிரிட்டோ, பிரபல யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், பிரபல யூடியூபர் மாரிதாஸ், என்னை பற்றி உண்மைக்கு புறம்பான பல கருத்துகளை தெரிவித்து வருகிறார். நடிகர் விஜய்யின் மாமா என்ற ஒரே காரணத்துக்காக அவதூறு பரப்பப்படுகிறது. எனவே, அவதூறு வீடியோவை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரியிருக்கிறார். இந்த வழக்கு பற்றி பார்ப்போம்.
சென்னை அடையாறைச் சேர்ந்த எஸ்.சேவியர் பிரிட்டோ சென்னையில் உள்ள பிரபல கல்லூரியான லயோலா கல்லூரியில் பணியாற்றினார். பின்னர் அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி புகழ் பெற்றார். இவருக்கு சொந்தமாக சென்னையில் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வியாபாரங்களை செய்து வருகிறது.இவர் கடந்த 2020-ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தினை தயாரித்தார்.

சேவியர் பிரிட்டோ யார்
இப்படத்திற்கு முன்பே விஜய் உடன் "செந்தூரபாண்டியன்", "தேவா", "ரசிகன்" போன்ற படங்களுக்கு தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். சேவியர் பிரிட்டோ விஜய்யின் மாமா ஆவார். விஜய் மற்றும் சேவியர் பிரிட்டோ குறித்து பிரபல யூடியூபர் மாரிதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த சேவியர் பிரிட்டோ வழக்கு தொடரப்போவதாக அறிவித்தார். அதன்படியே வழக்கும் தொடர்ந்துள்ளார்.
மாரிதாசுக்கு தடை விதிக்க வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றத்தில் சேவியர் பிரிட்டோ தாக்கல் செய்துள்ள மனுவில் கூறுகையில், "பிரபல நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தலைவருமான ஜோசப் விஜய், என் மனைவி வழியில் உறவினர் ஆவார். ஆனால் பிரபல யூடியூபர் மாரிதாஸ், என்னை பற்றி உண்மைக்கு புறம்பான பல கருத்துகளை தெரிவித்து வருகிறார். என்னை பற்றி பேச மாரிதாசுக்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்" இவ்வாறு கூறியிருந்தார்.
அவதூறு பரப்பப்படுகிறது
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.தனபால் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.ஸ்ரீதர், 'மனுதாரர் தனது துறை சார்ந்து மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், அவருக்கு எதிராக அவதூறு பரப்பப்படுகிறது.
விஜய்யின் மாமா என்பதால் அவதூறு
இப்போதெல்லாம் ஒரு கேமரா, இணையதள இணைப்பு இருந்தால், யூடியூப் சேனல் என்ற பெயரில் தங்களுக்கு தோன்றுவதை எல்லாம் பேசுகிறார்கள். அந்த வீடியோக்களின் பின்னூட்டத்தில் தரக்குறைவான 'கமெண்டு'கள் பதிவு செய்யப்படுகிறது. மனுதாரர் நடிகர் விஜய்யின் மாமா என்ற ஒரே காரணத்துக்காக திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது. எனவே, அவதூறு வீடியோவை அகற்ற உத்தரவிட வேண்டும்" என்று வக்கீல் எம்.ஸ்ரீதர் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.
மாரிதாஸ் தரப்பு கோரிக்கை
இதையடுத்து பிரபல யூடியூபர் மாரிதாஸ் தரப்பில், தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவிக்க அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளிவைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தனபால், விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications