விஜய்யுடன் லாங் டிரைவ்! எடப்பாடிக்கு Yes! டிடிவி;சசிகலாவுக்கு No! சீமான் 2026 திட்டம்!
சென்னை: நடிகர் விஜய்யுடன் சீமான் 2026இல் கூட்டணி அமைப்பார் எனச் சொல்லப்பட்டு வந்தநிலையில், அதற்கான வாய்ப்பு இல்லை என்பதை அவரை அழைத்து விஜய்யே விளக்கம் அளித்துள்ளதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது. அதை உணர்ந்துதான் சீமான் அதிமுக பக்கம் இப்போதே அலைபாய ஆரம்பித்திருக்கிறார் என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று நடந்தது. அதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அங்கே கூடி இருந்த மாணவர்களிடம், "படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமா? வேண்டாமா?" என்று கேள்வி எழுப்பினார். கூடவே, "தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை. அது அரசியலில் மட்டுமல்ல; அனைத்து துறைகளிலும் தேவை" என்று பேசிய விஜய் மதுவுக்குப் போதைப் பொருட்களுக்கும் எதிராக உறுதிமொழியைக் கூடி இருந்த மாணவர்களை எடுத்துக் கொள்ள வைத்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் அதிமுக,தேமுதிக, தவெக ஆதரவுகளைக் கேட்டு வரும் சீமான், இப்போது விஜய் நடத்தியுள்ள விழா குறித்து ஒரு அறிக்கையை உடனடியாக வெளியிட்டுள்ளார். அதில், "கல்வி என்பது மானுட உரிமை. அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை. ஆகவே கல்வியை அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை! ஆனால், தற்காலச் சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டுள்ளது.
கல்வி மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது. ஏழை என்றும் பணக்காரர் என்றும் எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை அழைத்து விஜய், பாராட்டிச் சான்றிதழுடன் உதவித்தொகையது உன்னதப்பணி. விஜய்யை நான் பாராட்டுகிறேன்" எனக் கூறியுள்ளார்.

ஒரு பக்கம் நாதக நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட உண்ணாவிரதத்திற்குச் சென்று ஆதரவு அளித்துள்ளனர். இன்னொரு பக்கம் விஜய்க்கு வாழ்த்து செய்தியைச் சீமான் வெளியிடுகிறார். திமுகவை மிகக்கடுமையாக விமர்சிக்கும் சீமான், பாமகவையோ அல்லது பாஜகவையோ விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விமர்சிக்கவில்லை. ஆனால், திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தொண்டர்களை தனது கட்சிக்கு வாக்களிக்கும்படி கோரிக்கை வைக்கிறார். ஆக, திமுகவை மட்டும் பொது எதிரியாக்கி மற்ற அரசியல் சக்திகளை தன் பக்கத்திற்குக் கொண்டுவர முயற்சி செய்கிறார்.
கடந்த 2021இல் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், அந்த வட்டாரத்தைச் சேர்ந்த திமுகவினர் உள்ளே புகுந்து நாதக பேச்சாளரை மேடையிலேயே தாக்கியதாகப் புகார் எழுந்தது. அப்போது அதற்கு ஆதரவுத் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கைவிட்டிருந்தார். அதற்குச் சீமானும் நன்றி தெரிவித்திருந்தார். அந்தப் பழைய நட்புடன் இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு தன் கட்சியின் சார்பில் ஆதரவு தெரித்து பழைய நன்றிக் கடனை நிறைவேற்றி இருக்கிறார் சீமான்.
எடப்பாடி பழனிசாமியும் சசிகலாவும் தனித்தனியாகப் பிரிந்தபோது அதை மீண்டும் சேர்ப்பதற்காகத் தான் பல முயற்சிகளைச் செய்ததாக முன்பே சீமான் கூறியிருந்தார். ஆக, அவருக்கு ஜெயலலிதா காலத்திலிருந்தே அதிமுக சார்பு நிலைப்பாடு இருந்து வந்துள்ளது. 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்று டயலாக் எல்லாம் கூட முன்பே பேசியவர்தான் சீமான்.
எப்படிப் பார்த்தாலும் அதிமுக உறவு சீமானுக்குப் புதிதல்ல. அவர் சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தபோது நேரில் சென்று நலம் விசாரித்திருக்கிறார். அவருக்கு எடப்பாடி பக்கமும் சசிகலா பக்கமும் நல்ல நட்பு உள்ளது. அப்படிப் பார்த்தால் இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை மட்டுமே சீமான் கணக்கில் கொண்டுள்ளார். அவரது தலைமையிலான அதிமுகவுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார்.
மிகத் தெளிவாக அவர் டிடிவி தினகரனையும் சசிகலாவையும் ஆதரவு தரும்படி கேட்கவில்லை. 2021இல் நடைபெற்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டுள்ளது. அக்கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட ஐயனார் என்பவர் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இக்கட்சி 1.59% வாக்குகளைப் பெற்றுள்ளது. 2019இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் பெற்ற 2,921 வாக்குகளைவிட அது அதிகம்.
2021இல் அதிமுக 43.72% வாக்குகளைப் பெற்றிருந்தது. அதாவது 84 ஆயிரம் வாக்குகள். அதை மட்டுமே குறிவைத்த சீமான், அமமுகவையும் சசிகலாவை ஆதரிக்கும்படி கோரிக்கை வைக்கவில்லை. இந்த 3 ஆயிரத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், அந்த 84 ஆயிரத்தை இழந்துவிடுவோம் என்று சரியான பாதையில் காயை நகர்த்த ஆரம்பித்துள்ளார்.
திரைத்துறையிலிருந்த காலத்திலிருந்தே தொடர்ந்து விஜய்யை ஆதரித்து வருகிறார் சீமான். ஆனால், விஜய் அவருக்குப் பெரிய அளவில் ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. விஜய் நடிப்பில் சீமான் இயக்குவதாக இருந்த 'பகலவன்' படம் கூட இன்னும் இருட்டிலேயேதான் விடியாமல் முடங்கிக் கிடக்கிறது. இனிமேல் நடிக்கப் போவதில்லை என்றும் விஜய் அறிவித்துவிட்டதால், அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துத்தான் விஜய்யைச் சீமான் நெருங்கி வருவதாகப் பலர் சொல்கிறார்கள். அப்படி என்றால், கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது என்பது பலரது கருத்தாக உள்ளது. ஆனால், இன்று மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், 'ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வரும் செய்திகள் உண்மை இல்லை. செய்தி வேறு கருத்து வேறு' என்று பஞ்ச் பேசியிருக்கிறார். அது சீமான் கூட்டணிக்கான கூடச் சொல்லி இருக்கலாம்.
ஆனால், 2026இல் சீமானுடன் கூட்டணி இல்லை என்பதை விஜய் அவரிடம் விளக்கி விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சீமானை அழைத்துக் கொண்டு லாங் டிரைவ் சென்ற விஜய், தனது பலத்தை அறிந்துகொள்வதற்காக தனித்தே போட்டியிட உள்ளதாக விளக்கம் அளித்துவிட்டார் என்றும் தகவல் கசிந்துள்ளது. ஆகவேதான், சீமான் இப்போது அதிமுக பக்கம் நெருங்க ஆரம்பித்திருக்கிறார். அப்படியே விஜய் வந்தால் சேர்ந்து கொள்ளலாம். இல்லை எனில் இலை பக்கம் இன்பமாகக் கூட்டணி வைத்துவிடலாம் என்று திட்டம் தீட்டி உள்ளதாகச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications