அதிமுக ஓட்டுக்கள் ஏன் பாமகவுக்கு விழவில்லை? எதிர் தரப்பு கட்சியான திமுகவுக்கு போனது ஏன்?
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் ஏன் பாமகவுக்குப் போகவில்லை என்பது பற்றியும் அது ஏன் திமுகவுக்குச் சென்றது என்பது பற்றியும் தரவுகள் அடிப்படையிலான சில விளக்கங்கள் கிடைத்துள்ளன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. பலரும் அந்த வெற்றியை முன்பே கணித்திருந்தனர். அதற்குக் காரணம், கடந்த முறை நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகதான் வென்றது. இடைத்தேர்தல் என்றால் அது ஆளும் கட்சிக்குச் சாதகமாகவே முடிவுகள் இருக்கும் என்பதை பல தேர்தல்கள் மூலம் பாடம் கற்றிருக்கிறார்கள் மக்கள். எனவே, பொதுமக்களின் மனநிலையில் ஒரு சாய்வு ஏற்பட்டுவிடுகிறது.

இந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறுமா? என்ற விவாதத்திற்கே தொடக்கம் முதலே இடமில்லாமல் போய்விட்டது. அதற்கு மாறாக தேர்தலைப் புறக்கணித்த அதிமுகவின் ஓட்டுக்கள் யாருக்கு விழும் என்பதுதான் பேசுபொருளாக இருந்தது. இப்போது திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2021இல் 48.69% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற திமுக இந்த இடைத்தேர்தலில் 63.22% பெற்று வெற்றி பெற்றுள்ளது. கூடுதலாக 14.53% வாக்குகள் கிடைத்துள்ளன.
பாமக வேட்பாளர் சி அன்புமணி 56,296 வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்தக் கட்சி 28.69% பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 10,602 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதாவது 5.4% . கடந்த 2021இல் இந்தக் கட்சியின் வேட்பாளர் 4.25% தான் பெற்றிருந்தார் என்பது கவனிக்க வேண்டிய தகவலாக உள்ளது. திமுக வேட்பாளர் சிவா 1,24,053 வாக்குகளைப் பெற்றுள்ளதோடு அக்கட்சி 63.22% வாக்குகளைப் பெற்றுள்ளது.
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக வேட்பாளர் புகழேந்தி 93,730 வாக்குகளைத்தான் பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 84,157 வாக்குகளைப் பெற்றிருந்தார். அப்படிப் பார்த்தால் இப்போது நடந்த இடைத்தேர்தலில் அன்னியூர் சிவா 39,896 அதிகம் பெற்றுள்ளார். கடந்த 2021இல் அதிமுக கூட்டணியில் பாமக இருந்தது. இருகட்சிகளின் கூட்டணியில் அதிமுக பெற்ற வாக்குகள் 84,157.
இந்த இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இல்லை. பாஜக கூட்டணியில் பாமக இந்த இடைத்தேர்தலைச் சந்தித்து 56,296 வாக்குகளைப் பெற்றுள்ளது. பாமகவின் வாக்குகளைக் கழித்துவிட்டு கணக்குப் போட்டால் 2021 அதிமுக 27,861 கூடுதலாக விழுந்துள்ளன. இந்த வாக்குகள் இந்த முறை பாமகவுக்கு கிடைக்கவில்லை. இந்த வாக்குகள் இப்போது திமுகவுக்குப் போய் உள்ளது என சொல்லலாம்.

அப்படி என்றால், அதிமுகவின் பரம எதிரி கட்சியான திமுகவுக்கு அதிமுகவின் வாக்குகள் போனது உண்மையா? அது ஏன் பாமகவுக்கு விழவில்லை? இப்படியான சந்தேகங்களுக்கு ஒரு நீண்ட விளக்கத்தை முன்வைத்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம். அவர் இது பற்றி ஒரு விவாத நிகழ்ச்சியில் பேசுகையில், “இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது பலரும் எதிர்பார்ப்பதுதான். அதற்கு என்ன காரணம் என்றால்?, 1999இல் இருந்து 2016 வரை 34 இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. அதில் 32 முறை ஆளும் கட்சிதான் வென்றுள்ளது. விதிவிலக்காக 2017இல் ஆர்.கே.நகரில் விதிவிலக்காக டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.
அடுத்து 2019இல் 13 இடங்களில் எதிர்க்கட்சியான திமுக வெற்றி பெற்றது. 9 இடங்களில் அன்று ஆளும் கட்சியாக இருந்த அதிமுக வெற்றி பெற்றது. இதற்கு முன்பாக சமீபத்திய உதாரணமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இருக்கிறது. ஆகவே, ஆளும் கட்சியான திமுக விக்கிரவாண்டியில் வெற்றி பெறும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருந்ததாகத் தெரியவில்லை. எதிர்பார்த்ததைப் போலவே அது வென்றுள்ளது.
பாமக தனது வழக்கமான வாக்குகளைவிட அதிகமானவே இந்த முறை பெற்றுள்ளது. ஆனால், அது அதிமுகவின் வாக்குகளா என்பதில் எனக்குச் சந்தேகம் உள்ளது. என்.டி.ஏ கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது. ஆகவே, அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிக்கு அதிமுகவினர் வாக்களிப்பார்களா என்பது சந்தேகம் தான். விக்கிரவாண்டியில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். அண்ணாமலை மிகக்கடுமையாக அதிமுகவை விமர்சித்து வருகிறார்.
அப்படி உள்ளபோது ஜெயலலிதா படத்தைப் போட்டு பாமக ஒட்டுக்கேட்டால், விக்கிரவாண்டி அதிமுகவினர் எப்படிப் போவார்கள். மேலும் ஜெயலலிதா 2014லேயே பாஜகவுடன் ஒட்டோ உறவோ இல்லை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டாரே? 2019லேயே பாஜக மற்றும் அதிமுக கூட்டணி சரியாக எடுபடவில்லை என்பதுதானே உண்மை?
ஒரு தொகுதியில் 200 பூத் இருக்கின்றது என வைத்துக் கொண்டால், அதில் 15 ஆயிரம் வாக்குகளை கோர் ஓட் பேங்க் என்று சொல்லலாம். அந்த வாக்குகள் வேறு கட்சிக்குப் போகாது. அப்படியே நிரந்தரமாகக் குறிப்பிட்டக் கட்சிக்குத்தான் போய்ச் சேரும். இதைத்தான் நடுநிலை வாக்குகள் என்று உள்ளன. அவை மாறக்கூடியது. அப்படிப் பார்த்தால், அதிமுக போட்டியிடவில்லை. பாஜக கூட்டணியில் பாமக உள்ளது.
பாஜகவை ஆதரிப்பதைவிட, திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளை ஆதரிப்பது நல்லது என்ற அடிப்படையில் இப்போது அனைவரும் திமுகவுக்கு வாக்களித்துள்ளன. அதிமுகவின் நிலையான ஓட்டுகள் கூட திமுகவுக்கு பாஜகவின் மீதுள்ள வெறுப்பால் போய் சேர்ந்துள்ளது.
சீமான் அதிமுகவின் வாக்குகளை இழுக்க முயற்சி செய்தார். எடப்பாடி பழனிசாமியின் போராட்டத்திற்குச் சென்று ஆதரவு தருவதன் மூலம் அவர் தன் பக்கம் அதிமுக வாக்குகளைக் கொண்டுவரலாம் என நம்பினார். இன்னும் சொல்லப் போனால் அதிமுகவினரிடம் நேரடியாக வாக்குகளைப் போடும்படி கோரிக்கைகூட வைத்தார். ஆனால், அதிமுக ஓட்டுகள் நாதகவுக்குப் போகவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.
இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக தனது நிலையான வாக்கு சதவீதத்தைவிட அதிகம் பெற்றுள்ளது. ஆகவே, குறைத்து மதிப்பிட முடியது. இன்னும் சொல்லப்போனால், 2015இல் ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டார். அப்போது 88% வாக்குகளைப் பெற்றார். அதனுடன் ஒப்பிடுகையில் திமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 63% தான் பெற்றுள்ளது. ஜெயலலிதா பெற்றதுதான் பெரிய வெற்றி. இப்போது திமுக பெற்றுள்ளது பெரிய வெற்றியல்ல.
ஆர்.கே.நகரில் வெற்றிவேல் தனது பதவியை ஜெயலலிதா போட்டியிடுதற்காக ராஜினாமா செய்தார். ஆனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஒரு எம்.எல்.ஏ இறந்ததால் நடைபெறுகிறது. அங்கே அனுதாப அலை இன்னும் ஆளுகட்சிக்கு கூடுதலாக வீசி இருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை" என்கிறார்.












Click it and Unblock the Notifications