இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்.. விநாயகர் சிலைகள் வைத்துச் சிறப்பு பூஜைகள்!
சென்னை: நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சிலை வழிபாடுகள், ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வீடுகள், கோவில்கள், பொது இடங்களில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜைகள் செய்ய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர். அதற்காக, கடந்த ஒரு மாதமாக சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் இன்று அதிகாலையிலேயே வழிபாடு நடத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. பல்வேறு இந்து அமைப்பினரும், பக்தர்களும் தங்களது பகுதியில் விநாயகர் சிலைகளை நிறுவியுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை காவல் எல்லைக்குள் 1,562 சிலைகளை வைத்து வழிபட போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். பாதுகாப்பு பணியில் 16,500 போலீசார் ஈடுபட உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி நகரங்களில் உள்ள போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி உள்ளிட்டோர் சில தினங்களுக்கு முன்பு தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலைகளை கரைப்பதற்கும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரியவகை ஆமைகள் பாதிக்கப்படும் என்பதால் பட்டினப்பாக்கம், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கப் பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார், ஊர்க்காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இந்தாண்டு சென்னையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க கூடுதல் சோதனைச் சாவடிகளும், கூடுதலாக 2 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னையில் கூடுதலாக 14 இடங்களில் புதிய சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், கூடுதலாக 2 ஆயிரம் போலீசார் சனிக்கிழமை இரவு முதலே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
