சின்ன கலைவாணர்.. விவேக் மறைந்து ஒரு வருடமாச்சு.. முதல்வரிடம் விவேக் மனைவி வைத்த உருக்கமான கோரிக்கை
சென்னை: நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான விவேக் மரணமடைந்து ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இந்நிலையில் அவர் வசித்த சென்னை வீட்டின் சாலைக்கு விவேக்கின் பெயர் சூட்ட வேண்டும் என அவரது மனைவி அருள்செல்வி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ் திரைப்பட நடிகர் விவேக். சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்ட இவர் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்தார். பத்மஸ்ரீ விருது வென்றுள்ளார்.
மேலும் சுற்றுச்சூழல் மீதான ஆர்வத்தாலும், முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் மீது கொண்ட தீரா பற்று காரணமாகவும் ஒரு கோடி மரம் நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தமிழகம் முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வம்
மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் நடுதல் குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை ஓமந்தூராரில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் விவேக் தடுப்பூசி செலுத்தி கொண்டார். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மக்களிடையே இருக்கும் அச்சத்தை போக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக அவர் தெரிவித்தார்.

மாரடைப்பால் மரணம்
இதையடுத்து அவர் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சி்கிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு அவர் திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். 2022 ஏப்ரல் 17 ல் விவேக்கின் உயிர் பிரிந்தது. இது தமிழக திரையுலகத்தினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்பட அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. விவேக்கின் முதலாமாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பல இடங்களில் மரம் நடவு செயப்பட்டது.

சாலைக்கு விவேக் பெயர்
இந்நிலையில் தான் விவேக் நினைவை போற்றும் வகையில் அவர் சென்னை விருகம்பாக்கத்தில் வாழ்ந்த வீட்டுக்கு செல்லும் சாலைக்கு அவரது பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலினை விவேக்கின் மனைவி அருள்செல்வி, மகள் அமிர்தா நந்தினி ஆகியோர் சந்தித்து கடிதம் மூலம் கோரிக்கை வைத்தனர்.
Recommended Video

சமூக ஆர்வலர்களும் விருப்பம்
இந்த கடிதத்தை பெற்று கொண்ட முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் சமூக ஆர்வலர்களும் விவேக்கின் பசுமை புரட்சியை போற்றும் வகையில் அவரது வீட்டின் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர். இதனால் விரைவில் விவேக்கின் பெயர் சாலைக்கு சூட்டப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications