அப்படீன்னா தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சினை மட்டும்தான் இருக்கோ.. ரஜினி சொல்ல வருவது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி என்றாலே குழப்பம்தான். அதை அவரே மறுபடியும் மறுபடியும் நிரூபிக்க தவறுவதே இல்லை. இப்போதும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

எதிர்பார்த்தது போலவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியும் இல்லை யாருக்கும் தனது ஆதரவும் இல்லையென்று தெரிவித்து விட்டார் ரஜினி. படங்கள் வரும்போதெல்லாம் அரசியலுக்கு வருவேன், போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் கூறி வரும் ரஜினி நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் தனது நிலையை தெளிவுபடுத்தியவர் யாருக்கு வாக்களியுங்கள் என்பதை மவுனமாக கூறி ஆராய்ந்து சிந்தித்து வாக்களியுங்கள் என்று குழப்பியிருக்கிறார்.

தமிழகத்தின் தலையாய பிரச்சனை தண்ணீர் பிரச்சனை என்று கருதும் ரஜினி மத்தியில் நிலையான வலுவான ஆட்சி அமைத்து தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்க்க யார் திட்டம் வகுத்து உறுதியாக செயல்படுத்துவார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறியிருக்கிறார். மீத்தேன், ஷேல் கேஸ், நியுட்ரினோ, ஸ்டெர்லைட், உயர் மின் அழுத்த கோபுரங்கள், ஹைட்ரோகார்பன் இவற்றில் விவசாய நிலங்கள் பறிபோவதை பற்றியோ அதனால் விவசாயம் செய்வதற்கே அதாவது தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கு விவசாய நிலமே இல்லாமல் போவது பற்றி எதுவும் குறிப்பிடாத அவர் தண்ணீர் பிரச்னையை தீர்த்து வைக்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.

தீராத பிரச்சினைகள்

தீராத பிரச்சினைகள்


தண்ணீர் பிரச்சனையை பொறுத்தவரை காவிரியில் ஆண்டாண்டு காலமாக தமிழகம் அவதிப்பட்டு வருகிறது. இந்தப்பக்கம் காவிரி என்றால் அடுத்தப் பக்கம் முல்லைப் பெரியாறு, இன்னொரு பக்கம் பாலாறு என்று திரும்பிய பக்கம் எல்லாம் திருகுவலியோடுதான் தமிழகம் அவதிப்படுகிறது. கடந்த சில வருடங்களில் காவிரியில் அவஸ்தை இன்னும் கூடியுள்ளது. கர்னாடக மாநிலத்தில் மேக்கேதாட்டு பகுதியில் புதிய அணை ஒன்றை கட்டப்போவதாக 2013 -ம் ஆண்டே அறிவித்தார் அப்போதைய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா. ஆனால் அப்போது தமிழகத்தில் இருந்து எழுந்த எதிர்வினையால் அதை கிடப்பில் போட்டார். பின்னர் மத்தியில் பாஜக அரசு வந்த பின்னர் மேக்கேதாட்டு பிரச்சனையும் காவிரி மேலாண்மை வாரியப் பிரச்சனையும் கடுமையாக எழுந்ததது.

கண்டுகொள்ளாத பாஜக

கண்டுகொள்ளாத பாஜக


மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட முயற்சித்தது காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு. அதை அனுமதித்தது பாஜக அரசு. அதைத்தாண்டி உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுங்கள் என்று கூறிய பின்னரும் தண்ணீர் திறந்து விட மறுத்தது கர்நாடக காங்கிரஸ் அரசு. அப்போது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது மத்திய பாஜக அரசு. அதன் பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல்வேறு கெடு விதித்தப் பின்னரும் வேண்டுமென்றே காலம் கடத்தியது மத்திய பாஜக அரசு. அதனாலேயே இதுவரை எந்த இந்தியப் பிரதமரும் சந்தித்திராத எதிர்ப்பை சந்தித்து வான் வெளியிலேயே பறந்தே தமிழகத்தை விட்டு சென்றவர் பாஜகவின் பிரதமர் மோடி. அப்போது அவருக்கு எதிராக எழுந்த கோ பேக் மோடி என்ற ஹேஸ் டேக் உலக அளவில் டிரென்ட் ஆனதெல்லாம் உலக வரலாறு.

கடும் எதிர்ப்பில் பாஜக

கடும் எதிர்ப்பில் பாஜக

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் தமிழக மக்கள் அதிமுகவே தங்களது பெருவாரியான தேர்வு என்று 37 இடங்களை அள்ளிக் கொடுத்தார்கள். அதிமுகவும் நாடாளுமன்றத்தில் 3 வது பெரிய கட்சியாக வளர்ந்து நின்றது. அப்படியிருந்தும் காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்திலோ அல்லது மேக்கேதாட்டு விவகாரத்திலோ அவர்கள் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வரவிருக்கையில் கூச்சல் குழப்பங்கள் மூலம் நாடாளுமன்றத்தை முடக்கினார்களே தவிர பெரிதாக ஒன்றையும் சாதித்து விடவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் அதிமுக அல்ல. இவர்களின் நிலைதான் இப்படி என்றால் அதற்கு முன்பு ஐக்கிய முன்னணி அரசு இயங்குவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்த திமுக தனக்கு வேண்டிய துறைகள் அத்தனையையும் கேட்டு வாங்கி கொண்டார்களே தவிர காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு பெரிதாக எதையும் சாதித்துக் கொடுக்கவில்லை.

இவர்களுக்கா ஓட்டு போட வேண்டும் ரஜினி

இவர்களுக்கா ஓட்டு போட வேண்டும் ரஜினி

ஆக மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு வந்தாலும் சரி அல்லது பாஜக அரசு வந்தாலும் சரி தமிழக தண்ணீர் பிரச்சனை தீராது என்பது தெளிவு. அடுத்து தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அதிமுக இருந்தாலும் சரி திமுக இருந்தாலும் சரி காவிரி விவகாரத்தில் அல்லது தமிழகம் வஞ்சிக்கப்படுகிற பிரச்சனைகளில் இதுவரை பெரிய தீர்வு கிடைக்கவில்லை என்பதே எதார்த்தம். ஆக இதுவரை கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் ரஜினி யாரைக் கூறுகிறார் என்பது நிச்சயமாக அவர் தெளிவான குழப்பத்தில் இருக்கிறார் என்பதையும் தமிழக வாக்காளர்களையும் சேர்த்துக் குழப்புகிறார் என்பதுவும் தெளிவு.

அவரும் குழம்பி.. அடுத்தவரையும் குழப்பி

அவரும் குழம்பி.. அடுத்தவரையும் குழப்பி

கடந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது இது பாஜகவுக்கு பெரிய பலவீனம்தான் என்றவர் அதற்கு சில நாட்களுக்கு முன்னர் பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி என்று அப்போதும் குழப்பினார். தற்போது தனது இரண்டாவது மகளின் மறுமணத்திற்கு அரசியல் பிரபலங்கள் அனைவரையும் அழைத்தவர் மோடியை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது இந்த சூழலில் மோடி தனது வீட்டிற்கு வந்தால் தான் மோடியின் ஆதரவாளர் என்று தெரிந்து விடும் என்று அச்சப்படுகிறார். இங்கிருக்கும் சூழலில் அவர் பாஜகவை வெளிப்படையாக ஆதரிக்க பயப்படுகிறார். அதே நேரம் தனது அரசியல் பாதை ஆன்மீக அரசியல் என்றும் இன்னொரு பக்கத்தில் குழப்பி வருகிறார்.

நல்லா குழப்புறீங்க குழந்தை

நல்லா குழப்புறீங்க குழந்தை

இப்படியாக தனது நிலைப்பாட்டை காங்கிரசா அல்லது பாஜகவா என்று தெளிவாக கூறாதவர் மறைமுகமாக சத்தமின்றி ஒன்றை கூறுகிறார் அதாவது மத்தியில் நிலையான வலுவான ஆட்சி அமைப்பவர்களுக்கு ஆதரவளியுங்கள் என்று கூறுகிறார். இப்போது பாஜக தான் தங்களால் நிலையான ஆட்சி தர முடியும் என்று தொடர்ந்து கூறிவருகிறது. ஆக இந்த ஒரு புள்ளியில் மட்டுமே அவர் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று மறைமுகமாக கூறுகிறார். அப்படியும் கூறியவர் இறுதியில் முத்தாய்ப்பாக ஆராய்ந்து சிந்தித்து வாக்களியுங்கள் என்றும் கூறுகிறார். என்னதான் சொல்ல நினைக்கிறீர்கள் ரஜினி?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+