ஸ்லீப்பர் கோச் கட்டணத்தில் 3rd AC-யில் போகனுமா? டிக்கெட் புக் பண்ணும் போது இந்த டிரிக்ஸ் மறந்துடாதீங்க
சென்னை: ரயில்களில் டிக்கெட் புக் செய்யும் போது சில நேரம், சாதாரண படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் கோச் டிக்கெட் புக்கிங் செய்தால் கூட மூன்றாம் வகுப்பு ஏசி டிக்கெட் கிடைக்கும். எப்போதும் கிடைக்காது என்றாலும், மூன்றாம் வகுப்பு ஏசி கோச்சில் சீட்கள் இருக்கும் போது நமக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த மாதிரி சீட் கிடைக்க வேண்டும் என்றால் பயணிகள் டிக்கெட் புக்கிங் செய்யும் போதே ஒரு ஆப்ஷனை கிளிக் செய்வது அவசியம் ஆகும். அது என்ன என்று இங்கு பார்க்கலாம்.
இந்தியாவில் ரயில் பயணம் என்பது பயணிகளுடன் இரண்டறக் கலந்த ஒன்றாகும். தொலைதூர பயணங்கள் என்றாலும் குறுகிய தொலைவு செல்ல வேண்டும் என்றாலும் முதலில் ரயிலில் டிக்கெட் இருக்கிறதா? என்று பார்த்துவிட்டுதான் அடுத்த பிளானை யோசிப்பார்கள். ரயில்களை பொறுத்தவரை 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி உள்ளது.

டிக்கெட் புக் செய்யும் போது..
டிக்கெட் புக்கிங் தொடங்கியதுமே புக்கிங் செய்தாலும் சில நேரங்களில் டிக்கெட் கிடைப்பது இல்லை. அதுவும் வார இறுதி நாட்களில் டிக்கெட் புக்கிங் செய்தால் இணையத்தில் ரேஸ் நடத்துவது போன்றதுதான். சில வினாடிகள் தாமதம் ஆனால் கூட டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்டிற்கு போய்விடும். இதுபோன்ற வெயிட்டிங் லிஸ்ட் கிடைக்கும் நேரத்தில், சாதாரண படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் கோச் டிக்கெட் புக்கிங் செய்தாலும் சில நேரங்களில் மூன்றாம் வகுப்பு ஏசி டிக்கெட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மூன்றாம் வகுப்பு ஏசியில் டிக்கெட் காலியாக இருந்தால் அந்த வகுப்பு படுக்கை பயணிகளுக்கு ஒதுக்கப்படும். ரயிலில் டிக்கெட் கிடைக்கிறதோ இல்லையோ என்று தவித்துகொண்டு இருக்கும் பயணிகளுக்கு சில நேரங்களில் இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி கிடைக்கும். ஏசி கோச்சில் டிக்கெட்டுகள் காலியாக இருந்தால் டிக்கெட்டுகள் இப்படி அப்கிரேடு ஆகும்.
என்ன செய்ய வேண்டும்?
பயணிகள் கூடுதலாக எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. முதலில் செலுத்திய கட்டணத்திலேயே அதாவது சாதாரண படுக்கை வசதி கொண்ட கோச்சிற்கு செலுத்திய தொகையிலேயே மூன்றாம் வகுப்பு ஏசி ஸ்லீப்பரில் பயணிக்க முடியும். மூன்றாம் வகுப்பு ஏசி டிக்கெட் புக் செய்தவர்களுக்கு அப்கிரேடு ஆனால், இரண்டாம் வகுப்பு ஏசி படுக்கை கிடைக்கும்.
இந்த அப்கிரேடு கிடைக்க வேண்டும் என்றால் பயணிகள் டிக்கெட் புக்கிங் செய்யும் போதே Consider for auto upgradation என்ற ஆப்ஷனை கிளிக் செய்வது அவசியம். இந்த ஆப்ஷனை கிளிக் செய்தால் மட்டுமே அவர்களின் டிக்கெட் அப்கிரேடுக்கு பரிசீலனை செய்யப்படும். ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது சில பயணிகள் அவசரத்தில் இதை கிளிக் செய்ய மறந்துவிடுவார்கள்.
குழுவாக டிக்கெட் எடுத்தால் என்ன ஆகும்?
எனவே இனி ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்தால் பயணிகள் இதை ஒரு நிமிடம் கவனத்தில் கொள்ளவும். கவுண்ட்டரில் புக் செய்தால் அதற்கான பாக்சில் டிக் செய்ய வேண்டும். குழுவாக டிக்கெட் எடுத்து இருந்தால், அதாவது ஒரே டிக்கெட்டில் ஒன்றிற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தால் அனைவருக்கும் சேர்ந்தே அப்கிரேடு ஆகும். ஒருவேளை போதிய எண்ணிக்கையில் ஏசி வகுப்பில் டிக்கெட் இல்லாமல் இருந்தால் யாருக்கும் ஆகாது.
இந்த அப்கிரேடு ஆப்ஷனை பொறுத்தவரை கோச்சில் காலியாக இருந்தால் மட்டுமே டிக்கெட் புக் ஆகும். எந்த பயணியும் இதனை உரிமை கோர முடியாது. அதேபோல டிக்கெட் அப்கிரேடு ஆகிவிட்டால், அப்கிரேடு ஆன கோச்சில் மட்டுமே பயணிக்க முடியும். ஆட்டோ அப்கிரேடு ஆப்ஷனுக்கு முதலில் கன்பார்ம் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் பரிசீலிக்கப்படுவார்கள். சீட்கள் காலியாக இருந்தால், ஆர்.ஏ.சி. மற்றும் வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளவர்களுக்கும் ஆட்டோ அப்கிரேடு கிடைக்கும்.




Click it and Unblock the Notifications
