"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்!
சென்னை: "சாக்கடைக்கு சரி சமமாக வந்து விழுகிற எடப்பாடி பழனிசாமியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டப்போகும் நாள்தான் ஏப்ரல் 23. மறைந்த தலைவர்களை இழிவுபடுத்துவது, அடுத்தவர் மரணத்தை எதிர்பார்த்து பேசுவது, பெண்களை கண்ணியம் இல்லாமல் பேசுவது என தொடர்ந்து வாய்க்கொழுப்பு எடுத்து பேசி வருகிறார்." என ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நாள் நெருங்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிப் பேசினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், "5 ஆண்டுகளில் ராமநாதபுரத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சேர்த்த உரிமையோடு வாக்கு கேட்கிறேன். ராமேசுவரம் கோவில், குண்டு மிளகாய், பசுமையான குளங்கள் ராமநாதபுரத்தின் சிறப்பு. பசும்பொன் முத்துராமலிங்க தேவர், இமானுவேல் சேகரனார், அப்துல் கலாம் ஆகியோரை தந்த மண் இது. சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களும் நல்லிணக்கத்தோடு வாழும் மாவட்டம்.
ராமநாதபுரம் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ரெடியா? திராவிட மாடல் 2.0க்கு ரெடியா? கொரோனாவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கூட கிடைக்காத நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தது. பொருளாதார நிலை 0.07 சதவீதம் என்ற நிலையில் சரிந்து இருந்தது. நிதிநிலை படு பாதாளத்தில் இருந்தது. முதலில் கொரோனாவில் இருந்து மக்களை மீட்டு, திறமையான நிர்வாகத்தால் நிதி நிலையை மீட்டோம்.
இதெல்லாம் சாதாரணமாக நடக்கவில்லை. கடுமையாக உழைத்திருக்கிறோம்.
அமைச்சர்கள் தொடர்ந்து, ஊழியர்கள் வரையும் அரசு இயந்திரத்தை முழுமையாக செயல்பட வைத்தோம். இந்த வளர்ச்சி நமக்கு போதாது. உலகளவில் தனி பிராண்டாக தமிழ்நாட்டை வளர்க்க வேண்டும். கடந்த முறை 4 தொகுதிகளில் வெற்றியை கொடுத்தீர்கள். இம்முறை 100 சதவீதம் வாக்கு வெற்றியை தருவீர்களா? திராவிட மாடல் ஆட்சியில் ரூ.3,250 கோடி மதிப்பீட்டில் 46,710 வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்துள்ளன.
பாஜகவுக்கு தமிழ்நாடு மீது வரும் அக்கறை அரசியல் ஸ்டண்ட். இரட்டை வேடம் போடுகிறது பாஜக. வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கும் செயல்களில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளது. மகளிருக்கு இட ஒதுக்கீடு என காரணம் காட்டி தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கப் பார்க்கின்றனர். இதை அத்தனை ஜனநாயக இயக்கங்களும் எதிர்க்கப்போகிறோம். இதை எதிர்த்து கேட்க எடப்பாடி பழனிசாமியால் முடியுமா?
பாஜக அட்டூழியங்களை எதிர்த்து கேள்வி கேட்டால் சைலண்ட் மோடுக்கு போகிறார் எடப்பாடி பழனிசாமி. மோடி, அமித் ஷாவை எதிர்த்து பேச வேண்டும் என்றால் பயத்தில் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிடுகிறார். இப்படிப்பட்ட ஒரு அடிமை உலகத்திலேயே இல்லை என்பதை காட்டத்தான் பிரசாரம் செல்கிறார் பழனிசாமி. பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் இந்திய அரசமைப்பின் மீது விழும் மரண அடி. மத நல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் மீது விழும் மரண அடி.
பாஜக எவ்வளவு பெரிய டேமேஜை, டேஞ்சரை உண்டாக்கி இருந்தால் அவர் இப்படி பேசியிருப்பார். பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என சொல்லும் பாஜக நம் பன்முகத்தன்மைக்கு விடுக்கும் நேரடி சவால். அந்த சவாலை இங்கு விட முடியாது. தமிழ்நாட்டை பாதுகாப்பது திராவிட பெருஞ்சுவர். நாம் போராடுவது திமுக வெற்றிக்காக மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றிக்காகவும் தான்.
"சாக்கடைக்கு சரி சமமாக வந்து விழுகிற எடப்பாடி பழனிசாமியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டப்போகும் நாள்தான் ஏப்ரல் 23. மறைந்த தலைவர்களை இழிவுபடுத்துவது, அடுத்தவர் மரணத்தை எதிர்பார்த்து பேசுவது, பெண்களை கண்ணியம் இல்லாமல் பேசுவது என தொடர்ந்து வாய்க்கொழுப்பு எடுத்து பேசி வருகிறார்." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications