Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.1900 கோடி மதிப்புள்ள ரேஷன் அரிசி கடத்தலா? அரிசி எங்கே போனது சொல்லவா? சீக்ரெட் உடைத்த ஜெயரஞ்சன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நியாய விலை கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் ரூ.1900 கோடி மதிப்புள்ள அரிசி கடத்தப்பட்டதாக எழுந்துள்ள ஆய்வு உண்மையா? அதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பது பற்றி மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் விரிவாகப் பதிலளித்துள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தமிழக நியாயவிலைக்கடைகளில் நடந்த அரிசி கடத்தல் மூலம் மட்டும் ரூ.1900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இதன் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் உரியவர்களைச் சென்றடையாமல், வேறு நபர்கள் பலன் பெற்றதால் மட்டும் நாடு முழுவதும் சுமார் ரூ.69,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டி இருந்தார்.

mk stalin jayaranjan

இது குறித்து ஆங்கில இந்து பத்திரிகையிலும் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சிக் குழு (Indian Council for Research on International Economic Relations) என்ற பொருளாதார அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம்தான் இந்த உண்மை வெளியே தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 5.2 லட்சம் டன் அரிசி, அரசின் கணக்கிலிருந்து விடுபட்டுள்ளது. இதன் அளவு 15.80%.

இந்த ICRIER ஆராய்ச்சி அறிக்கையை தயாரித்தவர்களில் பேராசிரியர் அசோக் குலாட்டியும் ஒருவர். இது பற்றி அவர், "கணக்கில் வராத அந்த அரிசி வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம். இல்லை எனில் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம்" என்று விளக்கம் அளித்திருந்தார். மேலும் அவர், தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு வழங்க வேண்டிய ரூ.1900 கோடி மதிப்புள்ள சுமார் 5.2 லட்சம் டன் அரிசி கடத்தப்பட்டுள்ளதை மன்னிக்கவே முடியாது என்றும் இதில் வெறும் ரூ.2.4 கோடி மதிப்புள்ள 42,500 டன் கடத்தல் அரிசியை மட்டுமே இதுவரை தமிழக அரசு பறிமுதல் செய்துள்ளது. ஆனால் இந்தக் கடத்தல் தொடர்பாக சில ஊழியர்கள் தவிர வேறு யார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டி இருந்தார்.

இந்தளவுக்கு ஒரு கடத்தல் சந்தை இயக்கி வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்தப் புகார் குறித்து தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அவர், "இந்த ஆய்வை யார் வெளியிட்டுள்ளார்கள் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் குழுவிலிருந்த பேராசிரியர் அசோக் குலாட்டி அரசு வழங்கும் இலவசத் திட்டங்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர். அரசு இலவசத் திட்டங்களை வழங்கக் கூடாது என்று கொள்கையைப் பல ஆண்டுகளாகப் பேசி வருபவர்.

mk stalin jayaranjan

என்.எஸ்.எஸ்.ஓ என அரசு அமைப்பு ஒன்றுள்ளது. இதன் அதிகாரிகள் குத்து மதிப்பாக ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள குடும்பங்களுக்குச் சென்று ஒரு கணக்கெடுப்பை நடத்துவார்கள். அதில் வீட்டில் வாங்கும் மளிகை சாமான்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள்? எதற்கு அதிக செலவு செய்கிறார்கள் எனக் கணக்கிடுவார்கள். இந்த அமைப்பு உணவு தானியங்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என ஒரு டேட்டாவை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வு மூலம் நியாய விலை கடைகள் மூலம் எவ்வளவு உணவுப் பொருட்கள் ஒரு குடும்பத்திற்குப் போய்ச் சேர்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியும். வழக்கமாக பொது விநியோகம் திட்டம் மூலம் ஒரு குடும்பத்திற்கு தேவையான முழு பொருளையும் அரசு வழங்குவதில்லை. அதில் ஒரு பகுதியை மட்டுமே வழங்கும். என்.எஸ்.எஸ்.ஓ வெளியிட்டுள்ள டேட்டாவை வைத்துக் கொண்டு ஒரு தோராயமான சர்வேவை எடுத்து அதைக் கொண்டு இந்த ரூ.1900 கோடி இழப்பு என்று அறிவித்திருக்கிறார்கள். இது அறிவியல் ரீதியாக முழு உண்மையல்ல.

ஆகவேதான் நேற்று Business Standard இதழில் இந்த ஆய்வை மறுத்து ஒரு மத்திய அரசு மறுத்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் உரிமை படி ஒதுக்கப்படும் தானியத்தின் தரவை ICRIER வெளியிட்ட அறிக்கையுடன் ஒப்பிட்டு இரண்டும் பொருந்திப் போகவில்லை என விளக்கியுள்ளனர். உணவு கையிருப்பு என்பதை ஃபுட் கார்ப்பரேஷன் எப்படிக் கணக்கிடுகிறது என்பதையும் அதில் தெளிவுபடுத்தி இருக்கின்றனர்.

இதைப் பற்றி எனது பார்வை வேறானது. இங்கே 5.2 லட்சம் டன் உரியப் பயனாளிகளுக்குப் போய்ச் சேரவில்லை என சொல்வது சரியான கருத்து அல்ல. அந்த அரிசி உடனே கடத்தப்பட்டுவிட்டது என சொல்ல முடியாது. சாலையோரமாக உணவகம் நடத்துபவர்கள் மலிவு விலையில் டிஃபன் போடுகிறார்கள். மதிய சாப்பாடு போடுகிறார்கள். அதை மாதிரியான கடைகளில் இந்த ரேஷன் அரிசிதான் பயன்படுத்தப்படுகிறது. நியாய விலை கடையில் பெறும் அரிசியைப் பலர் இப்படியான கடைகளில் கொடுத்துவிடுகிறார்கள்.

அதேபோல் வடமாநில மக்கள் பலர் ரேஷன் அரிசியை வாங்கி பயன்பெறுகிறார்கள். இதை எல்லாம் 'கசிவு' எனக் கணக்கிடுகிறது அந்த சர்வே. அதனால் கடத்தல் என்று ஒரு தவறான பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள். அது கடத்தப்படவில்லை. வேறு வகையில் தொழிலாளர்கள் மலிவு விலையின் உணவாகக் கையேந்தி பவன் மூலம் பலன் பெற்று வருகிறார்கள்.

ஆக, எப்படிப் பார்த்தாலும் நியாய விலை கடை மூலம் விநியோகிக்கும் அரிசி என்பது ஏழை எளிய மக்களுக்குத்தான் மறைமுகமாகப் போய்ச் சேர்கிறது. ரேஷன் கடையில் அரிசியை வாங்கியவர் அவர் வீட்டில் சமைத்துச் சாப்பிட்டால் மட்டுமே கணக்கில் ஏற்போம் என ICRIER ஆய்வு சொல்வது தவறான அணுகுமுறை" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+