சென்னையில் சாலைகளில் மழைநீர் தேங்கினால்.. குடிநீர் வாரியம் செய்த சூப்பர் ஏற்பாடு
சென்னை: விவேக் ஒரு படத்தில் தனக்கு தண்ணீரில் கண்டம் என்று சொல்வார், காமெடிக்காக அப்படி சொல்வார்.. நிஜமாக சென்னைக்கு தண்ணீரில் தான் கண்டமாக இருந்துள்ளது. ஒவ்வொரு முறை வடகிழக்கு பருவ மழை வரும் போதும் ஏற்படும் வெள்ள பாதிப்புகளால் சென்னை மக்கள் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் கடைகோடி நகரான சென்னைதான் தமிழ்நாட்டின் முக்கியமான நுழைவு வாயிலாக உள்ளது. சென்னை மற்ற நகரங்களை போல் இல்லாமல் சமதளத்தில் உள்ள நகரம். மேடான பகுதி,பள்ளமான பகுதி என்றெல்லாம் இல்லை. சென்னை மொத்தமும் சமமான நிலப்பரப்பு தான். சென்னையின் புறநகர் பகுதிகளில் இருந்த ஏரிகளை எண்ணவே முடியாது. அவ்வளவு ஏரிகள் இருந்தது. சென்னைக்குள்ளும் ஏரிகள் அதிகமாகவே இருந்தது. ஆனால் மக்கள் நெருக்கம் காரணமாக பல ஏரிகள் காணாமல் போய்விட்டன. சில ஏரிகள் மிகச்சிறய குளங்களாக மாறிவிட்டன.

சென்னையின் புறநகர் பகுதிகளிலும், சென்னையிலும் இயல்பான அளவில் ஏரிகள் இல்லாத காரணத்தாலும், ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி போன காரணத்தாலும், அதிகப்படியான மழை வந்தால் , அது அவஸ்தையான விஷயமாக சென்னை மக்களுக்கு மாறத் தொடங்கிவிட்டது. சென்னையைவிட புறநகர் பகுதிகளில் தான் வெள்ளப்பாதிப்பு அதிகமாக உள்ளது. அதற்கு காரணம் முறையான வடிகால் அமைப்புகள் இல்லாதது. நீர் செல்லும் வடிகால்களை ஆக்கிரமித்தது போன்றவை தான்.
தற்போது தான் அரசு புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் சாக்கடை கால்வாய்களை தீவிரமாக அமைத்து வருகிறது. இந்த பணிகள் முடிந்தால் தான் ஓரளவு வெள்ள அபாயம் குறையும். அதேநேரம் சென்னையில் பல பகுதிகள் பள்ளமானவை என்பதால், மிகப்பெரிய மழை வந்தால் கண்டிப்பாக தண்ணீர் தேங்கும். அவற்றை உடனே அகற்ற வேண்டியதும் அவசியம் ஆகும்.
வடகிழக்கு மழையின் போது சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க, அதை உடனே அகற்ற மோட்டார்கள், சூப்பர் சக்கர்கள் பயன்படுத்தப்பட்டு கழிவுநீர் லாரிகள் மூலம் அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பணிகளில் சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியம் ஈடுபடுவது வாடிக்கையாகும்.
அந்த வகையில் இந்த ஆண்டு சென்னையில் பருவ மழையின் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குடிநீர் வாரியம் எடுத்து வருகிறது. அதன்படி வெள்ளம் மற்றும் கழிவுநீரை அகற்றுவதற்கான பணிகளில் ஈடுபட ஊழியர்கள், எந்திரங்களை தயார்படுத்தி வருகிறது. தற்போது குடிநீர் வாரியத்திடம் 537 லாரிகள் இருக்கின்றன.
இந்நிலையில் திருச்சி, கோவை போன்ற தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கூடுதலாக 50 லாரிகளை ரூ.1.43 கோடி செலவில் வாடகைக்கு எடுக்கவும் குடிநீர் வாரியம் திட்டமிட்டிருக்கிறது. இந்த லாரிகள் மண் அகற்றும் எந்திரங்கள், ஜெட்ரோடர்கள், சூப்பர் சக்கர்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட உள்ளதாம்.
மழை காலத்தில் கழிவுநீர் வழக்கமான அளவை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால், ரூ.15 கோடி முதல் ரூ.17 கோடி வரையில் அதிக குதிரைத்திறன் கொண்ட 50 பம்புகளை வாடகைக்கு எடுத்து மழை நீர் மற்றும் கழிவுநீர் தடுப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள்.
இதுதவிர கழிவு நீரேற்று நிலையங்கள், மழை நீர் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் இருந்து கழிவு நீரை வெளியேற்றுவதற்காக 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தயராகி வருகிறார்கள். மேலும் மின்சாரம் துண்டிக்கப் பட்டாலும் டீசல் ஜெனரேட்டர்கள், தண்ணீர் மற்றும் கழிவுநீரை அகற்றுவதற்காக பம்பிங் நிலையங்களை இயக்குவதற்கு தயார் செய்து வருகிறார்கள்.
அக்டோபர் முதல் வாரம் தொடங்கி ஜனவரி முதல் வாரம் வரை சென்னையில் மழை காலம் என்பதால் , இந்தமுறை மழை எப்படி இருக்கும் என்கிற அச்சம் மக்களிடையே உள்ளது.சென்ற ஆண்டு பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் அதற்கு முந்தைய ஆண்டான 2021ல் பாதிப்பு மிக அதிகம் ஆகும்.












Click it and Unblock the Notifications