தொகுதி வாங்க அவசரம்லாம் ஒன்றுமில்லை.. திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. திருமாவளவன் திட்டவட்டம்
சென்னை: அதிமுக, பாஜக கூட்டணிகள் சும்மா இருப்பதால் திமுக கூட்டணி மீது அதிக கவனம் செலுத்தப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நாங்கள் விரும்பும் தொகுதிகளை திமுக தலைமையிடம் திரும்ப திரும்ப கேட்போம் என்று கூறியுள்ள திருமாவளவன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் அவசரம் காட்ட முடியாது என்றும் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பரபரப்பான சூழ்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் சூடு பிடித்துள்ளன. தமிழ்நாட்டில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவது என்று இறுதி செய்து வருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் நிறைவேறியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படவில்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நிர்வாகிகள் திமுக உடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் அவசரம் காட்ட வேண்டாம் என்று கூறியுள்ளனர். தேர்தல் பணிகளை செய்வதற்காக விசிகவில் பல்வேறு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுக கூட்டணியில்தான் இப்போதும் நீடிக்கிறோம். தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இணைந்துதான் தேர்தலை சந்திக்கப்போகிறோம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அவசரம் காட்ட மாட்டோம். அதற்கான அவசியமும் இல்லை. தேவைப்பட்டால் முதல்வரை சந்திப்போம்.
லோக்சபா தேர்தலில் போட்டியிட 2 தனித் தொகுதிகள், 1 பொதுத்தொகுதியை கேட்டிருக்கிறோம். எங்களுக்கு சாதகமான தொகுதிகளை தர வேண்டும் என்று திரும்ப திரும்ப வலியுறுத்துவோம். இந்தியா கூட்டணியில்தான் இணைந்து போட்டியிட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறோம்.
சிதம்பரம் தொகுதியில்தான் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். தொடர்ந்து அந்த தொகுதியை மீண்டும் கேட்டுப்பெறுவேன் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார். அதிமுக, பாஜக கூட்டணிகள் அமைதியாக சும்மா உள்ளதால் திமுக கூட்டடணி பற்றி மட்டுமே பொதுவெளியில் பரபரப்பாக பேசப்படுவதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் 2019 லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனும் விழுப்புரம் தொகுதியில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் வெற்றி பெற்றனர். இந்த முறை, விசிக, கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் விசிக சார்பில் நடத்தப்பட்ட வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்களை வரவழைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தங்களது பலத்தைக் காட்டியுள்ள விசிக, இந்த முறை 3 தொகுதிகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications