Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாலியை கழற்ற சொன்னார்களா? மனமுடைந்து மலேசிய பெண் வெளியிட்ட வீடியோ.. சுங்கத்துறை விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் தங்க நகைகளை அணிந்து வந்த 2 வெளிநாட்டு பயணிகளிடம் அபராதம் வசூலித்து நகைகள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. மலேசிய பெண்ணிடம் தாலியை கழற்ற சொல்லவில்லை என சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

மலேசியாவைச் சேர்ந்த தமிழ் பெண், திருப்பதி, திருத்தணி கோயில்களில் தரிசனம் செய்வதற்காக மலேசியாவில் இருந்து அவரது கணவருடன் அண்மையில் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் தம்பதியை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தார்கள். அப்போது அந்தப் பெண்மணி தங்க தாலி சங்கிலி, அவரது கணவர் கழுத்தில் செயினும் கையில் காப்பும் அணிந்திருந்திருக்கிறார்கள்.

அப்பொழுது அந்த பெண்ணின் கணவர் மட்டும் அவரது கழுத்தில் அணிந்திருந்த செயின் மற்றும் கையில் அணிந்திருந்த காப்பை கழட்டி கொடுத்துள்ளார். அந்தப் பெண்மணியும் கழுத்தில் அணிந்திருந்த தாலிச் சங்கிலியை காட்டும்படி சுங்கத்துறை அதிகாரிகள் கூறினார்களாம். உடனே அந்தப் பெண்மணி என்னுடைய தாலிச் சங்கிலியை என்னால் எடுத்து வெளியில் காட்ட முடியாது என மறுத்துவிட்டார்.

we did not ask the Malaysian woman to remove her thali: Chennai airport customs officials

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் பேசிய அவர், "மலேசியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவதற்கு ஒருவர் எத்தனை கிராம் நகை அணிந்து வர வேண்டும் என்பது எங்களுக்கு தெரியாது.

நாங்கள் தெரியாமல் நகையை அணிந்து வந்து விட்டோம். இதற்கு என்ன பெனால்டி கட்ட வேண்டும் என கேட்டோம்.அதற்கு எங்களை இரண்டு மணி நேரத்துக்கு மேலாக காக்க வைத்தார்கள், அது மட்டும் இன்றி எங்களை நாயை நடத்துவது போல் நடத்துனாங்க. என்னுடைய கணவர் நகையை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். கெஞ்சி கதறினோம்.எங்களிடம் வெளிநாட்டில் இருந்து சென்னை வருபவர்கள் 20 கிராம் மட்டுமே கொண்டு வருவதற்கு அனுமதி உண்டு என கூறினார்கள்.

ஆனால் நாங்கள் இருக்கும் போதே மற்றொரு பயணியிடம் 10 கிராம் நகை மட்டுமே கொண்டு வர அனுமதி உண்டு என்றும் கூறினார்கள். வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய பயணிகள் எவ்வளவு நகை தான் கொண்டு வர வேண்டும் என தெரியாத சூழ்நிலையில் பயணிகள் தவிக்கிறார்கள்.

எங்களது நகையை வாங்கி வைத்துக் கொண்டு 5 லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றார்கள். கடந்த வருடம் நவம்பர் மாதம் சென்னைக்கு வரும்போது இதே நகைகளை தான் நாங்கள் அணிந்து வந்தொம்.அப்பொழுது சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நகை குறித்து எந்த கேள்வியும் எங்களை கேட்கவில்லை, இப்பொழுது ஏன் கேட்கின்றார்கள் என தெரியவில்லை. நாங்கள் தாலி சங்கிலி போடாமல் மஞ்ச கயிற்றில் தாலி மட்டும் போட்டால் 10 கிராம் குறைவாக தாலி போட முடியாது. வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்தால் தாலியை கழட்டி வைத்துவிட்டு தான் வர வேண்டுமா?" எனக் கூறி வீடியோ வெளியிட்டார். இதற்கு சென்னை விமான நிலைய சுங்க ஆணையரகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை விமான நிலைய சுங்க ஆணையரகம் சார்பில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது: "குறிப்பிட்ட இரண்டு வெளிநாட்டு பயணிகளும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் தங்க நகைகளை அணிந்து வெளியேற முற்பட்டார்கள். இதனை கண்ட சுங்க அதிகாரிகள், அந்த நகைகள் குறித்த விவரங்களை கேட்டன்ர். ஆனால் அவர்கள் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

குறிப்பிட்ட பெண் பயணியிடம் தாலியை கழற்றுமாறு கூறவில்லை. சுங்க விதிகளை பற்றி விளக்கிய பிறகு அப்பெண்ணின் கணவர் மட்டும் தான் அணிந்திருந்த தங்கச்சங்கிலி மற்றும் காப்பை சோதனைக்கு உட்படுத்த அனுமதித்தார்.

அந்த தங்க நகைகளின் எடை 285 கிராம் (சுமார் 35 பவுன்). அதன் இந்திய மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். அதன் மேல் ரூ.6.5 லட்சம் சுங்க வரியாக செலுத்த வேண்டும் என கணக்கிடப்பட்டது. அந்த சுங்க வரியை கட்டுவதற்கு பயணிகள் மறுத்து விட்டனர். எனவே, அந்த 285 கிராம் கைப்பற்றப்பட்டு, பயணிகளிடம் ரசீது வழங்கப்பட்டது. அந்த நகைகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சுங்க சட்ட விதிகளின்படி அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகை செலுத்திய பின்னர் மலேசியா செல்லும்போது அந்த நகைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன." இவ்வாறு சென்னை விமான நிலைய சுங்க ஆணையரகம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+