நீங்கள் முடிவு எடுக்கவில்லை என்றால்.. ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றம் பரபர உத்தரவு
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த இரண்டு ரிட் மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்குவது தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளது.
கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது, சிலர் மீது வழக்குத் தொடர அனுமதி, தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் உறுப்பினர் நியமனம் தொடர்பான அரசின் பல கோப்புகளும் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. ஏப்ரல் 10, 2022 முதல் 15 மே, 2023 வரை சமர்ப்பிக்கப்பட்ட பல கோப்புகள் நிலுவையில் உள்ளன.

நவம்பர் 13, 2023 அன்று, ஆளுநர் 10 மசோதாக்களுக்கு ஒப்புதலைத் வழங்காமல் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றம் நவம்பர் 18, 2023 அன்று சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, அந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றியது.
நவம்பர் 28 அன்று, நிறுத்தி வைக்கப்பட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்ட பின்னர், சில மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரைத்தார். இந்த நிலையில்தான் ஆளுநர் மசோதாக்கள் பலவற்றை நிலுவையில் வைத்து இருப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு 2 ரிட் மனுக்களை தாக்கல் செய்தது.
இன்று உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வாதம் நடைபெற்றது. இன்று, நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோகத்கி (முதல் ரிட் மனுவில் தமிழக அரசு சார்பில் ஆஜரானார் ), அபிஷேக் மனு சிங்வி (இரண்டாவது ரிட் மனுவில் தமிழக அரசு சார்பில் ஆஜரானார் ) ஆகியோர் வாதம் செய்தனர்.
அரசு தரப்பு -முகுல் ரோகத்கியின் வாதங்கள்
ஆளுநர் மசோதாவின் ஒப்புதலைத் நிறுத்தி வைப்பதாக சொன்னால், அந்த மசோதாக்களை மறுபரிசீலனைக்கு குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்ப முடியாது. அது சட்டசபைக்கு திரும்ப செல்லும். சட்டசபை மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றிய பிறகு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அவர் கண்டிப்பாக ஒப்புதல் அளிக்க வேண்டும். கவர்னர் அதைச் செய்யாவிட்டால், ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பும் தோல்வியடையும் என்றும் ரோகத்கி வாதிட்டார்.
நீதிபதி கேள்வி:
ஒரு மசோதா சட்டசபைக்கு திருப்பி அனுப்பப்பட்டு, மீண்டும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும் ஆளுநருக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால்.. அந்த சூழ்நிலையில் என்ன நடக்கும் என்று நீதிபதி பார்திவாலா கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ரோகத்கி: "ஆளுநருக்கு வேறு வழியில்லை. முழு மசோதாவும் அரசியலமைப்புக்கு எதிரானது அல்லது சில பகுதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் ஒருமுறை மட்டுமே கூற முடியும். அவர் திருப்பி அனுப்பிய பின் சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டால் அதை ஆளுநர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மசோதா மீது ஆளுநர் முடிவெடுக்காமல் கிடப்பில் போட முடியாது. எனவே சட்டப்பிரிவு 200ன் படி செயல்பட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும், என்று வாதம் வைத்தார்.
அரசு சார்பாக ஆஜரான சிங்வி வாதங்கள்:
ஆளுநர் எதுவும் செய்யவில்லை என்பதே சிக்கல். 200வது பிரிவின் முதல் பகுதியில், ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கலாம் அல்லது மறுபரிசீலனைக்கு குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். ஆனால் இரண்டையும் செய்யாமல் ஆளுநர் உள்ளார். அவர் எதுவும் செய்யாமல் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளார் என்பதே சிக்கல். மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் அரசியல் சாசன விதிகளின் கீழ், ஆளுநருக்கு கூடுதல் வாய்ப்பு என்பது இல்லை
அவருக்கு விருப்பமான வழியில், அரசியல் சாசன விதிகளை புரிந்து செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றியுள்ளார்.
மசோதாவுக்கான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக சட்டப்பேரவைக்கு கூறுகிறார். இதன் பொருள், மீண்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் சட்ட மன்றத்திற்கு போய்விட்டது என்பதுதான். இது அரசியலமைப்பின் மீதான தாக்குதல். ஆண்டுக் கணக்கில் ஆளுநர் மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல் உள்ளார். "As soon as possible" முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை, என்று வாதம் வைத்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பேசுகையில்,
ஆளுநர், மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும்; வேண்டுமானால் தேநீர் விருந்துக்கு அழைத்துப் பேசுங்கள். ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார் என நாளை மறுநாள் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும். இன்னும் 24 மணிநேரம் இருப்பதால், ஆளுநர் அரசியல் சாசனப்படி தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு வாதம்: எந்தக் காரணத்தையும் கூறாமல், மசோதாவை கிடப்பில் போட்டு வைப்பது சட்ட விரோதம். சட்டமன்றத்தில் மறுபடியும் மசோதா இயற்றப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும், அதனை கிடப்பில் போடக்கூடாது என்று வாதம் வைக்கப்படுகிறது. எனவே இன்னும் 24 மணி நேரம் நேரத்தில்.. ஆளுநர் இதில் முடிவு எடுக்க வேண்டும். அவர் அரசியல் சாசனப்படி தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும். ஆளுநர் அப்படி முடிவு எடுக்கவில்லை என்றால் மாநிலத்தின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும், என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications