பாஜக அரசுக்கு எதிராக கோவையில் திரண்ட திமுக கூட்டணி கட்சியினர்.. முதல்வர் ஸ்டாலின் போட்ட சபதம்!
சென்னை: "கோவை, மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிப்பு, SIR மூலம் வாக்குரிமை பறிப்பு, Delimitation மூலம் தமிழ்நாட்டின் தொகுதி குறைப்பு, மக்களாட்சி மாண்பை மதிக்காத ஆளுநரின் அடாவடி, நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு, தமிழ்மொழி மீதான தாக்குதல் & இந்தித் திணிப்பு என அனைத்துக்கும் எதிராகத் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்!" எனத் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய செந்தில் பாலாஜி, "பாஜக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மெட்ரோ ரயில் திட்டம் வாக்குறுதி கொடுத்தது. விரிவான திட்ட அறிக்கை கடந்த 15 மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதை நிராகரித்துள்ளனர். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் ஐந்து மாதங்களில் விரிவான அறிக்கைக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரிக்க மக்கள்தொகையை காரணம் காட்டியுள்ளனர். ஆக்ரா, பீகார், போபால் போன்ற இடங்களுக்கு மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி கொடுத்தவர்கள், இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வந்துவிடக்கூடாது என்ற குறுகிய மனப்பான்மையோடு மத்திய அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் வந்து திருக்குறளை பேசியும், தமிழில் பேசியும், ஏதோ தமிழ்நாட்டின் மீது அக்கறை இருப்பது போல் பேசி ஏமாற்றி வருகின்றனர். கோவையில் பிரதமர் மோடி பீகாரின் வாசம் கோவையில் வீசுகிறது என்று கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் கோவையில் மக்களுக்கு வாக்குறுதி அளித்தோமே என்ற கூச்சமே இல்லாமல் பேசியுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை மக்கள் 10 தொகுதிகளில் ஜெயிக்க வைத்தனர். அப்படிப்பட்ட மக்களுக்கு மெட்ரோ திட்டத்தை கொடுக்க மனம் இல்லாத அரசு மோடி அரசு. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்துவார்" எனப் பேசினார்.
இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
🗡️ கோவை, மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிப்பு,
🗡️ #SIR மூலம் வாக்குரிமை பறிப்பு, #Delimitation மூலம் தமிழ்நாட்டின் தொகுதி குறைப்பு,
🗡️ மக்களாட்சி மாண்பை மதிக்காத ஆளுநரின் அடாவடி,
🗡️ நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு,
🗡️ தமிழ்மொழி மீதான தாக்குதல் & இந்தித் திணிப்பு
🛡️ என அனைத்துக்கும் எதிராகத் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications