டிரம்ப்பின் 25% வரியால் தமிழகத்திற்கு ஆபத்து.. எந்தெந்த துறைகளில் பாதிப்பு மோசமாக இருக்கும்!
சென்னை: இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்போவதாக டிமர்ப் திடீரென அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவுடனான இந்தியாவின் 87 பில்லியன் டாலர் ஏற்றுமதி உறவு ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது.. அமெரிக்கா இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளியாக இருக்கிறது. இதனால் டிரம்ப் இந்த வரி இந்தியாவை எப்படிப் பாதிக்கும்.. எந்த துறை இதில் அதிக சவால்களை எதிர்கொள்ளும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென இன்று இந்தியப் பொருட்களுக்கு 25% வரியை விதிக்கப் போவதாக அறிவித்தார். இதற்கு அவர் முக்கியமாக இரு காரணங்களைச் சொல்லியிருக்கிறார். ஒன்று வர்த்தக கட்டுப்பாடுகள், அடுத்து ரஷ்யா இந்தியா வணிக உறவு. இதைக் காரணமாகச் சொல்லி ஆகஸ்ட் 1 முதல் வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் சொல்லியுள்ளார். இது என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

டிரம்ப் வரிகள்
இந்தியாவின் அதிக வருவாய் ஈட்டும் ஏற்றுமதி துறைகளைக் குறிவைத்து இந்த வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்கள், எஃகு, அலுமினியம், ஸ்மார்ட்போன்கள், சோலார் பேனல்கள், கடல் சார்ந்த பொருட்கள், ரத்தினக் கற்கள், நகைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் என அனைத்தும் 25% வரி விதிப்பு பட்டியலில் உள்ளன. ஆனால் மருந்துகள், செமி கண்டெக்டர்கள் மற்றும் முக்கியமான கனிமங்கள் இதிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
பாதிப்பு இருக்கும்
அமெரிக்காவின் இந்த வரியால் உடனடி பாதிப்புகள் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. இது தொடர்பாகப் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர்-இயக்குநர் ராகுல் அலுவாலியா கூறுகையில், "அமெரிக்காவிற்கு மருந்துகள், எலக்ட்ரானிக்ஸ், ரத்தினங்கள் மற்றும் நகைகள், ஜவுளி மற்றும் ஆடை ஆகியவை இந்தியாவில் இருந்து முக்கியமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் மருந்துகள், எலக்ட்ரானிக்ஸ்களுக்கு முதலில் அமெரிக்கா விலக்கு அளித்திருந்தது. அது தொடரும் என நம்புவோம். ஆனாலும், மற்ற துறைகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படும்" என்றார்.
துறை வாரியாக பாதிப்பு
டாடா மோட்டார்ஸ் மற்றும் பாரத் ஃபோர்ஜ் போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அமெரிக்காவில் தேவை குறையும் என எதிர்பார்க்கின்றன. குறிப்பாக அதிக மதிப்புள்ள வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்களுக்கான தேவை குறையும். அமெரிக்காவின் ஆர்டர்கள் குறைந்தால் வேலை இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் சோலார் பேனல்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்ளும். ஏற்கனவே குறைந்த லாபத்தில் இயங்கும் இந்த நிறுவனங்கள், வரி விதிப்பால் மேலும் பாதிக்கப்படும்.
கடல் உணவு, பேஷன் துறை
ஒவ்வொரு ஆண்டும் 9 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடல் உணவு இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது விதிக்கப்பட்டுள்ள 25% வரியை ஏற்றுமதியாளர்கள் செலுத்த வேண்டும். அல்லது வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும். இதில் எது நடந்தாலும் ஏற்றுமதி குறைவது உறுதி! அப்படி இல்லையென்றால் வேறு நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்.
ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் இதன் தாக்கம் கலவையாக இருக்கும். சீன அல்லது வியட்நாம் உட்படப் போட்டி நாடுகளுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்தால், இந்திய நிறுவனங்கள் பயனடையலாம். ஆனால் அதிக லாபம் தரும் ஃபேஷன் ஆடைகள் மற்றும் உயர் ரக துணிகளின் ஏற்றுமதி குறையக்கூடும்.
போட்டி நாடுகள்
இது தொடர்பாக அலுவாலியா மேலும் கூறுகையில், "25% வரி விதிப்பால் வியட்நாம் மற்றும் சீனாவை விட நாம் பின்தங்கி விடுவோம். ஏனெனில் முதலீடு மற்றும் தொழில் மயமாக்கலுக்கு இந்த நாடுகளுடன் தான் நாம் போட்டியிடுகிறோம். எனவே, உடனடியாக அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். அதுவே நமக்கு உதவிகரமாக இருக்கும்" என்றார்.

தமிழ்நாட்டிற்கும் பாதிப்பு
இந்த வரி விதிப்பு தொடர்ந்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% முதல் 0.5% வரை குறைய வாய்ப்புள்ளதாக என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர். குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தான் ஏற்றுமதி மையங்களாக உள்ளன. அவை கடுமையாகப் பாதிக்கப்படும். குறிப்பாக தமிழக்ததில் இருந்து ஜவளி மற்றும் எலக்டிரானிக் ஏற்றுமதி அதிகம் இருக்கும் நிலையில், அது பாதிக்கப்படலாம்.
இது குறித்து இந்தியாவின் வர்த்தக கொள்கை தலைவர் அக்னேஸ்வர் சென் கூறுகையில், "இந்தியாவின் ஏற்றுமதிக்கு அமெரிக்கா 25% வரி விதிக்கும் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்த நேரத்தில் இந்த அறிவிப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை. மேலும் ஒரு விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக அமெரிக்கக் குழு ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவிற்கு வரவுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்" என்றார்.
புதிய சந்தையைத் தேட வேண்டும்
நடக்கும் விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது இந்த வரி குறுகிய கால பிரச்சனையாக இருக்குமா அல்லது நீண்ட கால மோதலாக மாறுமா என்பதை இப்போது சொல்ல முடியாது. இப்போதைக்கு, இந்திய ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதுடன், புதிய உலக சந்தைகளை நோக்கிச் செல்ல தயாராக இருக்க வேண்டும். அதுவே வரும் காலத்தில் இந்தியாவுக்குச் சரியானதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications