2021ல் தொடங்கிய ரகசிய ஸ்கெட்ச்! விஜய் போட்ட 6 கட்ட வியூகம்.. திமுக கோட்டையை தகர்த்தது எப்படி?
சென்னை: தமிழ்நாடு அரசியலில் விஜய் ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுத்துள்ளார். சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்கும் பணிகளில் தவெக இறங்கியுள்ளது. இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய 6 முக்கியமான பாயிண்டுகள் தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழக அரசியலில் ஒரு மாபெரும் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி, 108 இடங்களில் வென்று தமிழக வெற்றிக் கழகம் ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. தி.மு.க கூட்டணி 70 இடங்களுக்கும், அ.தி.மு.க 51 இடங்களுக்கும் தள்ளப்பட்டுள்ள நிலையில், தவெகவினர் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். அதேநேரம் இந்த வெற்றி என்பது ஏதோ ஒரு மேஜிக் அல்ல.. இது பல ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்ட ஒரு மாபெரும் அரசியல் திட்டம் என்றே சொல்லலாம்..

விஜய்யின் இந்த அரசியல் எழுச்சி என்பது இந்த ஒரு தேர்தல் மூலம் மட்டும் உருவானது அல்ல.. இது பல அடுக்குகளாக, பல கட்டங்களாகச் செதுக்கப்பட்டது.
1. ரசிகர் மன்றம்
விஜய் முதலில் கையில் எடுத்தது தனது ரசிகர் பலத்தைத் தான். தமிழகம் முழுவதும் பரவியிருந்த லட்சக்கணக்கான ரசிகர் மன்றங்களை வெறும் சினிமாவுக்காக மட்டும் பயன்படுத்தாமல், மக்கள் மன்றமாக மாற்றினார். ரத்த தான முகாம்கள், நிவாரணப் பணிகள், மாணவர்களுக்குக் கல்வி விருதுகள் எனத் தொடர்ந்து மக்கள் மத்தியில் நின்றனர். இது ஒவ்வொரு வீட்டுடனும் ஒரு நேரடித் தொடர்பை உருவாக்கினார்.
2. ரகசியமாக நடந்த ஒரு "டெஸ்ட் ரன்"
2021ம் ஆண்டு எவ்வித ஆரவாரமும் இன்றி ஒரு சோதனையை விஜய் நடத்தினார். கட்சி தொடங்கப்படாத நிலையிலும், ரசிகர் மன்ற நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகக் களம் இறங்கினர். சுமார் 169 பேர் போட்டியிட்டதில் 115 பேர் வெற்றி பெற்றனர். பூத் மேனேஜ்மென்ட் முதல் வேட்பாளர் தேர்வு வரை தங்களது நெட்வொர்க் வலுவாக இருப்பதை இந்தத் தேர்தல் நிரூபித்தது.
3. பொறுப்புகளில் கவனம்
2026 தேர்தலுக்கு முன்னதாக, வெறும் உற்சாகத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், சரியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதில் தவெக கவனம் செலுத்தியது. கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல நேர்காணல்கள், பின்னணிச் சரிபார்ப்புகள் நடத்தப்பட்டே பெரும்பாலான பொறுப்புகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வார்டு பொறுப்பாளர்கள் முதல் பூத் ஏஜெண்டுகள் வரை அனைவரும் தங்கள் வேலையைத் தெரிந்து இருந்தனர்.
4. விசில் சத்தம்
புதிய கட்சிகளுக்கு இருக்கும் மிகப் பெரிய சிக்கலே தங்கள் சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது தான். ஆனால், தவெகவுக்கு விசில் சின்னம் கிடைத்த சூழலில், அது மக்களிடையே எளிதில் சென்று சேர்ந்தது. போஸ்டர்கள், பேனர்கள் என்பதோடு நின்றுவிடாமல் சோஷியல் மீடியாக்கள், வீடுகளின் வாசல் கோலங்கள் என எல்லா பக்கமும் விசில் சின்னம் சென்று சேர்ந்தது. தவெகவின் லோக்கல் யூனிட்டுகள் எந்தளவுக்குப் பலமாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
5. டிஜிட்டல் பரப்புரை
நீண்ட காலமாகச் செயல்பட்டு வந்த வாட்ஸ்அப் குழுக்கள் தேர்தல் நேரத்தில் நேரடிப் பரப்புரைப் பாதைகளாக மாற்றப்பட்டன. மேலும், தலைமைக்குத் தகவல்கள் உடனுக்குடன் பகிரப்பட்டது. இது ஒரு வலுவான தகவல் தொடர்பு களமாக மாறியது. ஊழல் எதிர்ப்பு, இளைஞர் நலன் உள்ளிட்டவை டிஜிட்டல் பரப்புரைகள் மூலம் இளைஞர்களிடம் கொண்டு செல்லப்பட்டன.
6. வழக்கமான பிரச்சாரம் இல்லை
பொதுவாக அரசியல் கட்சி என்றால் எல்லா தொகுதிகளிலும் இறங்கி பிரச்சாரம் செய்ய வேண்டும். பூத் ஏஜெண்டுகள் முக்கியத்துவம் பெறுவார்கள். ஆனால், அதை எல்லாம் தவெக தகர்த்துள்ளது. வெறுமன விஜய் என்ற ஒரு நபர் மூலமாகவே இவ்வளவு பெரிய வெற்றி சாத்தியமாகி இருக்கிறது.
திமுக, அதிமுக என்ற இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளைத் தாண்டி விஜய் இவ்வளவு பெரிய வெற்றியை அடைவது சாதாரண விஷயம் இல்லை.. இது தமிழக அரசியல் ஒரு மிக முக்கியமான மாற்றத்தை நோக்கிச் செல்வதையே காட்டுகிறது.














Click it and Unblock the Notifications