மெரினா பீச் போறீங்களா.. வாகனங்களை எங்கு நிறுத்தலாம்? போலீசாரின் முன்னேற்பாடுகள்.. முழு விவரம்!
சென்னை: காணும் பொங்கலை கொண்டாடும் வகையில் சென்னையில் மெரினா பீச் செல்லும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் முன்னேற்பாடுகளை செய்துள்ளனர். இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உழவர் திருநாளான காணும் பொங்கலை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். காலை முதலே சுற்றுலா தளங்களுக்கும், பூங்காக்களுக்கும், நீர்நிலைகளிலும் குவிந்து வருகின்றனர். காணும் பொங்கல் என்பதே உறவினர்களையும், நண்பர்களையும் ஒருங்கிணைக்கும் நாள் என்பதால், சென்னையில் பொதுமக்கள் அதிகளவில் சுற்றுலா தளங்களில் குவிந்து வருகின்றனர்.

அந்த வகையில் மாலை நேரத்தில் மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனை கணக்கில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே காமராஜர் சாலைக்கு வரும் வாகனங்கள், மாற்றுப் பாதையில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து காணும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. அதேபோல் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மெரினா பீச் வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை நிறுத்துவதற்காகவும் சிறப்பு ஏற்பாடுகளை சென்னை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் தங்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக மெரினா கடற்கரையை சுற்றி 14 இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி ஃபோர்சோர் சாலை, விக்டோரியா வார்டன் ஹாஸ்டல், கலைஞர் அரங்கம், பிரசிடென்சி கல்லூர், சென்னை பல்கலைக்கழகம், ஆடம்ஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம்.
அதேபோல் எம்ஆர்டிஎஸ் சேப்பாக்கம், லேடி வெலிங்டன் பள்ளி, குயிம் மேரிஸ் மகளிர் கல்லூரி, ஸ்ரீனிவாசபுரம் லூப் சாலை, தலைமைச் செயலகம் எதிரில் உள்ள பிடபியுள்யூடி மைதானம், அண்ணா சத்யா நகர், மருத்துவக் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் தங்களின் கார் மற்றும் இருசக்க வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனால் மெரினா பீச் செல்லும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த வேறு எங்கும் சுற்றித் திரியாமல் போக்குவரத்து போலீசார் ஏற்பாடுகளை செய்துள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு எளிதாக பயணங்களை திட்டமிட முடியும் என்று பார்க்கப்படுகிறது. மாலையில் காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications