இது பெருங்களத்தூரின் பெருந்துயரம்.. இதுக்குமேல தாங்க முடியாது குருநாதா.. சென்னைக்கே மிக அவசரம்
சென்னை: இது பெருங்களத்தூரின் பெருந்துயரம்.. பகலில் மண்டையை பிளக்கும் வெயில், இரவில் சிறுநீர் கூட கழிக்க முடியாது, கழிவறை வசதிகள் இல்லை. சாலைகளிலேயே பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால் அங்கிருந்து பேருந்தில் ஏறும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களத்தூர் பேருந்து நிலையம் இருப்பதால் பேருந்துகள் அதிகப் போக்குவரத்தால் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் நெரிசல் ஏற்பட்டும் வருகிறது.

இந்த சாலையில் ரூ.234 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி, வண்டலூரில் இருந்து தாம்பரம் வருகின்ற மேம்பாலம் பாதையில் ஒரு பகுதி திறக்கப்பட்டுவிட்டது. தற்போது தாம்பரத்தில் இருந்து வண்டலூர் செல்லும் மார்க்கத்தில் மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த மேம்பால பணிகள் காரணமாக அங்கிருந்த நிழற்குடைகள் அகற்றப்பட்டுவிட்டன. இதனால் தற்போது அடிக்கும் கோடை வெயிலில் மக்கள் அங்கு நிற்க முடியாமல் தவிக்கிறார்கள். அரசு பேருந்துகளில் ஏற விரும்பும் பெரும்பாலான பயணிகள் பெருங்களத்தூரில் இருந்து தான் ஏறுகிறார்கள். தனியார் ஆம்னி பேருந்துகளில் ஏறவும் ஒரே இடத்தில் தான் பேருந்துகள் நிற்கின்றன.

அங்கு நிழற்குடையும் இல்லாமல். கழிப்பறை வசதியும் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள் . தற்போதைய நிலையில் அரசு தற்காலிக பேருந்து நிலையத்தை பெருங்களத்தூரில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஏனெனில் இந்த மேம்பால வேலை முடிய இன்னும் பல மாதங்கள் ஆகும். அதனால் பேருந்து நிறுத்தம் அருகே மின்விளக்கு, குடிதண்ணீர், கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் பெருங்களத்தூரில் மட்டுமல்ல, சென்னையில் அதிகப்படியான மக்கள் ஏறும் ஒவ்வொரு பேருந்து நிறுத்தம் அருகேயும் கழிவறை வசதிகளை அரசு உடனே ஏற்படுத்தி தர வேண்டும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஏனெனில் பொதுமக்கள்வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டால் மிக முக்கியமான பேருந்து நிலையங்களை தவிர மற்ற இடங்களில் கழிவறை வசதி இல்லை.
இதனால் மக்கள் சாலையை கழிவறையாக பயன்படுத்தும் நிலை இருக்கிறது. பெண்கள், முதியவர்கள், வயதானவர்கள் நிலை மிக கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. அரசு கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications