'சென்னை பரந்தூரில் புதிதாக விமான நிலையம்' என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்ப திறப்பீங்க? புது தகவல்கள்!
சென்னை: சென்னை பரந்தூரில் அமைய உள்ள புதிய பசுமை விமான நிலையத்தில் என்னென்ன வசதிகள் இருக்கும் என்றும்? எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்றும் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தற்போது பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், புதிதாக சென்னையில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது.
இதற்காக சென்னையில் சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை எந்த இடம் என உறுதி செய்யப்படாமல் இருந்தது.

ராஜ்யசபாவில் கேள்வி
இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து நேற்று ராஜ்யசபாவில் தி.மு.க. எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி எழுப்பினார். இதில் அவர் 'சென்னையில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க திட்டம் இருக்கிறதா? அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுளதா?' என்று கேட்டார். இதற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி வி.கே.சிங் பதில் கூறுகையில், ''புதிய பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு சென்னையில் 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்திருந்த நிலையில் தற்போது இறுதியாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்ற் கூறினார்.

எங்கு அமைகிறது?
இந்த நிலையில், பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான இடம் முடிவு செய்யப்பட்ட நிலையில் அடுத்தக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூர், சென்னை விமான நிலையத்தில் இருந்து 57 கி.மீ. தொலைவில் இருக்கிறது. பரந்தூரில் 4,800 ஏக்கரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்தின் மூலம் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பயனடைவார்கள். பரந்தூர் விமான நிலையத்தின் நுழைவுப்பகுதி சென்னை-பெங்களூரு விரைவுச்சாலையை ஒட்டி வரும் எனத் தெரிகிறது. சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பரந்தூருக்கு கிழக்கே ஸ்ரீபெரும்பதூர் உள்ளது. தெற்கில் காஞ்சிபுரமும் வடக்கில் அரக்கோணமும் உள்ளது. இந்த நகரங்கள் அனைத்தும் 29 கி.மீட்டர் சுற்றளவுக்குள் உள்ளன.

என்னென்ன வசதிகள்?
புதிதாக கட்டப்பட உள்ள இந்த பசுமை விமான நிலையத்தில், 2 இணையான ஓடுபாதைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 2 விமானங்கள் இந்த புதிய விமான நிலையத்தில் டேக் ஆப் செய்ய முடியும். புதிதாக அமைக்கப்படும் இந்த பசுமை விமான நிலையம் சுமார் 4,971 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது. இந்த விமான நிலையமானது தலைநகர் சென்னையில் இருந்து சுமார் 69.7 கி.மீ தொலைவில் உள்ளது. குறிப்பாக சென்னை சென்டிரலில் இருந்து 70 கிமீ தொலைவிலும், தற்போதுள்ள சென்னை பன்னாடு விமான நிலையத்திலிருந்து 59 கி மீ தூரத்திலும் உள்ளது.

எப்போது பயன்பாட்டுக்கு வரும்
பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்திற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியதும் அதன் ஆவண பணிகளுக்கு மட்டுமே 2 ஆண்டுகள் வரை ஆகும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கட்டுமான பணிகள், உள்கட்டமைப்பு பணிகள் தொடங்கி முடிவதற்கு எப்படியும் 4 இல் இருந்து 5 ஆண்டுகள் ஆகும் எனவும் கூறப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில் புதிய விமான நிலையம் எப்போது கட்டி முடிக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு 2030-ம் ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications