கிடுக்கிப்பிடி.. ஓபிஎஸ் கையில் இருக்கும் 4 ஆப்ஷன்கள்.. எதை தொடப் போகிறார்? அது மட்டும் நடந்தா..!
ஓ.பன்னீர்செல்வத்துக்கு இனி அரசியல் ரீதியாக என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பது பற்றி பார்க்கலாம்.
சென்னை : உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு சட்ட ரீதியாக ஒரு வாய்ப்பு உள்ளது. அதையும் விட்டால், அரசியல் ரீதியாக 3 ஆப்ஷன்கள் இருக்கின்றன. அதில் ஓபிஎஸ் எதை தேர்வு செய்யப் போகிறார் என்பது தான் அனைவர் மனதிலும் எழுந்துள்ள பெரிய எதிர்பார்ப்பு.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியிருக்கிறது.
மேலும் ஜூலை 11 பொதுக்குழுவின்போது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் நீக்கமும் உறுதியாகி இருக்கிறது.

அதிமுக வழக்கு
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி மாதம் விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

ஓபிஎஸ்ஸுக்கு ஷாக் கொடுத்த தீர்ப்பு
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதேபோல், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தீர்மானமும் செல்லும் என்றாகியுள்ளது. இதனால், அதிமுகவிலேயே ஓபிஎஸ் இல்லை என்ற நிலை வந்துள்ளது. இது ஓபிஎஸ் அணியினருக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

கடும் நெருக்கடி
உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் காரணமாக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் பெரிய அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளார். கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து வந்த சட்டப் போராட்டத்தில் தற்போது ஒரு பெரிய முட்டுச் சந்தை எதிர்கொண்டுள்ளார் ஓபிஎஸ். இந்த தீர்ப்பால், ஓபிஎஸ் நிலை கேள்விக்குறியாகியுள்ளதால், அவரது ஆதரவாளர்களும் குழம்பிப்போய் உள்ளனர்.

ஓபிஎஸ் முன் உள்ள 4 வாய்ப்புகள்
இந்நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு இன்னும் சில வாய்ப்புகள் மட்டுமே இருக்கின்றன. இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதுவும் எந்த அளவுக்கு ஓபிஸ்ஸுக்கு கை கொடுக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பே மீண்டும் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த சட்ட வழியை விட்டால், ஓபிஎஸ் முன் வேறு என்ன வழிகள் உள்ளன?

சசிகலாவுடன் இணைந்து
அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம், அதிமுக தலைமை அலுவலகம் என அனைத்துமே தற்போது எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுவிட்டதால், அரசியல் ரீதியாக தனது பலத்தை வெகுவாக இழந்துள்ளார் ஓபிஎஸ். எனவே, தனது நிலையைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இணைந்து, சசிகலா துணையுடன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கள அரசியல் ஈடுபடலாம். சசிகலாவை சந்திப்பேன் என ஏற்கனவே பலமுறை கூறியுள்ள ஓபிஎஸ், இந்த தீர்ப்பை தொடர்ந்து, சசிகலாவைச் சந்தித்து, ஒரு பலம் வாய்ந்த அணியை கட்டமைக்க முயற்சிக்கலாம்.

ஈபிஎஸ் தலைமையில்
தன்னை உச்ச நீதிமன்றமும் கைவிட்டுள்ளதால், இனி எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து செயல்படுவது தனக்கு பலவீனத்தையே ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கட்சியைப் பலப்படுத்துகிறோம், பொது எதிரி திமுகவை வெல்வோம் என்ற முழக்கத்துடன் அதிமுகவில் இணைந்து செயல்பட முயற்சிக்கலாம். அதன் மூலம் அதிமுகவில் இணைந்து எடப்பாடி பழனிசாமியின் தலைமைமை கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அதே சமயம், இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் அவசியம் என்பதும் முக்கியம்.

பாஜகவில்
அதிமுக முழுமையாக எடப்பாடி கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதாலும், கட்சியினர் மத்தியிலும் தனது செல்வாக்கு அடிபட்டுப் போனதாலும், இனி அதிமுகவில் தமக்கு எதிர்காலம் இல்லை என்பதால் பாஜகவில் இணையும் முடிவை எடுக்கவும் கூடும். பாஜக முன்னணி தலைவர்களுடன் நல்ல நட்புறவில் இருக்கும் ஓபிஎஸ், பாஜகவில் இணைந்து ராஜ்யசபா எம்.பி, மத்திய அமைச்சர் என்ற நிலைக்குச் செல்லவும் செய்யலாம்.

ஆதரவாளர்கள் நிலைப்பாடு
பொதுக்குழு முடிவுகள் செல்லும் என்ற தீர்ப்பால், ஓபிஎஸ் நீக்கமும் செல்லுபடியாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், ஓபிஎஸ்ஸால் நியமிக்கப்பட்ட அனைத்து நியமனங்களும் செல்லாததாகியுள்ளது. எனவே, ஓபிஎஸ் அணியில் இருக்கும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி அணிக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. கடந்த ஜூன் மாதம் போல, கூண்டோடு நிர்வாகிகள் பலர் ஈபிஎஸ் அணிக்குத் தாவினால், ஓபிஎஸ் நிலை இன்னும் கேள்விக்குறியாகக்கூடும்.












Click it and Unblock the Notifications