எடப்பாடிக்கு "மெகா" வெற்றி.. கோர்ட்டில் சொன்ன "அந்த" பாயிண்ட்.. பொதுக்குழு வழக்கில் வென்றது எப்படி?
சென்னை: அதிமுக ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி வைத்த சில வாதங்கள்தான் அவருக்கு சாதகமாக மாறி உள்ளன,.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராகவும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கிற்கு முன்பாக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்து இருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரமாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வரும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு முன்கூட்டியே மார்ச் 22-ல் விசாரணை செய்யப்படும். 24-ல் தீர்ப்பு வழங்கப்படும், அதுவரை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விசாரணை
இந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை முடிந்த நிலையில் 24ம் தேதிக்கு பதிலாக இன்று 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அதிமுக ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில்தான் எடப்பாடி பழனிசாமி பல அதிரடி வாதங்களை வைத்தார். பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கில் எடப்பாடி பழனிசாமி வைத்த வாதத்தில், பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டால்தான் கட்சியை நடத்த முடியும். லோக்சபா தேர்தல் நெருங்குவதால் ஒற்றை தலைமை அவசியம் ஆகிறது. பொதுச்செயலர் தேர்தல் நடைபெறுவதில் தவறு இல்லை. இதற்கு முன் கட்சி தேர்தல்கள் நடைபெற்ற போது இதேபோல்தான் வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

பொதுச்செயலாளர்
வேட்புமனுக்களை கொடுக்க இதே அளவு கால அவகாசம்தான் கொடுக்கப்பட்டது. கடந்த முறை 2021ல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்கள் நடந்தன. அப்போதும் ஞாயிற்றுக்கிழமைதான் வேட்புமனுக்கள் வாங்கப்பட்டன. அதனால் இப்போது ஞாயிற்றுக்கிழமை வேட்புமனுக்களை வாங்குவதில் தவறு இல்லை. பொதுச்செயலாளர் தேர்தல் சட்டப்படி நடக்கிறது. அதனால் இதை தடை செய்ய கூடாது. எடப்பாடியை எதிர்த்து யாராவது வேட்புமனு தாக்கல் செய்தால் தேர்தலை நடத்த தயாராக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன, என்று எடப்பாடி வாதம் வைத்தார்.

வழக்கு
அதன்பின் நடந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் எடப்பாடி பழனிசாமி வைத்த வாதத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. ஆனால் கடந்த பொதுக்குழுவில் அதை நீக்கிவிட்டோம். அதற்கான அதிகாரம் பொதுக்குழுவிற்கு உள்ளது. பொதுக்குழு மூலம் ஏற்கனவே பொதுச்செயலாளர் பதவியை நீக்கியது போலவேதான் இதையும் நீக்கி உள்ளோம். பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. அதனால் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான தீர்மானங்களும் செல்லும்.

தீர்மானங்கள்
எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும். இந்த பொதுக்குழுவை நாங்கள் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்தோம். அதை உலகமே பார்த்தது. அவர் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த முடிவை எடுத்தார், ஆனால், அந்த நேரத்தில் ஓபிஎஸ் தரப்பினர் இதை பார்த்து இருக்க மாட்டார்கள். அதிமுக தலைமை அலுவலகத்தில் தகராறு செய்து கொண்டிருந்ததால் அவர்கள் டிவி பார்த்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறோம். பொதுக்குழு முடிவுகளே இறுதியானது. அதில் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்துதான் முடிவு செய்துள்ளனர். அதனால் பொதுக்குழு முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும், என்று எடப்பாடி வாதம் வைத்தார்.












Click it and Unblock the Notifications