சொத்தில் சம உரிமை, விதவை மறுமணம்! - திமுக ஆட்சியில் பெண்கள் நலனுக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்ன?
சென்னை: பெண் விடுதலைக்கு இந்திய அளவில் தமிழ்நாடு முன்மாதிரி. அதற்கு முதல் விதையைப் போட்டது திராவிடர் இயக்கம்.
எப்படி என்கிறீர்களா?
ஒரு வரலாற்றுச் சம்பவத்தைப் பார்ப்போம். பிரிட்டிஷ் கால இந்தியாவில் குழந்தை திருமணம் என்பது மாபெரும் பிரச்னையாக இருந்தது. இதனால், இளம் வயதிலேயே பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். விதவைகளின் விகிதாச்சாரம் அதிகரிக்கவே அதுதொடர்பான விவாதம் நாடு முழுவதும் எழுந்தது.

காந்தி எதிர்த்தார்; பெரியார் ஆதரித்தார்
குழந்தைத் திருமண விவகாரம், காந்தியின் காதுக்குச் சென்றது. அவர், 'விதவை மறுமணத்தை ஆதரிக்கலாமா.. வேண்டாமா?' என யோசித்துக் கொண்டிருந்தார். அதை ஏற்க அவரது மனம் எளிதில் சம்மதிக்கவில்லை. ஆனால் 'விதவை மறுமணத்தை' ஆதரித்து அந்தக் காலத்திலேயே தீர்மானம் நிறைவேற்றினார் பெரியார். இது நடந்தது 1929 ஆம் ஆண்டு.
செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் இந்தத் தீமானம் உயிர்பெற்றது. இதற்கு ஒருபடி மேலே சென்ற பெரியார் தமிழ்நாட்டில் நிலவிவந்த தேவதாசி முறையை ஒழிக்க, முத்துலட்சுமி ரெட்டியுடன் கைகோத்து களத்தில் முதல் ஆளாக நின்றார். ஆனால், அன்றைய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சத்தியமூர்த்தி, சட்டப்பேரவையில் மிகக் கடுமையாக தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தை எதிர்த்தார்.
ஆக, காந்தி தயக்கம் காட்டிய விதவை மறுமணத்தை மிகத் தீவிரமாக ஆதரித்தது திராவிட இயக்கம். அதன்பின், 'பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்க வேண்டும்' என்றார் பெரியார். 'ஆண்களைப் போலவே பெண்கள் 'கிராப்' வெட்டிக் கொள்ளலாம்' என்றும் பேசினார். பெண் உரிமை குறித்து வெளியான பெரியாரின், 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற புத்தகம் அன்றைய காங்கிரஸ் தலைவர்களைக் கதிகலங்கச் செய்தது.

திமுக ஏற்படுத்திய பெண்கள் முன்னேற்றம்
பெண்களின் முன்னேற்றத்துக்காக இந்தியா விவாதித்துக் கொண்டிருந்த நேரத்தில், பெண் உரிமையை முதன்முதலாக முன்மொழிந்த மாநிலம் தமிழ்நாடு.
பெரியாருக்கு முன்பே 'ஆணுக்கு பெண்ணிங்கே சரிநிகர் சமானம்' எனப் பாரதி பாடிய காலத்தில், பெண்களுக்குக் கல்வி உரிமை மறுக்கப்பட்டு இருந்தது. 'மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ?' எனப் பாரதிதாசன் பாடிய போதும்கூட, இந்திய அளவில் பெண் உரிமை குறித்து அமைதியே நிலவியது.
இன்றைக்கும்கூட வலதுசாரி கருத்தினை முன்வைப்பவர்கள் 'பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது' என்றே பேசுகின்றனர். இன்றும்கூட இந்தியாவிலுள்ள பல மாநிலங்களுக்குப் பெண் உரிமை சரியாகப் போய்ச் சேரவில்லை.
ஆனால், 'பெண்கள் முன்னேற்றமே நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்' என்ற உயரிய நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேருந்தில் மகளிருக்கு விலையில்லா பயணத் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
முதலமைச்சராக மே 7, 2021 அன்று பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் ஐந்து திட்டங்களில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமானது, 'சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம்' என்ற திட்டம். இது இன்று பலதரப்பட்ட பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அடுத்ததாக, புத்தாண்டுக்கு முன்பாக '181' மகளிர் உதவி மையத்தைத் தொடங்கி வைத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிமொழியேற்றார்.
பெரியார் போட்டுத்தந்த பாதையில் ஆட்சிக்கு வந்த மு.கருணாநிதி, 1998 முதல் 91 வரை முதலமைச்சராக இருந்தபோதுதான் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு என்பது வழங்கப்பட்டது. இதற்கான சட்டமும் 1990 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

குடும்பச் சொத்தில் சம உரிமை
பெண்கள் வெளியே செல்வதையே அதிகம் விரும்பாத ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் இந்த மாற்றம் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இதைத் தொடர்ந்து 1989 ஆம் ஆண்டில் பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் சம உரிமை என்ற சட்ட அங்கீகாரத்தை உண்டாக்கிக் கொடுத்த கையோடு, ஆரம்பப்பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளில் பெண்களை மட்டுமே நியமிக்கவும் மு.கருணாநிதி வழிவகை செய்து கொடுத்தார்.
இதேபோல, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு இந்தியாவிலேயே முதன்முதலாக வழங்கப்பட்டு, அதன்பயனாக 44,143 பெண்கள் உள்ளாட்சி நிர்வாகப் பதவிகளில் வந்து அமர்ந்தனர் என்பது மிக முக்கியமான தகவல்.
'திமுக ஆட்சி என்ன செய்துவிட்டது?' என இன்றைக்கும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இந்த மாற்றங்கள் எல்லாம் அவர்களது ஆட்சிக் காலத்தில்தான் ஏற்பட்டன என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர்.
திராவிட இயக்கங்களின் ஆட்சியில்தான் பெண் விடுதலை என்பது வெறும் விவாதப் பொருளாக இல்லாமல், அதற்கு சட்டரீதியான உரிமைகள் வழங்கப்பட்டன என்பதை இன்றைய இளம் தலைமுறை உணர வேண்டிய செய்தி.

உள்ளாட்சியில் திமுக கொடுத்த 50% ஒதுக்கீடு
அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதியின் ஆட்சியின் நீட்சியாக இன்றைக்கு உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50 சதவீத ஒதுக்கீட்டை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியிருக்கிறார்.
அதேபோல், பெண்களின் மேம்பாட்டுக்காக 1989 ஆம் ஆண்டில் தருமபுரியில் மகளிர் சுய உதவிக் குழு முதன்முதலாக தொடங்கப்பட்டது. 1989 தொடங்கி 91 வரையான காலகட்டப் பகுதியில் காதி மற்றும் கதர் துறையில் மட்டும் 3,31,000 பெண்களுக்கு வேலைகள் வழங்கப்பட்டன. இவர்களில் 1,25,000 பெண்கள் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது வியப்பளிக்கும் புள்ளிவிவரம்.
பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிப்பது மட்டுமே சமூக மேம்பாட்டை உருவாக்காது என்பதால், சிறு வியாபாரம் செய்யும் பெண்களுக்கு தினசரி கடன் தொகையாக ரூ 500 முதல் 5,000 ரூபாய் வரை வழங்கப்பட்டது.
இதனால் படித்து வேலைக்குச் செல்லும் பெண்களைத் தாண்டி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த 1,44,913 பேர் பயன்பெற்றனர். இதற்காக 18 கோடி ரூபாய் நிதி சிறு வணிகக் கடனாக வழங்கப்பட்டது.
இதன் அடுத்தகட்டமாக, மதுரையில் பெண்களே நடத்தும் நியாயவிலைக்கடைகள் 1998 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பெண்களே நிர்வகிக்கும் 230 நியாய விலைக்கடைகள் செயல்படத் தொடங்கின.
கல்வி உரிமை, சொத்துரிமை, தொழில் உரிமை எனப் பல வழிகளில் யோசித்து திட்டங்களைத் தீட்டிய திமுக அரசு, அதன் உச்சவடிவமாக ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டத்தை 1989 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 18 வயது நிரம்பிய, எட்டாம் வகுப்பு படித்த பொது வகுப்பைச் சேர்ந்த பெண்களும், ஐந்தாம் வகுப்பு வரை படித்த பட்டியல் மற்றும் பழங்குடியின பெண்களும் பயன்பெற்றனர்.
இதற்கு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம் எனப் பெயர் வைத்தார். பெரியாருடன் இணைந்து தேவதாசி ஒழிப்புச் சட்டத்துக்காகப் போராடிய திராவிட இயக்க போராளியான இராமாமிர்தம் அம்மையாரின் பெயரைச் சூட்டி வரலாற்றை மீண்டும் நினைவுபடுத்தினார், கருணாநிதி.

ரூ.228 கோடியே 60 லட்சம் நிதி
சமூக நலத்துறை மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின்படி 1991 ஆம் ஆண்டு வரை 34,595 பெண்களுக்கு மொத்தம் 17 கோடியே 30 லட்சம் நிதி உதவி செலவிடப்பட்டது. 1996 ஆம் ஆண்டில் இதற்கானப் பயனாளிகளின் கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு எனவும் உதவித் தொகை ரூபாய் பத்தாயிரம் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.
சுமார் 2,28,593 ஏழை மகளிருக்கு 228 கோடியே 60 லட்ச ரூபாயை இதற்காகச் செலவிட்டனர். அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் நிறுத்தப்பட்டது.
மீண்டும் 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் இத்திட்டம் புத்துயிர் பெற்றது. சுமார் 4,66,756 ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ரூபாய் 880 கோடியே 55 லட்சம் அளவுக்கு நிதி செலவிடப்பட்டது.
தற்போது மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் இத்திட்டத்தை மறுசீரமைப்பு செய்துள்ளார். உயர்கல்வியில் பெண் கல்வியை உறுதி செய்யும் வகையில், 'புதுமைப்பெண்' என்ற பெயரில் இதனை மாற்றியமைத்துள்ளார். இதன்மூலம், உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
1989 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின்கீழ் ஏழை கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து உட்கொள்ளவும், வேலைக்குச் செல்ல முடியாமல் போனால், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பினை சரிக்கட்டவும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
இதன்மூலம் 25,76,612 ஏழை மகளிருக்கு மொத்தம் 1,389 கோடியே 42 லட்ச ரூபாய் செலவிடப்பட்டது. பின்னர், அதிமுக ஆட்சியில் இது 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.
மணப்பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என்ற எல்லையைக் கடந்து விதவைகளின் பக்கம் தனது கவனத்தை திமுக அரசு செலுத்தியது. அதன்பயனாக டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மகளிர் மறுமண நிதி உதவித் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவி திட்டம் ஆகியவை முக்கியமான திட்டங்களாக செயல்வடிவம் பெற்றன.
விதவைப் பெண்களுக்கும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட மகன் இருந்தாலும் முதியோர் உதவித் திட்டத்தின்கீழ் உதவித் தொகை வழங்கி 1988 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.

அரசுப் பதவிகளில் 30% இட ஒதுக்கீடு
50 வயதைக் கடந்து திருமணமாகாமல் வறுமையில் வாடும் 12,940 ஏழைப் பெண்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது. அரசுப் பதவிகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டதும் மு.கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில்தான்.
இதேபோன்று இந்தியாவிலேயே முதன்முறையாக காவல்துறையில் மகளிரை பணிநியமனம் செய்யும் முறை திமுக ஆட்சியில்தான் அமல்படுத்தப்பட்டது. இது 1973 ஆம் ஆண்டில் நடந்தது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டு கிராமப்புற மகளிருக்கு 24 மணிநேர மருத்துவ சேவை அளிக்கும் திட்டத்தையும் மு.கருணாநிதிதான் கொண்டு வந்தார்.
அன்றைக்குத் தமிழ்நாட்டு அரசியலையே உலுக்கியது பெண் சிசுக் கொலை. பத்திரிகைகள் பரவலாக இதை விவாதித்தன. இதைக் கருப்பொருளாக வைத்து பாரதிராஜா 'கருத்தம்மா' என்ற திரைப்படத்தையே எடுத்தார்.
சிசுக் கொலையை அறவே ஒழிக்கும் நோக்கில் தொட்டில் குழந்தை திட்டத்தைக் கொண்டுவர மு.கருணாநிதி முயற்சிகளை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா ஆட்சியில் அது நடைமுறைப்படுத்தப்பட்டது.
2006 திமுக ஆட்சியில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச தரிசு நிலங்கள் வழங்குவதென முடிவு செய்தபோது, அந்த நிலங்களை குடும்பப் பெண்கள் பெயரில் வழங்கி அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.
திருக்கோவில்களில் அறங்காவலர்கள் குழுவில் மகளிர் ஒருவர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற சட்டமும் இவரது ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது.

விமானப் பணிப்பெண் ஆன ஆதிதிராவிடர்
தமிழ்நாடு அரசின் தொழில் மனைகள் ஒதுக்கீட்டில் பெண்களுக்கு 10 சதவீத மனைகளை ஒதுக்கி பெண்களைத் தொழில் முனைவோராக மாற்றும் வகையிலான திட்டம், ஆதிதிராவிட பெண்களுக்கு 1 கோடி ரூபாய் செலவில் விமானப் பணிப்பெண் பயிற்சிக்கான புதிய திட்டம் ஆகியவற்றை தனது ஆட்சிக்காலத்தில் கருணாநிதி செயல்படுத்தினார்.
பட்டப்படிப்பு வரையில் ஏழைப் பெண்கள் கல்வி கற்கும் வகையில், 1989 ஆம் ஆண்டு, 'ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்', வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் அரசுப் பெண் ஊழியர்களுக்கு 270 நாள்கள் குழந்தைப் பராமரிப்பு விடுப்பு எனப் பெண்களை மையமாக வைத்து திமுக செய்தவை ஏராளம்.

உள்ளாட்சிகளில் நிகழ்ந்த மாற்றம்
2021 சட்டமன்றத் தேர்தலின்போது, 'கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையில் 31.03.2021 நிலவரப்படி நிலுவையில் உள்ள ரூ.2,756 கோடி தள்ளுபடி செய்யப்படும்' என திமுக அறிவித்தது.
அதற்கான அரசாணை கடந்த டிசம்பர் 4, 2021 அன்று வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு (2021) டிசம்பர் மாதம் 14 அன்று திருத்தணியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 2,750 கோடி ரூபாய் கடனை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
மகளிர் மேம்பாட்டின் நீட்சியாக மார்ச் 8, 2022 அன்று, 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் குடும்பத் தலைவிகளின் பெயர்களில்தான் இனி வீடுகள் ஒதுக்கப்படும்' என ஸ்டாலின் அறிவித்தார்.
உள்ளாட்சியில் மகளிருக்கு 50% இடங்களை ஒதுக்கியதன் மூலம் கவுன்சிலர் முதல் மேயர் பதவி வரையில் சுமார் 40,000 மகளிர் உள்ளாட்சிகளில் பதவிகளைப் பெற்றனர் என்பது உலகம் மறுக்க முடியாத உண்மை.
-
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு!












Click it and Unblock the Notifications